சனி, 29 ஜனவரி, 2011

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் - உளவுத்துறை, பாதுகாப்புத்துறை ஏஜன்சிகள் - தொடர்புகள் குறித்து விசாரணை தேவை - கருத்தரங்கில் கோரிக்கை

புதுடெல்லி,ஜன.29:பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் ஒருங்கிணைந்து டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தின. இக்கருத்தரங்கில் குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் தொடர்புகள் வெளியான சூழலில் இந்தியாவில் பாதுகாப்பு ஏஜன்சிகள், உளவுத்துறை ஏஜன்சிகள் ஆகியவற்றில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஆதிக்கத்திற்கான காரணம் என்ன என்பதுக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

குண்டுவெடிப்புகளில் இதுவரை பாதுகாப்பு ஏஜன்சிகள் விசாரணையை திசைதிருப்பிக் கொண்டிருந்தன என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இச்சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், சி.பி.எம்.பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகிய அரசியல் பிரமுகர்களும், பிரபல மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்ற இக்கருத்தரங்கில் இத்தகையதொரு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம்களைக் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

சிறையிலடைக்கப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளைக் குறித்தும் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், அபினவ்பாரத், வி.ஹெச்.பி, பா.ஜ.க, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளுடன் உளவுத்துறை, பாதுகாப்பு ஏஜன்சிகள், போலீஸ் அதிகாரிகள், அதிகாரவர்க்கத்தினர், ராணுவத்தினர் ஆகியோருக்கான தொடர்புகளைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அப்பாவிகள் அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

மேலும் அவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களைக் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் இவர்களுக்கு அரசியல் ரீதியாக, தார்மீக ரீதியாக ஆதரவளிப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்.

பயங்கரவாத வழக்குகளில் நிரபராதிகளை சிக்கவைத்து சித்திரவதைச் செய்து அவர்களை நிர்பந்தப்படுத்தி பொய் வாக்குமூலங்களை வாங்கிய அனைத்து போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இவர்களுக்கு வழங்கிய பதவிகளையும், பதக்கங்களையும் பறிக்கவேண்டும்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் விடுதலைச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து கேள்வி எழுப்பும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

பொய்வழக்குகள் சுமத்தப்பட்டதால் மனோரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மாநில அரசுகள் மன்னிப்புக் கோரவேண்டும்.

பயங்கரவாத வழக்குகளில் ஆஜராகமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றிய பார் கவுன்சில் நடவடிக்கையை இக்கருத்தரங்கு கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கெதிராக பொய்ச் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் பங்கினையும் இக்கருத்தரங்கம் கண்டிக்கிறது.

புலனாய்வு ஏஜன்சிகள் ஆதாரங்கள் என போலியாக முன்வைக்கும் காரியங்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடக் கூடாது என ஊடகங்களை இக்கருத்தரங்கம் வேண்டிக் கொள்கிறது.

இக்கருத்தரங்கில் அமீத் சென் குப்தா, ஆஷிஷ் கேதான், சித்தரஞ்சன் சிங், ஃபராஹ் நக்வி, இஃப்திகார் கிலானி, பிரசாந்த் பூஷன், சத்ய சிவராம், சீமா முஸ்தஃபா, சுபாஷ் கட்டாடே, சுரேஷ் கைர்னார், தருண் தேஜ்பால், பிருந்தா க்ரோவர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: