வியாழன், 30 டிசம்பர், 2010

பெரியப்பட்டணம் படகு விபத்து - பாதிக்கப்பட்டோருக்கு தமுமுக தலைவர் நேரில் ஆறுதல்

E-mail Print PDF

ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டணத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற படகு விபத்தில் மரணமடைந்தோர் வீட்டிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


பெரியப்பட்டணத்தில் இருந்து இரண்டு படகுகளில் அப்பா தீவிற்கு சுற்றுலா சென்றப் போது ஒரு படகு கவிழ்ந்து 15 பேர் மரணமடைந்தார்கள். இப்படகு விபத்து பற்றிய செய்தி கிடைத்தவுடன் தமுமுகவினர் மீட்பு பணியில் இறங்கினார்கள். இவ்விபத்தில் மரணமைடைந்தோரின் குடுமப்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடந்த செவ்வாய் (டிசம்பர் 28) அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகைப் புரிந்தார். முதலில் பரமக்குடிக்குச் சென்ற தமுமுக தலைவர் அங்கு ரயில்வே இப்றாஹீம் மகன் இப்னு வீட்டிற்குச் சென்றார். இப்னுவின் மனைவி பரிதா மற்றும் மகள் நாதிரா ஆகியோர் இவ்விபத்தில் மரணமடைந்தார்கள். பிறகு முத்து முஹம்மது இல்லத்திற்குச் சென்றார். இவரது சகோதரி சல்மா இந்த விபத்தில் மரணமடைந்தார். இவர்களுககு ஆறுதல் கூறிய பிறகு பெரியப்பட்டணம் சென்ற தமுமுக தலைவர் அங்கு மவ்லவி குத்தூஸ் ஆலிம் மற்றும் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்த அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பிறகு பெரியப்பட்டணம் ஜலால் ஜமால் ஜும்ஆ பள்ளியில் ஜமாஅத்தார்கள் அனைவரையும் சந்தித்து படகு விபத்து பற்றிய விபரங்களை கேட்டறிந்தார். இந்த பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஷாகுல் அமீது தலைமையில் மக்கள் விபத்து நடைபெற்ற தினத்தில் தமுமுக செய்த மீடபு பணிகளுக்காக தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பிறகு மஸ்ஜித் அல் பலாஹ் பள்ளிவாசலிலும் ஜமாஅததார்க்ள அதன் தலைவர் சீனத தலைமையில் விபத்து பற்றிய தங்கள் கருத்துகளை பதிவுச் செய்தனர். இவர்களும் தமுமுக செய்த மீட்பு பணிகளை பாராட்டினர்.



பெரியப்பட்டணம் ஊராட்சி மன்றத் தலைவர் அப்துல் ரஹீம், சங்கு குளிப்போர் சங்கத்தினர் உட்பட பல தரப்பினரும் தமுமுக தலைவரை சந்தித்து படகு விபத்து பற்றிய தங்கள் கருத்துகளை பதிவுச் செய்தனர்.

இந்த படகு விபத்தில் சிக்கிக் கொண்டோரின் நெஞ்சை உருகும் பதிவுகள் இச்சந்திப்பின் போது தமுமுக தலைவரிடம் பதிவுச் செய்யபட்டன. அக்பர் அலி அவர்களின் மனைவி தனது நான்கு குழந்தைகளை காப்பாற்றி விட்டு கடைசியில் அவர் மட்டும் உயிர் இழந்த தியாகம் நெஞ்சை பிளந்தது.


தமுமுக தலைவரிடம் கருத்துகளை பதிவுச் செய்த பெரியப்பட்டண வாசிகள் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கை வன்மையாக கண்டித்தனர். பெரியப் பட்டணத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் அனைவரும் முதலில் இறந்தவர்களின் சடலங்கள் எங்கே என்று மட்டுமே கேட்டனர் என்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டியவர்கள் இருக்கின்றார்களா என்றெல்லாம் விசாரிக்கவில்லை என்றும் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். மாவட்ட ஆட்சியர், அமைச்சர் என்றெல்லாம் வந்தார்கள் ஆனால் ஒரு மருத்துவர் கூட வரவில்லை என்றும் அவர்கள் கோபத்துடன் கூறினார்கள். பெரியபட்டணத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்த போதினும் அங்குள்ள மருத்துவர் கூட விபத்தின் போது உதவிக்கு வரவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். சாதாரண நேரத்தில் கூட மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதில்லை என்று புகார் கூறினார்கள்.



பெரியப்பட்டணத்தில் ஆழ்கடலுக்குச் சென்று சங்கு குளிக்கும் கை தேர்ந்த மீனவர்கள் உள்ளனர். இவர்கள் விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன் தன்னார்வமாக சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர். இதே போல் இறந்தவர்களின் உடல்களையும் மீட்டுள்ளனர். ஆனால் விபத்து நடைபெற்று பல மணிநேரம் சென்று அங்கு வந்த கடலோர காவல்படையினர் விபத்தில் சிக்கியோருக்கு எவ்விதத்திலும் உதவி செய்யாமல் மீனவர்கள் மீட்ட உடல் ஒன்றை வலுக்கட்டாயமாக பெற்று தாங்கள் மீட்டது போல் ஊடகங்களுக்கு காட்சி தந்தனர் என்று மீனவர்கள் குமுறினர். சில செய்தி ஊடகங்களும் மீனவர்கள் மற்றும் தமுமுகவினர் செய்த மீட்பு பணிகளை இருட்டடிப்பு செய்து விட்டு கடலோர காவல் படைக்கு செய்யாத சேவைக்கு பாராட்டுதல்களை அளித்ததாக பெரியபட்டணம் மீனவர்கள் கோபத்துடன் தமுமுக தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.


தாங்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்த பலருக்கு மருத்துவர்கள் கரையில் உரிய மருத்து முதலுதவி சிகிச்சை அழுத்தியிருந்தால் பலரது உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்றும் அனைவரும் தமுமுக தலைவரிடம் எடுத்துரைத்தனர். இதற்கு எடுத்துக்காட்டாக இறந்து விட்டார் என்று கருதப்பட்ட ஒரு பெண்மணிக்கு ஆடை மாற்றும் போது வீங்கியிருந்த அவரது வயிறை அழுத்திய போது அவருக்கு மூச்சு திரும்பியதை எடுத்துச் சொன்னார்கள்.

செய்தியாளர் சந்திப்பு

ராமநாதபுரம் வந்த தமுமுக தலைவர் ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டத் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பங்குக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ”சுனாமி எனும் ஆழி பேரலை தமிழகத்தில் பெரும் அழிவை ஏற்படுத்திய அதே தினத்தில் பெரியப்பட்டணம் படகு விபத்து நடைபெற்றுள்ளது. ஆனால் தமிழக அரசு சுனாமியில் இருந்து படிப்பினை பெற்றது போல் தெரியவில்லை. பேரிடர்களை சமாளிக்க அரசு பல கோடி செலவுச் செய்த போதினும் பெரியப்பட்டணம் படகு விபத்தின் போது உடனடியாக மாவட்ட நிர்வாக உரிய பயிற்சிப் பெற்ற மருத்துவர்கள் அடங்கிய மீட்பு குழுவை அனுப்ப முடியவில்லை. தகுந்த மருத்துவர்களால் உடனடியான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க இயலும். பெரியப்பட்டணம் விபத்தில இறந்தோரில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலனவர்கள் ஏழைகள். தமிழக அரசு இவரக்ளுக்கு அளித்துள்ள ரூ ஒரு இலட்சம் இழப்பீடு போதுமானதாக இல்லை. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஒரு பேரூந்து விபத்தில் இறந்த சுரேஷ் என்ற மாணவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் 5 இலட்சம் இழப்பீடு வழங்கினார். ஆனால் பெரியப்பட்டணத்தில் நிர்வாகச் சீர்கேட்டினால் ஏற்பட்ட இந்த விபத்து மற்றும் இறப்பிற்கு பொறுப்பேற்று ரூ5 இலட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசை கோருகின்றோம்.கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் எழை எளிய மக்களுக்கு சேவை செய்வதாக தமிழக அரசு கூறி வருகின்றது. ஆனால் பெரியப்பட்ணம் போல் பல கிரமாங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலைத் தான் உள்ளது. இதன் மூலம் மக்கள் மருததுவ சேவை பெறுவது அரிதாவே கிடைக்கின்றது. இந்த சீர்கேட்டை சரிசெய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தகுந்த மீட்பு மற்றும் மருத்துவ சேவைகளை ஏற்பாடு செய்யாத இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பணிமாற்றம் செய்யப்பட வேண்டும் ” என்று தெரிவித்தார்.



தமுமுக தலைவரின் இப்பயணத்தின் போது ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சலீமுல்லாஹ் கான், தமுமுக மாவட்டச் செயலாளர் சாதிக் பாஷா மமக மாவட்டச் செயலாளர் அன்வர், சவுதி தம்மாம் மண்டல தமுமுக நிர்வாகி மவ்லவி அலாவுதீன் பாகவி, உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் பங்குக் கொண்டார்கள்.

நன்றி : tmmk.in

கருத்துகள் இல்லை: