ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ராடியா புதிய டேப் வெளியானது: ராசா- ரத்தன் டாடா ரகசிய பேரம் அம்பலம்

சென்னை : தொழிலதிபர் ரத்தன் டாடா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா இடையே நடைபெற்ற ரகசிய பேரத்தை அம்பலப்படுத்தும் நீரா ராடியாவின் புதிய டேப் வெளியாகி உள்ளது.

புதிய டேப் விவரங்களை "அவுட்லுக்' இதழ் சனிக்கிழமை வெளியிட்டது. டாடா- ராடியா: நீதிபதி ரகுபதியை நிர்பந்தித்த விவகாரத்தில் ஆ. ராசாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படுமோ என்பது குறித்து ரத்தன் டாடாவும், நீரா ராடியாவும் தொலைபேசியில் பேசியது டேப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ராசா சர்ச்சையில் சிக்கியிருப்பது குறித்து ரத்தன் டாடா, நீரா ராடியாவிடம் கேள்வி எழுப்புகிறார்.

இதற்குப் பதிலளிக்கும் நீரா ராடியா, நீதிபதியிடம் ராசா பேசவில்லை, பார் கவுன்சில் தலைவர்தான் அவரது பெயரைப் பயன்படுத்தியுள்ளார், அதனை நீதிபதி ஏற்கவில்லை, இதனால் ராசாவின் பதவிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதாக உறுதியளிக்கிறார்.
ஆர்.கே.சண்டோலியா- ராடியா: ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியாவிடம், நீரா ராடியா பேசியது மற்றொரு டேப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரில் டாடா நிறுவன உதவியுடன் | 9 கோடி செலவில் மருத்துவமனை அமைப்பது குறித்து அந்த உரையாடலில் பேசப்படுகிறது.

ஆர்.கே.சண்டோலியாவிடம் பேசும் நீரா ராடியா, பெரம்பலூரில் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக டாடா சன்ஸ் நிறுவன இயக்குநர் கிருஷ்ணகுமாரிடம் பேசி விட்டேன், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்துள்ளார் என்று கூறுகிறார். ராடியாவின் தொலைபேசி அழைப்பை ராசா எதிர்பார்த்து காத்திருப்பதாக ஆர்.கே. சண்டோலியா தெரிவிக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் டாடா டெலிகாம் நிறுவனத்துக்கு சாதகமாகச் செயல்பட நீரா ராடியா இரு தரப்பிலும் பேரம் பேசியிருப்பது புதிய டேப் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: