திங்கள், 6 டிசம்பர், 2010

இந்தியாவில் இருந்து காஸ்ஸாவிற்கு புறப்பட்ட சமாதானக் குழு பாகிஸ்தான் எல்லையில் தடை.


புதுடெல்லி,டிச.5:இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிவரும் காஸ்ஸா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து காஸ்ஸாவிற்கு புறப்பட்ட 50 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய சமாதானக் குழுவினரின் பயணம் தடைப்பட்டுள்ளது.எட்டு நாடுகளின் தரைமார்க்கம் வழியாக பயணித்து காஸ்ஸாவிற்கு செல்வதற்காக புறப்பட்ட அமைதிக் குழுவினர் பாகிஸ்தானிற்குள் செல்ல இயலவில்லை.

பாகிஸ்தான் அரசு அமைதிக் குழுவினரில் 34 பேருக்கு விசா அனுமதித்துள்ளது. ஆனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கடைசி நேர தகிடுதித்தத்தால் அமைதிக் குழுவின் பயணம் தடைப்பட்டுள்ளது.

வாகா எல்லைவரை சென்ற அமைதிக்குழு மீண்டும் டெல்லிக்கு திரும்பியுள்ளது. பயணத்தை தொடர்வது தொடர்பாக டெல்லிக்கு வந்தபிறகு தீர்மானம் எடுக்கப்படும். விசாவின் காலாவதி வருகிற ஏழாம் தேதி முடிவடைவதால் பயணம் ரத்துச் செய்வதற்கான வாய்ப்புள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு ஒன்றும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கூறி வாகா எல்லையில் இக்குழுவினர் தடுக்கப்பட்டுள்ளனர். பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆஜராக்கி அனுமதி பெற்றபின்னரே இக்குழு பயணத்தை துவக்கியது.

இஸ்ரேலின் தலையீட்டால்தான் எல்லாவித அனுமதி வழங்கப்பட்ட பிறகும் கடைநேரத்தில் பயணம் தலைப்பட்டது என அமைதிக் குழுவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து மற்றும் பொருட்களுடன் இப்பயணத்தை அவர்கள் துவக்கியிருந்தனர். ராஜ்காட்டில் காந்தி சமாதியிலிருந்து துவங்கிய இந்த பயணத்தை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மணிசங்கர் அய்யர் துவக்கி வைத்திருந்தார்.

பாகிஸ்தான் வழியாக சென்று ஈரான், துருக்கி, சிரியா, ஜோர்டான், லெபனான், எகிப்து ஆகிய எட்டு நாடுகளின் தரைவழியாக பயணித்து காஸ்ஸாவிற்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக வாகா எல்லை வழியாக லாகூருக்கு சென்றபிறகு கராச்சி, குவாட்டா, பலுசிஸ்தான் ஆகிய இடங்கள் வழியாக ஈரானிற்குள் செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: