புதன், 16 பிப்ரவரி, 2011

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த பாஜகதான் காரணம்: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் பேட்டி

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த பாஜகதான் காரணம் என்று ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கூறினார். ஸ்ரீநகரில் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் பேட்டியளித்தார்.

முஸ்லிம் வழிபாட்டு தலங்கள், மசூதிகளில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை அவர் பட்டியலிட்டார். முஸ்லிம்கள் ஆயுதங்களை ஏந்த பாஜகவே காரணம் என்றார்.

இந்திய துணைக் கண்டனம் முழுவதும் வன்முறை தீ பரவ வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சி அதிகாரத்தை இழந்ததால் இங்கு அமைதி நிலவக் கூடாது என்று அந்தக் கட்சி விரும்புகிறது என்றார் அவர்.

தேசியவாதிகள் தேச பக்தர்கள் என்று பாஜகவினர் கூறிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் இந்திய விடுதலையில் அவர்களது பங்கு ஏதும் இல்லை. அவர்கள் பிரிட்டிஷாருக்கு காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களாக செயல்பட்டனர் என்றார்.

இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தியை கொன்றவர்கள் அவர்கள்தான் என்றார் அவர்.

காஷ்மீர் மக்களின் அமைதியான போராட்டம் அனுமதிக்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்டம் அமைதிப் போராட்டமாக மாற நாம் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

கடந்த ஆண்டு கோடைகாலத்தில் காஷ்மீரில் நடந்த வன்முறை போராட்டங்களுக்கு போதைபழக்க அடிமைகளே காரணம் என்று ஸ்ரீநகர் போலீஸ் கமிஷனர் கூறியிருப்பதை ஏற்க முடியாது. காஷ்மீர் பிரச்னை 63 ஆண்டுகளாக உள்ளது. 4 தலைமுறைகளாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு போதை அடிமைகளின் போராட்டம் என்று சொல்ல முடியுமா என்று அவர் கேட்டார்.

எகிப்தில் அரசுக்கு எதிரான போராட்டம் பற்றி குறிப்பிட்ட யாசின், எகிப்து நிலைமை வேறு; காஷ்மீர் நிலைமை வேறு. எகிப்தை காஷ்மீருடன் ஒப்பிட முடியாது. எகிப்தில் ராணுவம் தங்களது மக்களை சுட்டுக்கொல்லவில்லை.

ஆனால் எகிப்து மக்களிடம் இருந்து காஷ்மீர் மக்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ளவேண்டும். அது அமைதிப் போராட்டம்தான் என்றார் யாசின்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

முஸ்லிம்கள் சம்மந்த மான மற்றும் நடுநிலையான செய்திகளை தொடர்ந்து வெளி இட்டு கொண்டு இருக்கும் KNR Times பொது செயலாளர் அண்ணன் சாதிக் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்