சனி, 21 பிப்ரவரி, 2009

முஸ்லீம்களுக்கு அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை என்று இடது சாரி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன

'டெல்லியில் வலது கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போத அவர் கூறுகையில் முஸ்லீம் மக்களின் பரிதாப நிலையை சச்சார் கமிட்டி விளக்கமாக தெரிவித்துள்ளது. ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, முஸ்லீம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. முஸ்லீம் மக்களுக்காக 15 அம்ச திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ்அரசு கூறியது.ஆனால் அதையும் நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
மொத்தத்தில் பார்க்கப்போனால் கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லீம் மக்களுக்காக மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார். முஸ்லீம் மக்களுக்கா திடமான நடவடிக்கை எதையும் எடுக்காத வரை வலது கம்யூனிஸ்டு எதையும் நம்பத்தயாரில்லை என்றும் அவர் கூறினார். முஸ்லீம் சமுதாயம் சுரண்டப்படுவதை எதிர்த்து தேசிய இளைஞர் லீக்குடன் இணைந்து இடது சாரி கட்சிகள் போராடவும் தயார் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் தேசிய இளைஞர் லீக் ஏற்பாடு செய்திருந்த ஒரு தர்ணா போராட்டத்தில் ராஜா கலந்து கொண்டார். இதில் இடது கம்யூனிஸ்டு பொலீட் பீரோ உறுப்பினரும் எம்.பி.யுமான சீத்தாராம் எச்சூரியும் கலந்து கொண்டு பேசினார்.

சிறுபான்மை மக்களின் நல்வாழ்விற்காக ரூ. 513 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ள மத்திய அரசு அந்த தொகையில் சிறிதளவு தொகையை மட்டுமே அனுமதித்துள்ளது என்று சீத்தாரம் எச்சூரி குற்றம்சாட்டினார்.

முஸ்லீம் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை இந்த வாக்குறுதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை. சிறுபான்மை மக்களுக்காக தனியாக ஒரு துணை திட்டத்தை அறிவித்தால் மட்டுமே சிறுபான்மை மக்களின் துயரை போக்க முடியும் என்றும் அவர் சொன்னார். இப்பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்றும் சீத்தாராம் எச்சூரி கூறினார்.

நன்றி: தினபூமி

கருத்துகள் இல்லை: