வியாழன், 27 ஜனவரி, 2011

போராளி பழனி பாபா ஒரு பார்வை!





ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைக்காக தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பழனி பாபா ஜனவரி 28(28.1.1997) சங்கபரிவார வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள்.

-காஞ்சி ஜைனுல் ஆபிதீன்

மாநில மாணவரணி செயலாளர்.தமுமுக

பழனி அருகே புது ஆயக்குடி எனும் கிராமத்தில் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்து தம் சிறந்த ஆங்கில அறிவாலும் நாவன்மையாலும் பல அரசியல் கட்சி தலைவர்களின்,முக்கிய பிரமுககர்களின் நட்பை பெற்றவர் பாபா.முதலில் எம்ஜிஆருக்கு ஆதரவாகவும் பின்னர் கருணாநிதிக்கு ஆதரவாகவும் அரசியல் பணியாற்றினார். பின்னர் பாமகவின் ராமதாசுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து பாமகவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றார்.வன்னியர் கட்சியான பாமகவை அணைத்து மக்களுக்குமான கட்சியாக ஜனரஞ்சகமாக்கிய பெருமை பாபாவுக்கே உரியது.ஜிஹாத் கமிட்டி என்ற பெயரில் ஒரு அமைப்பையும் உருவாக்கினர்.

முஸ்லிம் சமுக இளைஞர்களிடத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கு வேறு எந்த தலைவருக்கும் இருந்ததில்லை.பார்பன அதிகார வர்க்கத்துக்கும் முஸ்லிம்களை ஏமாற்றி வந்த அரசியல் கட்சிகளுக்கும் தனது சட்ட அறிவின் மூலமும் பேச்சாற்றல் மூலமும் தகுந்த பதிலடி கொடுத்து வந்த பாபா சங்க பரிவார பாசிஸ்டுகளுக்கு சிம்ம சொப்பனமாகவே விளங்கினார்.

தமிழகத்தில் பட்டி தொட்டி முதல் மாநகர் வரை அவர் பேசாத இடம் இல்லை.கேரளா,மும்பை உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கை,சிங்கபூர்,மலேசியா என பல நாடுகளிலும் சுற்றுபயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளை பேசினார். இன்றைக்கு பெரும்(?) செல்வாக்குள்ள முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் பேச பயந்த விசயங்களை அன்றைக்கு பொது மேடைகளிலேயே போட்டு உடைத்தவர் பாபா.முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது இழைத்தவன் சாதாரண கான்ஸ்டபிளாக இருந்தாலும் எஸ்.பியாக இருந்தாலும் எவ்வளவு பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும் துணிந்து அவர்களின் முகமூடியை கிழிக்க அவர் என்றும் தயங்கியதே இல்லை.

இன்றைக்கு முஸ்லிம் சமூக தலைவர்கள் தங்கள் அறைகளில் பேச தயங்கும் பல விசயங்களை பொது மேடைகளில் நார் நாராய் கிழித்தவர் அவர்.அதனால் அதிகார வர்க்கத்தின் ஆளும் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார்.கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என அனைவருமே பாபாவின் துணிச்சலான கருத்துகளுக்காகவும் முஸ்லிம் விரோத போக்கினாலும் அவரை பலமுறை சிறையில் அடைத்தனர்.

ஆர் எஸ் எஸ் ,இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் முஸ்லிம் விரோத போக்கை ஆசிர்வதித்தும் கண்டும் காணாமலும் இருந்த அன்றைய காவல்துறையையும் அரசியல்வாதிகளையும் தனது நெருப்பு பேச்சால் சுட்டெரித்தார்.இதனால் முஸ்லிம் சமூகம் சிந்தனை பெற்றதோ இல்லையோ முஸ்லிம் இளைஞர்கள் கொதித்து எழுந்தனர்.

சங்பரிவாரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் இளைஞர்களால் உடனடி பதில் அளிக்கப்பட்டது.இதனால் அடங்கி,பயந்து போன பாசிச கும்பல் அதிகார வர்க்கத்தின் துணையை நாடியது.இதனால் பல முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.சிறையில் அடைக்கப்பட்ட பலருக்கு சட்ட உதவிகள் செய்தார் பழனி பாபா.ஒரு கட்டத்தில் பொய் வழக்குகள் பாபா மீதே பாய ஆரம்பித்தன.அனைத்தையும் எதிர் கொண்டார்.

முஸ்லிம் தலைவர்கள் இன்றும் கூட சிறைக்கஞ்சி பதுங்கும் நேரத்தில் சிறைக்கு போவதை பெருமையாகவே நினைத்தார் பாபா.சமுதாய இளைஞர்களுக்கு சிறையின் மேல் இருந்த பயத்தை போக்கினார்.போராளிகளின் புகலிடம் சிறைசாலை என்று போதித்தார்.ஆனால் பாபா முஸ்லிம் இளைஞர்களை வழி கெடுக்கிறார் என்று தூற்றினர் சில சிறைக்கஞ்சா(?) தலைவர்கள். அதையும் மீறி இளைஞர்களின் பேராதரவோடு களப்பணி ஆற்றினார்.

சங்பரிவார் அமைப்புகளின் எதிர்ப்புக்கிடையில் பல தாழ்த்தப்பட்ட மக்களின் இஸ்லாமிய தழுவலுக்கு வழி வகுத்தார் பாபா.இஸ்லாம் ஒன்றே சாதிய ஒடுக்குமுறைக்கு தீர்வு என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழி காட்டினர்.அதனால் பல தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் இஸ்லாமிய நெறி ஏற்றிட உதவி செய்தார்.இஸ்லாமிய தாவா மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்தில் புரயோடிபோயிருந்த வரதட்சணை,வட்டி போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.சந்தன கூடு,சமாதி வழிபாடு என்று தறிகெட்ட முஸ்லிம்களுக்கும் சவுக்கடி கொடுத்தார் பாபா.

இதனால் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரின் கோபத்தை சம்பாதித்தார்.அதற்கெல்லாம் அஞ்சாமல் தனது கருத்துகளை ஜமாத்தார்கள் முன்னிலையிலேயே எடுத்து வைத்தார்.பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் நட்புறவு பேணி முஸ்லிம் மற்றும் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக்கு வழி வகுத்தார்.பல மனித உரிமை போராளிகளோடு இணைந்து போராட்ட களங்கள் கண்டார்.பேரா.கல்யாணி,டாக்டர் சேப்பன் போன்றவர்களோடும் PUCL போன்ற மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து உரிமைகள் மறுக்கபட்டோருக்கு உதவி செய்தார்.

அரசியல்,சமூக பணிகளோடு இஸ்லாமிய மார்க்க விளக்கத்திலும் சிறந்த அறிவு பெற்றிருந்தார் பாபா.பல இஸ்லாமிய கொள்கை விளக்க கூட்டங்களில் பேசினார்.சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் தனது இஸ்லாமிய கருத்துகளை எடுத்து வைத்தார்.கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார்.பைபிள் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பாக அவர் கேட்ட அறிவு ரீதியான கேள்விகளுக்கு கிருஸ்தவ பாதிரிமார்களால் பதில் அளிக்கவே முடியவில்லை .அவரின் பைபிள் ஒரு ஆய்வு கிருஸ்தவத்திலும் பைபிளிலும் பாபாவுக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்திய நூல்.ராமகோபலய்யருக்கு மறுப்பு நூலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த புத்தகம் எழுதிய பாபா கைது செய்யப்பட்டது அன்றைக்கு அரசுகள் முஸ்லிம்கள் மீது நடத்திய அடக்கு முறைக்கு ஒரு சான்று.தான் நூல்கள் எழுதியது மட்டுமல்லாமல் இஸ்லாம் குறித்து மற்ற அறிஞர்கள் எழுதிய நூல்களுக்கும் உதவி செய்தார் பாபா.பேரா.மார்க்ஸ் எழுதிய முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுகதைகள் என்ற புத்தகம் வெளியிட நிதியுதவி அளித்தார்.பாபரி மஸ்ஜித் தொடர்பாக WHO IS LAW ABIDING ON THE ISSUE OF BABRI MASJID?என்ற புத்தகம் தவிர ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார் பாபா.

நூல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் துவக்கினர் பாபா. புனிதபோராளி பத்திரிக்கை மூலம் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார்.முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை புனித போராளி மூலம் அம்பலபடுத்தினார்.பத்திரிக்கை,நூல்கள்,மேடைபேச்சு,அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு,இஸ்லாமிய பிரச்சாரம் என பல துறைகளிலும் சளைக்காமல் பணியாற்றிய பாபா சங்பரிவார்களின் கழுகு பார்வைக்கு உறுத்தலாகவே இருந்தார்.

முஸ்லிம் சமுதாய அமைப்புகள் சில பாபாவுக்கு எதிராக கழுத்தறுப்பு வேலைகள் பார்த்தாலும் அவதூறுகள் பேசினாலும் தனது பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தினார் பாபா.

ஆரவாரமான மேடை பேச்சுக்களை விட்டு அமைதியான முறையில் ஆக்கபூர்வமான வேலைகளை கவனிக்க திட்டமிட்ட பாபா முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தார்.தமிழகம் முழுவதும் ஜமாத்துகளை சந்திக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.இந்நிலையில் பொள்ளாச்சியில் தனது குடும்ப நண்பர் பசவராஜ் தனபால் என்பவர் வீட்டுக்கு வந்த பாபா அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் நின்ற தனது ஜீப்பில் ஏற முற்படும்போது R.S.S பாசிச பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார்.பல மேடைகளில் தான் இஸ்லாமிய எதிரிகளால் கொல்லப்பட்டு ஷஹித் ஆக்கபடுவேன் என்றும் அதைதான் தான் விரும்புவதாகவும் கூறி வந்த பாபா ஷஹித் அந்தஸ்தை அடைந்தார்.

பாபா கொல்லப்பட்ட செய்தி அறிந்து தமிழகமே அதிர்ந்தது.பல ஊர்களில் கடையடைப்பு,கல்லெறி சம்பவங்கள் நடந்தன.ஆயிரக்கணக்கான ஜிஹாத் கமிட்டி தொண்டர்கள்,முஸ்லிம் பொது மக்கள் புடை சூழ கொண்டு வரப்பட்ட பாபா உடல் புது ஆயக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாபா வின் உடலை கூறு போட்ட பாசிஸ்டுகளால் அவரின் கொள்கை முழக்கத்தை தடுக்க முடியவில்லை.இன்னும் ஒலி மற்றும் ஒளி பேழை வழியாக முஸ்லிம்கள் இருக்கும் இடமெல்லாம் ஒலித்து கொண்டே இருக்கிறது பாபாவின் குரல்.பாபாவின் முகத்தை கூட பார்க்காமல் அவரின் பேச்சுகளை கேட்டே சமுதாய சேவைக்கு வந்த இளைஞர்கள் பலர்.அவர்களில் ஒருவனாக பாபாவின் நினைவு நாளில் இந்த கட்டுரையை அவருக்கு சமர்பிக்கிறேன்.எல்லாம் வல்ல இறைவன் அவரின் செயல்களுக்கு நற்கூலி வழங்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக.ஆமின்.

நன்றி:தமிழ் முஸ்லிம் தளம்.

கருத்துகள் இல்லை: