காதலர்தினம்; ஒரு இஸ்லாமியபார்வை!
பிப்ரவரி 14 அன்று காதலர்தினம் உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்படுகிறது. காதல் என்றால் ஒரு பெண்ணும்-ஆணும் விரும்புவது என்ற ஒன்றுதான் அர்த்தம் என்ற ரீதியில் அர்த்தம் செய்யப்படுகிறது. 'லவ்' என்ற இந்த வார்த்தைக்கு அன்பு, நேசம், காதல் என்ற அர்த்தங்கள் உண்டு. இந்த காதலர்தினம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை முதலில் அறிந்துகொண்டு, இந்த தினம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பார்ப்போம்.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மத "வேலண் டைன்' என்னும் பெயர் கொண்ட ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ரோம் அரசாங்கத்தின் தடை உத்தரவை மீறி ஏராளமான காதலர்களுக்கு ரகசியமான முறையில் திருமணம் செய்து வைத்து காதலை அங்கீகரித்த காரணத்தினால் அவர் பெயரால் "காதலர் தினம்' என கொண்டாடப்படுகிறது.
இதுதான் காதலர்தின வரலாறு.
முதலாவது இது கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது. இஸ்லாம் காட்டித்தராத பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுவதை பற்றி நபி[ஸல்] கூறினார்கள்;
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
"உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 3456
சுப்ஹானல்லாஹ்! இன்றைய முஸ்லிம்களில் சிலர், சமாதானம் என்ற பெயரிலும், விழாக்கள் என்ற பெயரிலும் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி அன்றே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அறிவித்துள்ளதை காண்கிறோம். மேலும் இவ்வாறு பிற மதகலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி நபி[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்து,
யார் பிற சமுதாயக்காலச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்கள் அவர்களை சேர்ந்தவர்கள்.[அஹ்மத்]
காதலர்தினம் கொண்டாடும் முஸ்லிம்கள் இந்த பொன்மொழியை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், இஸ்லாத்தில் ஈகைத்திருநாள், தியாகத்திருநாள் என்ற இரு பெருநாட்களைத்தவிர, வேறு கொண்டாடப்படக்கூடிய நாட்களை யார் உருவாக்கினாலும் அவைகளை முஸ்லிம்கள் புறக்கணிக்கவேண்டும். மாறாக அவைகளை கொண்டாடினால் அவர்கள் அந்தவிசயத்தில் அவர்களை சார்ந்தவர்களே!
மேலும் காதலர் தினம் என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்கள் சொல்லிமாளாது. காதல் என்ற பெயரில் காமம் மட்டும் விஞ்சி நிற்கிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் கூடும் இடம் என்று கூட பார்க்காமல் இவர்கள் அடிக்கும் காமக்கூத்துக்கள், கலாச்சார சீரழிவின் அடையாளமாக உள்ளது. எனவே இத்தகைய கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் கொண்டாட்டங்களை தடுக்க அரசும், சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும். மேலும் முஸ்லிம்கள் நாகரீகம் என்ற பெயரில் இந்த நாசகார சகதியில் விழுந்துவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக