திங்கள், 21 பிப்ரவரி, 2011

குவைத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை கண்ணீர் குண்டு வீச்சு

குவைத் : எந்நாட்டு குடியுரிமையும் இல்லாத பெடோன்ஸ் என்று சொல்லப்படும் பாலைவன அரபிகள் தங்களுக்கு அடிப்படை உரிமைகள் மற்றும் குடியுரிமை கோரி நடத்திய போராட்டத்தை கலைக்க காவல்துறை கண்ணீர் குண்டு வீசியது. மேலும் குழுமியிருந்த 300 போராட்டக்காரர்களில் சுமார் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.


துனிஷிய புரட்சியின் அதிர்வுகள் ஓயாத நிலையில் அமைதியாக உள்ள குவைத்தில் நடந்த இப்போராடம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜஹ்ராவில் நடை பெற்ற போராட்டத்தை போன்று சுலைபியாவிலும் தங்களுக்கு குடியுரிமை தர கோரி போராட்டம் நடத்தினர். சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறு குடியுரிமை இல்லாமல் வாழ்கின்றனர். குவைத் அரசாங்கமோ இவர்கள் ஈராக் போன்று பிற நாட்டிலிருந்து இங்கு குடியேறியவர்கள் என்று சொல்ல இவர்களோ தாங்கள் குவைத்தின் மண்ணின் மைந்தர்கள் என்றும் நாடு சுதந்திரம் அடைந்த போது தங்கள் முன்னோர்கள் கல்வியறிவு இல்லாமல் குடியுரிமைக்கு பதிவு செய்யவில்லை என்றும் தங்களுக்கு இப்போதாவது குடியுரிமை வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

குவைத்தில் உள்ள பெடோயின்கள் குவைத் குடிமக்களை போல் வசதியாக இல்லாமல் ஏழ்மையில் தான் வாழ்கின்றனர். குவைத்தில் வாடகை டாக்ஸி போன்ற தொழில்கள் மூலமே சொற்ப வருமானத்தை கொண்டு வாழ்கின்றனர். இதற்கிடையில் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு உடனே இப்பிரச்னையில் தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அரசோ குடியுரிமை வழங்கப்படவில்லையே தவிர தேவையான வசதிகள் செய்து தரப்படுவதாக கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: