சனி, 29 ஜனவரி, 2011

ஜஹான் என்கவுண்டர் ஒரு திட்டமிட்ட நாடகம்-குஜராத் போலீஸ் அதிகாரி


அகமதாபாத்: அகமதாபாத் அருகே இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் சதீஷ் வர்மா.

கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி அகமதாபாத் அருகே இஷ்ரத் ஜஹானும், 3 இளைஞர்களும் போலீஸரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டுக் கொன்றது அப்போதைய அகமதாபாத் குற்றப் பிரிவு டிஐஜி வன்சாரா தலைமையிலான குழு. இவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்றும், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் திட்டத்துடன் ஊடுறுவினர் என்றும். அவர்களை வழிமறித்தபோது தாக்குதலில் ஈடுபட முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் குஜராத் காவல்துறை அப்போது தெரிவித்தது.

ஆனால் இது அப்பட்டமான போலி என்கவுண்டர் என்பது பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இஷ்ரத்தின் தாயார் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைத்தது உச்சநீதிமன்றம்.

இந்த நிலையில், இஷ்ரத் ஜஹான் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் சதீஷ் வர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வர்மா ஒரு அபிடவிட்டைத் தாக்கல் செய்துள்ளார். அதில், இஷ்ரத் ஜெஹான் என்கவண்டர் ஒரு திட்டமிட்ட சம்பவம். இயற்கையாக நடந்ததில்லை. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுப் படை ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்தது.

இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சியில் டெல்லியைச் சேர்ந்த ஒரு முக்கிய காவல்துறை அதிகாரி தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று வர்மா தெரிவித்துள்ளார்.

வர்மாவின் இந்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: