செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்? - தமுமுக

அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி

அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முஸ்லிம் அரங்கில் எழுச்சி!மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராட்டுகள், வாழ்த்துகள் வரும் வேளையில் ஒரு சிலர் விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். பலர் எங்களிடம் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அதற்கான விளக்கங்களை அளிக்கின்றோம்.



கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?


பதில்: சமுதாயத்தின் அரசியல் தலை நிமிர்வுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அதில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. இப்போது 3 தொகுதிகள் குறித்து ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள். அதேசமயம் 90 சதவீதம் பேர் பாராட்டுகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். எனினும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் என்று சிறு கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கும் விளக்கமளிப்பது எமக்கு கடமையாகிறது.

“ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்” என்பதுபோல அந்த சிலர் விமர்சிக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக குழுவுடன் மமக குழு 5 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதில் 12 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 12&ல் இருந்து ஏழு தொகுதிகள் என்ற நிலைக்கு வந்தோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் என்ற நிலையில் இதற்கு மேல் எங்களால் இறங்கி வரமுடியாது என கூறிவிட்டோம். பிப்ரவரி 18&ம் தேதி அதிமுக குழுவிடம் எங்களின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதனாலேயே ஒப்பந்தம் போடுவது ஒத்திப்போய்க் கொண்டிருந்தது. அதிமுக குழு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி மூன்று தொகுதிகள் தான் என்ற எண்ணிக்கையை ஏற்கக் கூறி வேண்டிக் கொண்டிருந்தது. ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.

நாம் கடைசியாக 4 தொகுதிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று உறுதி காட்டினோம். இதனிடையே மமக மல்லுக்கட்டுவது குறித்து நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் செய்தி வெளியிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஜமாஅத்துகள், உலமாக்கள், சமுதாய ஆர்வலர்கள், சமுதாய அறிவுஜீவிகள் என பலதரப்பும் நமக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தனர். போனமுறை திமுகவிடம் மல்லுகட்டியது போல் வேண்டாம். இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற அளவில் சிந்தியுங்கள். கூடுதல் தொகுதிகளை அடுத்தடுத்த தேர்தல்களில் வற்புறுத்துங்கள் என கருத்து தெரிவித்தனர்.

இதே கருத்தை பிப்ரவரி 19 அன்று பல மாவட்ட நிர்வாகிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நம்மிடம் வலியுறுத்தினர். சமுதாயத்திற்காகத்தான், நாம் கட்சி ஆரம்பித்தோம். சமுதாயத்தின் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்காகத்தான் போராடுகிறோம். எந்த சமுதாயத்திற்காகப் போராடுகிறோமோ அந்த சமுதாயத்தின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிறது.

அந்த அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளுடன் அதிமுக தர முன் வந்த மூன்று தொகுதிகளை இப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்றும், மூன்று தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய பிறகு கூடுதல் தொகுதிகள் என்ற லட்சியத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது, விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?


பதில்: நாங்கள் கூடுதல் தொகுதிகளுக்காகப் போராடியது வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இறைவனுக்குத் தெரியும். கடைசியாக நான்கு தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று உறுதிகாட்டினோம். ஆனால் இறைவன் நாடவில்லை. சமுதாயத்தின் தலை நிமிர்வுக்காக நாங்கள் போராடியதற்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம். எங்களை விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?

பதில்: செல்வி ஜெயலலிதாவை சந்தித்தபோது பொதுக்குழுவின் தீர்மானப்படி இடஒதுக்கீடு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளோம். கல்வி முறையில் உருது, அரபி உட்பட சிறுபான்மை மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாராபட்ச போக்கு குறித்தும், திருமண பதிவுச்சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பல்வேறு சமுதாய கோரிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசியுள்ளோம். எல்லாம் நல்லபடியாக நடைபெற அனைவரும் துவா செய்வோம்.

கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..

பதில்: உண்மைதான்! 1991&க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல் கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள் ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான் அனைவரும் போட்டியிட்டார்கள்.

அப்துல்சமது அவர்கள் முஸ்லிம் லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.

ஆனால், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய 2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில்¢மூன்று தொகுதிகளை சொந்தச் சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள¢கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..

பதில்: உண்மைதான். ஆனால் சமுதாயத்தின் தனித்தன்மையும், அரசியல் உரிமைகளும், சுதந்திரப் பேச்சுகளும் முடக்கப்பட்டிருக்கும்.

எந்த பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ அக்கட்சியின் கொறடா அனுமதியில்லாமல், நமது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். கடந்த காலத்தில் காயிதே மில்லத்திற்கு பிறகு பல முஸ்லிம் அமைப்புகள் செய்த தவறுகளை நாமும் செய்ய விரும்பவில்லை.

கூடுதல் தொகுதிகளுக்காகவும், தேர்தல் செலவுகளுக்காகவும் நமது உரிமைகளை முடக்க நாங்கள் விரும்பவில்லை. குறைவான தொகுதிகளாக இருந்தாலும், அவை தனித்தன்மையோடும் தன்மானத்தோடும் இருக்க வேண்டும் என்பதால்தான் மூன்று தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...

பதில்: விபரம் அறிந்தவர்களுக்கு அந்த உண்மை புரியும், போனமுறை அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளைப் பெற்ற வைகோ அவர்களுக்கு இம்முறை 15 தொகுதிகள் பேசப்படுவதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது. 80 தொகுதிகள் கேட்ட விஜயகாந்துக்கு 41 தொகுதிகள் பேசப்படுவதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

முன்பு 2001ல் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட வலுவான கட்சியான புதிய தமிழகத்துக்கு இப்போது அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தேவர் சமுதாயக் கட்சியான: மக்கள் அறிமுகம் கொண்ட, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும், நாடார் சமுதாயப் பின்னணி கொண்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும் புதிய தமிழகத்தின் எண்ணிக்கைகள் தான் பேசப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கிய கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு கூட்டணியிலுமே நான்கு தொகுதிகள்தான் பேசப்படுவதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல, மேற்கண்ட அனைவருக்கும் சொந்தச் சின்னங்களில் போட்டியிட அனுமதி கிடைக்குமா? தெரியவில்லை.

இதையெல்லாம் ஒப்பிடும்போது மமகவுக்கு தமிழகத்தில் மூன்று தொகுதிகள் சொந்தச் சின்னத்தில் அளிக்கப்பட்டிருப்பதும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதும் நல்ல மரியாதையான தொடக்கம் என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...


பதில்: அன்றைய அரசியல் சூழலில், எடுக்கப்பட்ட முடிவு அது. 2004&ல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் 2009&ல் திமுக கூட்டணியில் இல்லை. அவர்கள் விட்டுச் சென்ற 14 தொகுதிகள் உபரியாக இருந்தது.

வட மாவட்டங்களில் மட்டுமே உறுதியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அப்போது இரண்டு தொகுதிகளை கொடுத்து, தமிழகம் முழுக்க செயல்படும் நமக்கு ஒரு தொகுதியை மட்டுமே தருவோம் என்று அரசியல் பாரபட்சத்தை திமுக தலைமை வெளிக்காட்டியது.

அவர்கள் தர முன்வந்த ஒரு தொகுதியை கூட, எங்களுடன் கலந்து பேசி தரவில்லை. நாம் விரும்பிய வேலூரை கவனத்தில் கொள்ளாமல், அவர்களாகவே ராமநாதபுரத்தை முடிவு செய்தார்கள். இரண்டும் நமக்கு பலமானவைதான் என்றாலும், ராமநாதபுரம் அழகிரியின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய தொகுதி.

அந்த நேரத்தில் வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நமக்கும், அழகிரிக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. இது திமுக தலைமைக்கு நன்றாகத் தெரியும்.
ஒருவேளை ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டு இருந்தால், அழகிரியின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு கேட்டதற்காக கூட்டணியில் வைத்தே தங்கபாலுவும், இ.வி.கே.எஸ். இளங்கோவனும் தோற்கடிக்கப்பட்டது போல ‘உள்குத்து’ வேலைதான் நடந்திருக்கும். எது எப்படியோ, கடந்து போன அந்த அரசியல் நிகழ்வுகளை நாம் பெரிதாக்க விரும்பவில்லை. அவற்றை அரசியல் அனுபவங்களில் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறோம்.

இத்தருணத்தில் ஒரு ஹதீஸை இங்கே நினைவூட்டுகிறோம்.

பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் “இப்படிச் செய்திருந்தால்” என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி)

அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)


கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்: அவர்களெல்லாம் யார் என்று சமுதாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தெரியும். சமுதாயத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி சுயநலத்திற்காக செயல்படுபவர்கள்: இயக்கம் ஒன்றை உருவாக்கி தலைமையேற்க தகுதியில்லாதவர்கள் தற்போது செயல்படும் இயக்கங்களை வலுவூட்டி, சமுதாயத்திற்கு நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள்: தங்கள் இயக்கத்தின் சார்பாக அரசியல் கட்சியை உருவாக்க முடியவில்லையே என பொறாமைப்படுபவர்கள்: சொந்தச் சின்னத்தில் ஒரு தொகுதியைக் கூட பெற வழியில்லாதவர்கள்: அடுத்தவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் எதையாவது பரபரப்புக்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள்: & இப்படி இவர்களின் பட்டியல் நீளும்.

அவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், முன்பு நாம் தனித்து நின்றபோது இவர்களெல்லாம் நம்மை ஏன் ஆதரிக்கவில்லை. அப்போது எங்கே தொலைந்தார்கள்?

ஒருவேளை மூன்று தொகுதிகளை வாங்காமல், நாம் வெளியே வந்திருந்தால், கொடுத்ததை ஏன் மறுத்தீர்கள் என விமர்சிப்பார்கள். வாங்கிய பிறகு, மூன்று தொகுதிகளை வாங்கியது ஏன் என விமர்சிப்பார்கள்.

ஒரு நிலைப்பாடு எடுத்து அதில் வெற்றி பெற்றால் ஒரு மாதிரி பேசுவார்கள். தோல்வியடைந்தால் உடனே மாற்றி பேசுவார்கள்.

ஒரு வேளை கூடுதலாக மூன்று தொகுதிகளை பெற்றிருந்தால், அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது போல பேசும் இவர்களெல்லாம்: நாம் சந்தியில் நிற்க வேண்டும் என விரும்பும் நரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய “விமர்சகர்களின்” முகமும், முதுகும் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இவர்களால் எந்த நன்மையும் நமக்கு இல்லை.

நமக்கு சமுதாய மக்களும், இயக்கவாதிகளும்தான் முக்கியம். அவர்களது புரிதல்களும், ஆதரவும், அல்லாஹ்வின் அருளும் இருக்கும்போது நாம் எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

கருத்துகள் இல்லை: