சென்னை: தமிழக சட்டசபைக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரம் பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரம் பேர் ஆவர்.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையி்ல்,
கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.
பின்னர் நடந்த திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட 13.02 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 11.52 லட்சம் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்டன.
வாக்காளர்களின் இடப் பெயர்ச்சி, இறப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளரின் பெயர் தவறாக பல்வேறு இடங்களில் இடம் பெற்றிருப்பது போன்ற காரணங்களால் 1.06 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இறுதியாக 10.5 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் இப்போது 4 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரம் பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரம் பேர்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் ர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு ஜனவரி 25ம் தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் விழாக்களில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
பொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றதா என்பதை மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களிலும், மற்ற பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றார்.
தமிழக மக்கள் தொகை 6.64 கோடியாகும். இதில் 4.59 கோடி பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநில மக்கள் தொகையில் சுமார் 71 சதவீதம் பேர் வாக்களர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி இடைத்தேர்தலில் 65% வாக்குப்பதிவு:
இந் நிலையில் தமிழகத்தில் பல்வேறு உள்ளாட்சிகளில் நேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையாளர் சையது முனீர் ஹோடா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ளாட்சிகளில் 31.10.2010 வரை ஏற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்கான இடைத் தேர்தல்கள் நேற்று நடைபெற்றன. ஊரக உள்ளாட்சிகளில் 114 காலி இடங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 22 காலி இடங்களுக்கும் இந்த தேர்தல் நடத்தப்பட்டது.
வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சிகளில் 65 சதவீதமும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 69 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.
இரண்டும் சேர்த்து சராசரி வாக்குப்பதிவு 65 சதவீதம் ஆகும். ஈரோடு மாநகராட்சி 5வது வார்டில் 80 சதவீத வாக்குகள் பதிவாயின.
வாக்கு எண்ணிக்கை நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கும். ஊரக உள்ளாட்சிகளில் 89 மையங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 22 இடங்களிலும் வாக்குகள் எண்ணப்படும் என்று கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக