சனி, 11 டிசம்பர், 2010

மாலேகான் குண்டு வெடிப்பு: 'உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சினார் ஹேமந்த் கர்கரே'-திக்விஜய் சிங்!

டெல்லி: மாலேகான் குண்டு வெடிப்பில் வழக்கில் பெண் சாமியார் பிரக்யா உள்பட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்படுவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு முன், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கர்கரே இவ்வாறு கூறியதாக திக்விஜய் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த கர்கரே மாலேகாவ்ன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து அதில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் பிரசாத் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தார்.

இந்த வழக்குக்குத் தேவையான பல முக்கிய ஆதாரங்களை கர்கரே தலைமையிலான குழு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தேடி சேகரித்து வழக்கை உறுதிப்படுத்தியது. ஆனால், வழக்கு மிக முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில் மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மறைவுக்குப் பின் இந்த வழக்கில் தொய்வு ஏற்படத் தொடங்கியது. தற்போது கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் சாதாரண குற்றவாளிகள் நிலைக்கு மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக திக்விஜய் சிங் இப்போது தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இரவு 7 மணிக்கு கர்கரே என்னை எனது மொபைல் போனில் தொடர்பு கொண்டு கவலையுடன் பேசினார். அப்போது பேசிய கர்கரே, மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. நானும் என் குடும்பத்தினரும் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் உள்ளோம். மலேகாவ்ன் வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்க்கும் தரப்பினரிடமிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது என்றார்.

மேலும் இந்த வழக்கில் அவரது விசாரணை குறித்தும் நேர்மை குறித்தும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியதால் கர்கரே மிகவும மணம் புண்பட்டுப் போயிருந்தார். இதை அவரது குரலை வைத்தே என்னால் உணர முடிந்தது.

அவ்வாறு பேசிய அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மும்பை தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டுவிட்டார்.

இவ்வாறு திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்ற தகவல் வந்தவுடன் இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்கரே, அப்படியே அதை விட்டுவிட்டு ஸ்பாட்டுக்கு ஓடினார். காமா மருத்துவமனைப் பகுதியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தீவிரவாதிகளை எதிர்கொள்ள உள்ளே புகுந்த அவரது நெஞ்சில் தீவிரவாதிகளின் குண்டுகள் பாயந்தன. அதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல்களை திசை திருப்ப காங். முயற்சி-பாஜக கண்டனம்:

திக்விஜய் சி்ங்கின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது பேச்சு துரதிஷ்டவசமானது என்று பாஜக கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு அதை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதி தான் திக்விஜய் சிங்கின் இந்தப் பேச்சு என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

அந்துலேவைத் தொடர்ந்து திக்விஜய்:

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் உண்மையிலேயே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது அவரது மரணத்துக்கு வேறு ஏதும் காரணமா என்று எனக்குத் தெரியவில்லை என்றும், இந்த விஷயத்தில் உண்மை மறைக்கப்படுவதாக நான் உணர்கிறேன் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த ஏ.ஆர்.அந்துலே சந்தேகம் எழுப்பியதும், அதற்க பாஜக உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததும் நினைவுகூறத்தக்கது.

அந்துலேவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பதவி விலக நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: