ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ரமலான் நோன்பும், பக்ரீத்தும் மூட நம்பிக்கையா? சோ. ராமசாமிக்கு மறுப்பு!



அரசியல் அரங்கில் காமெடிக்கு ஒரு 'சாமி' என்றால், பத்திரிக்கை துறையிலோ காமெடிக்கு ஒரு 'சோ. ராமசாமி. இவர் ஆரம்பித்த இதழுக்கு முஸ்லிம் மன்னரான முகம்மது பின் துக்ளக் என்பவரின் இறுதி பகுதியை பெயராக சூட்டிய நாள் முதல், சமயம் கிடக்கும் போதெல்லாம் முஸ்லிம்களை சாட்டுவதையே தனது ஊடகப் பணியாக கொண்டிருக்கிறார். இந்நிலையில்,

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, ''விஜயதசமி கொன்டாடுகிறவரின் ஆட்சி வந்தால் மூடநம்பிக்கை பரவி நாட்டு காடாகிவிடும்' என்று பேசியுள்ளார்.

முதல்வரின் விஜயதசமி குறித்த கருத்து சோவை சோர்வடையச் செய்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? விஜயதசமி என்றால் என்ன; அதன் தாத்பரியங்கள் என்ன? எதற்காக விஜயதசமி கொண்டாடப் படுகிறது என்றெலாம் விளக்கி கருணாநிதியை மடக்கியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, 'புருஷன் மேல உள்ள கோபத்த புள்ள மேல காட்டுற பொம்பிளையைப் போல'

''விஜயதசமி கொண்டடுவதுதான் மூடநம்பிக்கையா? ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பது; பக்ரீத் கொண்டாடுவது;கிறிஸ்துமஸ் மற்றும் புனித வெள்ளி அனுஷ்டிப்பது போன்றவை கூட மூடநம்பிக்கைகளா? அந்த நம்பிக்கை உடையவர்கள் யாரவது ஆட்சிக்கு வந்தால் தமிழகம் காடகிவிடாமல் தப்பிக்குமா? இதை முதல்வரால் விளக்கமுடியுமா என்று புலம்பியுள்ளார் சோ''.

இவரின் இந்த வார்த்தைகள் அப்பட்டமான அவரின் மத துவேஷ உணர்வை வெளிக்காட்டுகிறது. மேலும் இவர் குறைந்த பட்சம் விஜயதசமி கொண்டாடுவது மூடநம்பிக்கையல்ல என்று தக்க சான்றுகளுடன் நிறுவிவிட்டு, பின்பு மற்ற மதங்களின் பண்டிகைகள் குறித்து விமர்சித்திருந்தால் கூட இவரை ஓரளவு அறிவாளி என கருதலாம்.

ஆனால் விஜயதசமியை பகுத்தறிவு ரீதியாக நிரூபிக்க இயலாததால், சம்மந்தமில்லாத முஸ்லிம்- கிறிஸ்தவர் மீது விழுந்து பிராண்டுகிறார். கிறிஸ்தவர்கள் பண்டிகை குறித்து அவர்கள் பதிலளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் அவர்களின் உரிமை. ஆனால் சோவால் மூடநம்பிக்கை என அடையாளம் காட்டப்பட்ட ரம்ஜான் நோன்பு மற்றும் பக்ரீத் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் பட்டது முஸ்லிம்கள் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதற்காகவே. இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும். எவ்வாறெனில், நோன்புடைய காலங்களில் பகல் வேளையில் உண்ணுதல்- பருகுதல்- மனைவியுடன் கூடுதல் கூடாது என்கிறது இஸ்லாம்.

நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கிரானே அதுதான் இறையச்சம்! தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறும் இறையச்சம்தானே!


அடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம்! இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா? எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா? எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும்.

இப்படிப்பட்ட பயிற்சியை வழங்கும் இஸ்லாமிய நோன்பு, அசைவம் தவிர்த்து; அரிசிச்சோறு தவிர்த்து அனைத்தையும் வெட்டலாம் என்ற நோன்பை சரிகாணும் சோ வுக்கு மூடநம்பிக்கையாக தெரிவது விந்தைதானே!

அடுத்து பக்ரீத் எனப்படும் தியாகத்திருநாளை மூடநம்பிக்கை என்று எந்த அடிப்படையில் சோ கூறுகிறார் என தெரியவில்லை. ஒருவேளை பக்ரீத் அன்று ஆடு-மாடு- ஒட்டகங்களை குர்பானி கொடுப்பதை வைத்து இப்படி கூறுகிறாரோ என்னவோ. குர்பானி தான் காரணம் என்றால், ஒவ்வொரு கோயில்களிலும் திருவிழாக்களில் பலியிடுவதை குறித்து சோ வின் நிலை என்ன?

மேலும், முஸ்லிம்கள தியாகத் திருநாளின்போது பலியிடும் குர்பானிக்கு பின்னால் ஒரு தியாகம் மறைந்துள்ளது. ஆம்! இறைத்தூதரும், இறைநேசருமான இப்ராஹீம்[அலை] அவர்கள் இறைவனின் கட்டளை எதுவாயினும் அதை அப்படியே நிறைவேற்றும் தியாக உள்ளம் கொண்டவர்கள். அப்படிப்பட்ட இப்ராஹீம் நபியின் வயோதிக காலத்தில் கிடைத்த வாரிசான இஸ்மாயில்[அலை] அவர்களை அறுத்துப் பலியிடுவது போன்ற ஒரு கனவை இப்ராஹீம் நபியவர்களுக்கு வழங்கி சோதித்தான் இறைவன்.

இறைவனின் கட்டளையை இனிதே ஏற்று தன் மகனை அறுத்துப் பலியிட இப்ராஹீம் நபியவர்கள் முன்வந்த போது அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொண்ட இறைவன், மகனை பயிடுவதை தடுத்து நிறுத்தி, ஒரு கால்நடையை பலியிட செய்தான் என்பது இறைவேதம் கூறும் சான்று. அத்தகைய இப்ராஹீம் நபியவர்களின் தியாத்தை நினைவு கூர்ந்து, முஸ்லிம்கள் குர்பானி கொடுத்து அதன் இறைச்சிகளை ஏழைகள்- உறவினர்களுக்கு வழங்கி மகிழ்வுடன் கொண்டாடும் பண்டிகைதான் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாளாகும். இதில் என்ன மூடநம்பிக்கையை கண்டுவிட்டார் திருவாளர் சோ.

மூடநம்பிக்கையில் முத்துக் குளிக்கும் சோ வுக்கு நாம் சொல்லிக்கொள்வது என்னவெனில், மூடநம்பிக்கைகளாக நீங்கள் அடையாளம் காட்டும் இந்த இரு விஷயங்கள் மட்டுமன்றி, இஸ்லாம் குறித்த எந்த விஷயமாயினும் அது குறித்து, நீங்கள் விரும்பினால் நீங்கள் அழைக்கும் நேரத்தில் உங்களோடு திறந்த மனதுடன் கலந்துரையாடுவதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராக உள்ளது என்பதை சொல்லிக்கொள்கிறோம். எனவே உங்கள் மதம் குறித்து விமர்சிக்கப் பட்டால் அது குறித்து விளக்கமளிப்பதை விடுத்து, அடுத்த மதத்தை இழுப்பதை இன்றோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி -முகவை அப்பாஸ்

கருத்துகள் இல்லை: