செவ்வாய், 7 டிசம்பர், 2010

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு-தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

அவர்களுக்கு தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் அபுபக்கர் சித்திக், ரபிக் அகமது, ஹைதர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து, ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீ்ர்ப்பில், இந்த மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டது. ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர் போன்ற வெடி பொருட்களை வாங்கியதாக மூவரும் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒப்புதல் வாக்குமூலம் தவிர, அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக வேறு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: