திங்கள், 31 ஜனவரி, 2011

இந்துத்துவா தீவிரவாதிகளையும் தோலுரிக்குமா தினமலர்..?




லகில் வாழும் மானுடர்களில், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த மொழியுடையவராயினும், எந்த மதத்தையுடையவராயினும் அவர்களில் நல்லவர்கள்- கெட்டவர்கள் என்று இரு பிரிவினர் இருப்பது போன்று, எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த நாட்டில் தீவிரவாதிகள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அந்த அடிப்படையில் பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் இருக்கலாம்; இருப்பார்கள். ஆனால், ''சோறு திங்கலன்னா பூச்சாண்டியிடம் புடுச்சு குடுத்துருவேன்' என்று குழந்தைகளுக்கு பயம் காட்டும் தாய்மார்களைப் போல் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக காட்டுவதில் ஊடகங்களுக்கு அதிலும் குறிப்பாக தினமலருக்கு என்னதான் ஆனந்தமோ தெரியவில்லை. அந்த பத்திரிக்கையில் 'டவுட் தனபாலு' என்ற பகுதியில்,


மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா: பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. டில்லி வந்தடையும் வெங்காயத்தை உடனடியாக பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: என்னது...? பாகிஸ்தான்ல இருந்து வெங்காயமா...? ஊம்... அந்த நாட்டு பயங்கரவாதிகள் தோலைத் தான் உரிக்க முடியலை... அவங்க வெங்காயத் தோலையாவது உரிப்போம்...! (அப்பவும் நமக்குத் தான் கண்ணீர் வரும்.)


என்று வெளியிட்டுள்ளது தினமலர்.
இதன் மூலம் பாகிஸ்தானில் மட்டும்தான் தீவிரவாதிகள் இருப்பது போன்றும், அவர்களின் தோலை உரிக்கமுடியவில்லையே என்று ஆதங்கப்படுவது போன்றும் காட்டுகிறது தினமலர். மேலும் அவங்க வெங்காயத் தோலை உரிச்சாலும் நமக்குத் தான் கண்ணீர் வரும் என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பையும் சொல்கிறது தினமலர். அவங்க வெங்காயத்த மட்டுமல்ல எவங்க வெங்காயத்த உரிச்சாலும், உரிக்கிரவனுக்குத் தான் கண்ணீர் வரும் என்பது கூட தினமலருக்கு தெரியவில்லையா?
மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தோலை உரிப்பதற்கு முன்னால், உண்மையில் தீவிரவாதிகளின் தோலை உரிப்பதுதான் தினமலரின் நோக்கம் என்றால், முதலில் நமக்கு பக்கத்தில் இருக்கும் தீவிரவாதிகளின் தோலை உரிக்க தினமலர் தயாரா?
  • பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் தினமலரின் பார்வைக்கு தீவிரவாதிகள் இல்லையா?
  • அதற்கு முன்னால் 'ரத யாத்திரை' என்ற பெயரில் நாடெங்கும் 'ரத்த யாத்திரை' நடத்தியவர்கள் தினமலரின் பார்வைக்கு தீவிரவாதிகள் இல்லையா?
  • குஜராத்-மும்பை-கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களின் ரத்த ஆற்றை ஓட்டியவர்கள் தினமலர் பார்வையில் தீவிரவாதிகள் இல்லையா?
  • அஜ்மீர் தர்கா- மெக்கா மஸ்ஜித்- சம்ஜாதா எக்பிரஸ்- அஹமதாபாத்- ஜெய்ப்பூர்- மாலேகான்- நந்தேட்- தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்க செய்தவர்கள் தினமலரின் பார்வையில் தீவிரவாதிகள் இல்லையா?
இவர்களின் தோலை உரிக்கவேண்டும் என்று என்றாவது தினமலர் நினைத்ததுண்டா? இல்லை. காரணம் 'நம்மவா' என்பதுதானே! இவ்வாறு நாம் எழுதுவதால் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமல்ல. பாகிஸ்தானாக இருந்தாலும், எவராக இருந்தாலும் தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டிய விஷயம் என்பதில் கடுகளவும் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் எல்லைதாண்டி வந்து கார்கில் போர் மற்றும் மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களை செய்யும் அளவுக்கு பாகிஸ்தானுக்கு வழியை திறந்து விட்டது யார்? நாட்டின் மொத்த வருமனாத்தில் 60 சதவிகிதத்திற்கு மேல் செலவு செய்து பராமரிக்கபப்டும் ராணுவம், காஷ்மீரில் காட்டும் கடுமையை, கவனத்தை, பாகிஸ்தான் எல்லையில் காட்டியிருந்தால் எல்லைதாண்டி பயங்கரவாதம் நுழையமுடியுமா என்பதையும் சிந்திக்கவேண்டும்.
எனவே தினமலர் போன்ற ஜனரஞ்சக ஊடகங்கள், குற்றங்களை செய்பவர்களை அடையாளம் காட்டும் விஷயத்தில் நாடு-மதம் கடந்த பார்வையை செலுத்தவேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் வேண்டுகோளாகும்.

முகவை அப்பாஸ்

கருத்துகள் இல்லை: