இப்பதிவு ஒரு Long Read ஆகும். பொறுமையாக நேரம் ஒதுக்கிப் படிக்கவும், இல்லையாயின் புக்மார்க் செய்துவிட்டு நேரம் கிடைக்கும் போதுப் படிக்கவும்.
1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது திருக்கூரானைக் கற்றிராத, ஒரு முஸ்லிமாக வாழாத ஜின்னா, இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்ந்த இந்தியாவின் ஒருபகுதியை (பாகிஸ்தான்) தனிநாடாக பிரித்துச்சென்றார். இதனால் இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக கருதப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களால் பள்ளிக்கூடங்கள் துவங்கப்பட்டன. அவர்களுடைய பள்ளிகளில் படித்தால் தங்கள் பிள்ளைகள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்படுவார்களெனப் பயந்த முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் கல்வி கற்க அனுப்பவில்லை. இதற்குபதிலாக தங்கள் பிள்ளைகளுக்கு மதராஸாக்களை நிறுவினர். இங்கு அரபியும் திருக்கூர்ஆனும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதனால் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முஸ்லிம்கள் அரசு வேலைகளில் அமர முடியவில்லை. ஏனெனில் அவர்கள் அவர்களுடைய வேதத்தைப்பற்றிய கல்வியை மட்டுமே அறிந்திருந்தனர். தற்பொழுது 4% மாணவ மாணவியரே மதராஸாவில் கல்விபயில செல்கின்றனர்.
இந்நிலையில் சங்கபரிவார் அமைப்பானது பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் மதஅடையாளங்களை முன்னிறுத்தி சிறுபான்மை சமூகங்களை கேள்விக்குறியாக்கி அரசியல் இலாபம் காண மதவாத அரசியலை களம் இறக்கியது. இதனடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்காக சங்கபரிவார் சிறுபான்மையினரின்மீது வெறியூட்டக்கூடிய இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அவை: (1) காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு ஏராளமான சலுகைகள் அளித்து அவர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது. (2) முஸ்லிம்கள் குடும்ப கட்டுப்பாடு செய்வதில்லை. இதனால் முஸ்லிம் மக்கள்தொகை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டேபோய் இந்துக்களை மிகைத்துவிடும். இது பிரிவினைக்கு வழிகோலும். இதனால் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்படுவார்கள். இது உண்மையாக இருக்குமோ என்று பலர் ஐயப்பட்டனர்.
சில மாநிலங்கள் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கு முன்வந்தன. இதற்கு எதிராக பல தனியார் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அரசிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லாததால் மதரீதியான இடஒதுக்கீடு கூடாதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த குளறுபடிகளை முடிவுக்கு கொண்டு வரவும் உண்மையை வெளிக்கொணரவும் மார்ச் 2005 பிரதமர் அலுவலகம் இந்திய அரசியல் சட்ட உயர்மட்ட குழுவுக்கு ஒரு அறிவிப்பாணையை அனுப்பியது. அதில் முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமையை கண்டறிந்து அதற்குரிய பரிந்துரைகளோடு ஒரு அறிக்கையை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது. இதனடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் ஏழுபேர்களைக் கொண்ட ஒரு உயர்மட்டக்குழு ஏற்பாடானது. இக்குழு நாடு முழுவதும் பயணம்செய்து அனைத்து அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் அமைப்புகளோடு தொடர்புகொண்டு தகவல்களை திரட்டியது. தரைப்படை, கப்பல்படை, விமானபடை ஆகியவை தகவல்கள் தர மறுத்துவிட்டன.
இருப்பினும் சச்சார் கமிட்டியானது 12 அத்தியாயங்கள் கொண்ட 417 பக்கமுள்ள விரிவானதொரு அறிக்கையை 2006 நவம்பர் 18ஆம் தேதி பிரதமரிடம் சமர்பித்தது. இவ்வறிக்கையை நவம்பர் 30ஆம் தேதி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே நாடளுமன்றத்தில் சமர்பித்தார். அத்தோடு இவ்வறிக்கையின் அடிப்படையிலான செயல்பாடுகள் பிப்ருவரி 2007 முதல் தொடங்கும் என்றார்.
இவ்வறிக்கையில் முக்கியமாக கண்டெடுக்கப்பட்ட தகவல் என்னவென்றால் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்தும் நவீன கருத்தடை முறைகளை பின்பற்றும் வழக்கம் முஸ்லிம்களிடம் அதிகரித்து வருகிறதென்றும் தற்பொழுது இரண்டுகோடி முஸ்லிம்கள் கருத்தடைமுறையை பயன்படுத்தியுள்ளனர் என்றும் இதனால் முஸ்லிம்களின் மக்கள்தொகை குறைந்து வருகிறதாக ஆய்வில் தெரிவித்துள்ளது. தற்போதைய முஸ்லிம் மக்கள்தொகை 13 கோடியே 80 இலட்சம். 21ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய மக்கள்தொகை 170 கோடியாக இருக்கும்போது முஸ்லிம்கள் வெறும் 34 கோடியாக இருப்பர். இதன்மூலம் சங்கபரிவாரின் குற்றச்சாட்டிற்கு மூடுவிழா காணப்பட்டது.
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மையினர் என அழைக்கப்படுவது தவறானதாகும். இந்திய தேசத்தைச் சார்ந்த ஒருவர் இங்கிலாந்து தேசத்தில் சென்றால் அவர் அங்கு சிறுபான்மையினர் என அழைக்கப்படுகிறார். இது சரியானதே. ஆனால் இந்திய தேசத்தில் பிறந்த முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் எப்படி சிறுபான்மையினரென கருதமுடியும். தனது சொந்த நாட்டில் பிறந்த ஒருவரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்ப்பதும் சிறுபான்மையினர் என அழைப்பதும் தவறான காரியமாகும். சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் எந்த வார்த்தை சமத்துவ உரிமையைத் தகர்த்து விடுகிறது. இதனால் சமத்துவ விதிமுறைகள் காலங்காலமாக ஏற்றத்தாழ்வுடன் பார்க்கப்படுவதாலும் செயல்படுத்தப்படுவதாலும் அதன் ஒழுங்கமைவு தோற்றுப் போய்விட்டது. சமத்துவ உரிமையை எங்கும் காணமுடியல்லை. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இன்றைக்கு வருந்துவதற்கு காரணம் அவர்கள் ஒன்றிணைந்து போராடுவதற்கு முன்வருவதில்லை. சிறுபான்மையினர் என்கிற போர்வையில் இடஒதுக்கீடு வழங்குவதைவிட மதத்தின் பெயரில் வழங்குவதே சாலசிறந்தது. ஏனெனில் இந்திய முஸ்லிம்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களல்ல; ஹிந்து தலித்துகளாக வாழ்ந்த மக்கள் சாதிக்கொடுமைகளில் வெறுப்படைந்து முஸ்லிம்களாக மதம் மாறினார்கள்.
நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என கிறிஸ்தவம் போதிக்கிறது. ஆனால் கிறிஸ்தவ கோயில்களில் இன்றும் தலித்துகளுக்கென தனிக்கோவில்களும் தனிக்கல்லறைகளும் தனிஇருக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர், பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு கன்னியாகுமரி மாவட்டத்திலும் சென்னையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது சமத்துவத்தை கொண்டுவர வழிவகுக்காது. சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் யாரைச் சென்றடைகின்றன? சிறுபான்மையினரின் கல்விநிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் சேருவதற்கும் அவர்களுடைய நிறுவனங்களே தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில்லை. ஏனெனில் அவற்றை நடத்துகின்ற சிறுபான்மையினர் பணம் சேர்ப்பதிலும் கொள்ளை இலாபம் அடிப்பதிலுமே குறியாக உள்ளனர். இதனைவிட மிகக்கேவலமாக கல்விநிறுவனங்களை நடத்துகின்ற மதவாதிகள் நடந்து கொள்கிறார்கள். இவர்கள் போலி முகமூடியை அணிந்து கொண்டு வெட்கம் இல்லாமல் தலித்துக்காக போராடுவதாகவும் குரல் கொடுப்பதாகவும் வீதிகளிலும் பொது இடங்களிலும் முழக்கமிடுகிறார்கள்.
மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் முஸ்லிம்கள் நிலம் வாங்குவதற்கும் வீடு வாங்குவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை. தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரைவிடவும் முஸ்லிம்கள் பின் தங்கியுள்ளனர். நீதித்துறையில் மிகபிற்படுத்தப்பட்டோர் 23% தாழ்த்தப்பட்டோர் 20% முஸ்லிம்கள் வெறும் 7.8%. 14 இலட்சம் பப்ளிக் சர்வீஸ் பணிகளில் முஸ்லிம்கள் வெறும் 7.2%. அதுவும் மிகவும் கீழ்மட்ட பணிகளில் வேலைசெய்கின்றனர். நாட்டின் உயர் அரசு பணிகளில் 3% முஸ்லிம்களே உள்ளனர். மாவட்ட நீதிபதிகளில் 2.7% பேரே முஸ்லிம்களாக உள்ளனர். மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதிகூட நியமிக்கபடவில்லை. இதற்கு காரணம் ஹிந்துக்களை நீதிமான்களாகவும் முஸ்லிம்களை மதவெறியர்களாகவும் சித்தரிப்பதுதான்.
மாநிலவாரியாக பார்க்கும்போது கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.. முப்பது ஆண்டுகளாக இடதுசாரிகள் கோட்டை கட்டி ஆளுகிறார்கள். ஆனால் 25.2% முஸ்லிம்களில் வெறும் 4.2% பேருக்குத்தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரா: முஸ்லிம்கள் 9.2%; பணியில் 8.8%; கேரளா: முஸ்லிம்கள் 24.7%; பணியில் 10.4%; அஸ்ஸாம்: முஸ்லிம்கள் 30.9%; பணியில் 11.2% தமிழ்நாடு: முஸ்லிம்கள் 5.6%; பணியில் 3.2%; பீஹார்: முஸ்லிம்கள் 16.5%; பணியில் 7.6%; உத்திரபிரதேசம்: முஸ்லிம்கள் 18.5%; பணியில் 5.1%.
நாடு முழுவதும் மிக குறைந்த வருமானத்தில் முஸ்லிம்களே வாழுகின்றனர். முஸ்லிம்களில் 94.8%பேர் வறுமை கோட்டின்கீழ் இருக்கிறார்கள். தலித்துகளில் 32%பேர் ரேஷன் கார்டு வைத்திருக்கையில் முஸ்லிம்களில் 22%பேரே ரேஷன்கார்டு வைத்துள்ளனர். முஸ்லிம் விவசாயிகளில் 2.1%பேரே சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளனர். 1%தான் நிலத்திற்கு நீர்பாய்ச்ச பம்ப்செட் வைத்துள்ளனர். மக்களவையில் 543 உறுப்பினர்களில் 75 முஸ்லிம் எம்.பி.கள் இருக்கவேண்டும். ஆனால் 33பேர் மட்டுமே முஸ்லிம்களாக உள்ளனர். நாம் சமத்துவ உரிமைப்பெற்ற குடிமகன்கள் என இந்திய அரசியல் சட்ட சாசனம் கூறுகிறது. ஆனால் முஸ்லிம் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில்லை. இதுவரை 3.2% பேர்தான் வங்கிக்கடன் பெற்றிருக்கிறார்கள்.
முஸ்லிம் தலைவர்களால் எந்தவொரு பிரச்சனைகளுக்கும் முடிவுகள் காணமுடியாது. சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லிம் தலைவர்களால் முஸ்லிம்களை காப்பாற்ற முடியவில்லை. ஏனெனில் அவர்கள் பலபிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர். அவர்கள் ஒன்றிணைந்து போராடுவதில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்ற முயற்சியும் அவர்களிடமில்லை.
உருதுமொழியை முஸ்லிம்களின் தங்களின் தனிப்பட்ட மொழியாக எடுத்துக்கொள்வதால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உருது மொழி மட்டும் தெரிந்த முஸ்லிம்களுக்கு கர்நடாகாவில் அரசு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கன்னடமொழியை கற்றுக்கொள்வதில்லை. உருதுமொழியை தேசிய மொழியாக அங்கிகரிப்பதற்கு நாம் போராட வேண்டும். போராட்டத்தின் விளைவாக அம்மொழி அங்கீகரிக்கப்பட்டாலும் அதனை மாநிலமொழியாக அங்கீகரிக்க மொழிவெறி மாநிலங்கள் மறுக்கும். எனவே உருதுமொழியை தாய்மொழியாகவும் மாநில மொழியை தொடர்புமொழியாகவும் கற்று அரசு பதவிகளில் ஏறுவதற்கு முயல வேண்டும். அதேவேளையில் உருதுமொழியை மாநில மொழிகளாக அங்கீகரிக்க தொடர்ந்து போராட முன்வர வேண்டும். முஸ்லிம்களில் 4%த்தினர்தான் பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்கு செல்கின்றனர். 7.2%பேர்தான் உயர்நிலைப்பள்ளியை முடித்திருக்கிறார்கள். 1.2%பேர்தான் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள். இவ்வாறு தலித்துகளைவிட முஸ்லிம்கள் பின் தங்கியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிற செய்தி.
குற்றவாளிகளும், பணமுதலாளிகளும் தேர்தல் களத்தில் போட்டியிட்டு மக்கள் பிரிதிநிதிகளாக பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் முஸ்லிம்களின் நலனை கருத்தில்கொண்டு பேசுவதற்கு வாய்ப்பில்லை. சுயலாபத்திற்காகவும் கொள்ளை இலாபம் அடிப்பதிலுமே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். நாங்கள் நல்லவர்கள் என மக்களே எங்களை தேர்வு செய்துவிட்டார்களென தங்களைப்பற்றி பெருமையாக பேசுகின்றனர். பலர் அவர்களிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் சொல்வதனை வேதவாக்காக நம்பி ஏமாந்து போகின்றனர். நமக்குள் மாற்றம் வராததுவரை ஜனநாயகத்தை இம்மண்ணில் விதைக்க முடியாது.
நிர்வாணமாக நடனம் ஆடுவதால் இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதாக பலர் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். சமத்துவம் நிலவாததுவரை, அனைவருக்கும் கல்வி வழங்கப்படாததுவரை இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கருத முடியாது. சுதந்திரத்திற்கு முன்பு 75% மக்கள் ஏழைகளாக இருந்தனர். இன்று அது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் மதரீதியானதல்ல; அரசியல்ரீதியானது. மெய்யான ஜனநாயகமும் நேர்மையான அரசாங்கமும் நமக்கு இல்லை. இதனால்தான் சாதிப்பிரச்சனையும் மதப்பிரச்சனையும் இதுவரையும் தீர்க்கப்படாமலேயுள்ளது. சாதியை மனிதனால் அழிக்க முடியும். மதத்தை அழிக்க முடியாது. மனிதர்கள் இருக்கின்ற காலம்வரை மதம் இருக்கும். பொதுவுடைமைக்கு எதிராக மதம் பிரச்சனையை உருவாக்கினால் மதம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் மதத்தை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். உண்மையான நபர்கள் மதத்தில் வாழ்ந்தாலும் மதத்தை தவறாக பயன்படுத்தவில்லை. உதாரணமாக மகாத்மா காந்தியையும் மௌலானா ஆசாத்தையும் குறிப்பிடலாம். இவர்கள் மதத்தில் வாழ்ந்தாலும் வேதவசனங்களை நமது நலனுக்காகவே கோடிட்டுக்காட்டினர்.
நமது நாடு தேர்தல் சம்பந்தமான ஜனநாயகத்தைக் கொண்டுள்ளதால் ஓட்டிற்காக மதமும் சாதியும் பயன்படுத்தப்படுகிறது. உள்ளார்ந்த சிந்தனையை தூண்டாத மதம் மதமல்ல. மதம் பிரச்சனையை கொண்டுவருவதில்லை. மதத்தை மரபுவழி பாரம்பரியத்தோடு நம்பிக்கைகொண்டு எடுத்துச் செல்வதால்தான் பிரச்சனை வருகிறது. நாம் வேதத்தை புரிந்து கொள்வதோ ஆய்வு செய்வதோ இல்லை. மரபுவழியாக வருவதை ஏற்றுக்கொண்டு அதுதான் உண்மையென நினைத்து அப்பாவித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன்மூலம் சுதந்திரமான அறிவார்ந்த உள்ளுணர்வை இரக்கமற்ற முறையில் கொலை செய்துவிடுகிறோம்.
இந்தியா இரண்டாக பிரிந்து போவதற்கு காரணமான ஜின்னா மதத்தின்மீது நம்பிக்கையற்றவர். இதைப்போன்று ஹிந்து ராஷ்டிரம் பேசுபவர்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உயர்சாதி ஹிந்துக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கும் தலித்துகளை ஒடுக்குவதற்கும் இவ்வாறு பேசிக்கொண்டு திரிகிறார்கள். ஹிந்து ராஷ்டிர மந்திரம் உயர்சாதி ஹிந்துக்களுக்காகவே உருவாக்கப்பட்டது. ஜின்னா தனது வாழ்நாளில் திருக்கூரானை வாசித்தேயில்லை. சுன்னி முஸ்லிம்கள் அரசியல் ஆதாயத்தையும் அதிகாரத்தையும் பெறுவதற்காகவே பாகிஸ்தானை தனியாக பிரித்துச்சென்றார். இன்றைக்கு பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களும் வகாபி பிரிவைச்சாராத முஸ்லிம்களும் கொலை செய்யப்படுகிறார்கள். பிறரின் ஜனநாயகத்தைப்பற்றி நாம் பேசுவதேயில்லை. இதனால்தான் இப்பிரச்சனைத் தொடர்ந்து நடைபெறுகிறது. நீங்கள் பிறரின் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் எல்லா மதமும் மொழியும் வெவ்வேறு கலாச்சாரமும் மனிதர்களுக்காகவே உருவானதாக அறிவீர்கள்.
விவேகானந்தரின் குரு ஸ்ரீ இராம கிருஷ்ணர் மதத்தை அறிந்து கொள்வதற்காக ஒருவருட காலம் முஸ்லிமாகவும் ஒருவருட காலம் கிறிஸ்தவராகவும் வாழ்ந்தார். அதனால்தான் விவேகானந்தரால் மனித நேயத்தைக்குறித்து போதிக்க முடிந்தது. கபீர், குருநானக், முஹைதீன், நிஜாமுதீன் ஆகியோர் மத ஒற்றுமைக்காக பாடுபட்டனர். யஹோவா, அல்லாஹ், பிரம்மன் என பெயர் வேறுபட்டாலும் நாம் அனைவரும் ஒருவனைத்தான் தொழுதுகொள்கிறோம்.
அரசியல்வாதிகள் நம்மைப் பிரிப்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். மக்கள் சூபிகள் மீதும், புனிதர்கள் மீதும் கவரப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மதங்களை முன்னிறுத்தி அதிகாரத்தை நிலைப்படுத்துவதுபற்றி கற்றுக்கொடுப்பதில்லை. நம்முடையவைகளை ஆக்கிரமித்துக்கொண்டு அவர்கள் தங்களை சந்தோசப்படுத்திக் கொள்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இவ்வாறுதான் மக்கள் எண்ணங்களில் விஷத்தை விதைத்தது. எத்தனை இந்துக்கள் இராமர் அயோத்தியிலுள்ள மசூதிக்குள் பிறந்ததாக நினைக்கிறார்கள். நம்பிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு மக்களிடையே மீண்டும் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தி வழக்கானது பகிர்ந்தளிக்கும் பாகபிரிவினை வழக்கல்ல; உரிமைகோரும் வழக்கு. நீதிபதி, மதவாதிகளை கருத்தில்கொண்டு தீர்ப்பளித்திருக்கக்கூடாது. அத்வானி, பால்தக்கரே போன்ற மனிதர்களால் நாடு ஒருபோதும் ஒன்றுபடாது. கம்யூனிச சித்தாந்தம் கொண்ட மேற்கு வங்கத்தில் எப்பொழுதும் மதக்கலவரம் இருந்துகொண்டேயிருக்கும். அதனால் நாம் மதத்தை சரியாக புரிந்து கொள்வதற்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.
ஆயிரம் நக்சலைட்டுகள் 25 வருட காலமாக ஆந்திர பிரதேசத்தில் பெரும் தலைவலியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாயிரம் தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்ட ஜம்மூ காஷ்மீர் பிரச்சனையை இன்னும் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. மாவோயிஸ்டுகளால் பல மாநிலங்களில் பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவையெல்லாம் உருவானதற்கு காரணம் அரசினுடைய தவறான அணுகு முறைகளாகும். இன்றைக்கு பாபர்மசூதி பிரச்சனையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முஸ்லிம்கள் எவரும் மகிழ்ச்சியாக இல்லை. இத்தீர்ப்பினால் இந்தியாவின் எங்காவது ஒரு மூலையில் குறிப்பிட்ட முஸ்லிம்கள் இணைந்து அரசுக்கு எதிரான ஓர் அமைப்பினை உருவாக்குவதற்குரிய வாய்ப்பு அதிகமாகவேயுள்ளது. இந்துக்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கொடுத்தபின்பும் முழுபங்கும் வேண்டுமென அறிக்கை இடுகின்றனர். இது ஒன்றுபட்ட இந்தியாவை பலவினப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பால் சைனா மகிழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு தீர்ப்பில் ஹிந்துத்துவம் என்பது வாழ்க்கை நடைமுறையென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதவாதிகள் மதத்தை ஒன்றிணைப்பதற்காக போராட முன்வரமாட்டார்கள். இவர்களுக்கு சாதகமாக நீதிபதிகள் தீர்ப்பளிப்பதுத்தான் வெட்கத்திற்குரிய விசயம்.
இந்துக்களை ஒன்று சேர்ப்பதற்கும் அவர்களின் ஓட்டுக்களை கவருவதற்கும் முஸ்லிம்கள் மும்பையை விட்டு சென்றுவிட வேண்டுமென்றும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக்கூடாதென்றும் பால்தக்கரே கூறுகிறார். அதைபோன்று, ”எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகளல்ல; ஆனால் எல்லா பயங்கரவாதிகளும் முஸ்லிம்களே” என மோடி கூறுகிறார். நாட்டின் செலவு திட்டத்தை வரையறுக்கும்போது முஸ்லிம்களின் ஓட்டுக்களை கவருவதற்காக, ”இது சிறுபான்மையினரின் நலனுக்குரிய செயல்திட்டம்” என்கிறார் மன்மோகன்சிங். ஒரு கூட்டம் மதவெறியைத் தூண்டி ஓட்டுவங்கியை பெருக்குவதற்கு திட்டமிடுகிறது. இன்னொரு கூட்டம் அதனை சாதகமாகப் பயன்படுத்தி தங்களை சிறுபான்மையினரின் காவலனென பறைசாற்றுகிறது.
1995இல் ஐந்து பிராமணர்களால் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளதென்றால் நாட்டின் ஆபத்து வெகுதொலைவில் இல்லை. இவ்வியக்கத்தைத் துவங்கிய சௌவ்ராங்கர், முஸ்லிம் பெண்களைக் காப்பாற்றுவோம் என்ற போர்வையில் முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னவென்றால்: (1) ஷரியத் சட்டத்தை அழித்து பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் (2) செக்ஸ் ரீதியாக திடீர் தாக்குதல் நடத்த வேண்டும் (3) இந்துக்களின் விதைகளை முஸ்லிம் பெண்களின் கர்ப்பப்பையில் வளரவைத்து மக்கள் தொகையை பெருக்க வேண்டும். இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக பலவகைகளில் கலவரங்களை உருவாக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இவைகள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது.
முஸ்லிம்களுக்கு உதவி செய்வதாகக்கூறி அரசு பாவனை செய்கிறது. (1) முஸ்லிம்கள் மெக்காவிற்கு ஹஜ் பயணம் செய்வதற்கு ருபாய் 12,000/- மானியம் வழங்குகிறது. வசதிபடைத்தவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டால் போதுமென்று திருக்கூர்ஆன் கூறும்போது அதற்கு விரோதமாக முஸ்லிம்கள் முன்னேறுவதற்கு ஹஜ் செல்ல மானியம் வழங்குகிறோம் என்பது இறைவேதத்திற்கு விரோதமான காரியம். மானியத்தில் ஹஜ் செல்லுவதை எப்படி புனிதப்பயணமென கூறமுடியும். இதில் அரசின் இன்னொரு தந்திர திட்டமும் அடங்கியுள்ளது. அது வியபார யுக்தியும் விளம்பர யுக்தியுமாகும். மானியத்தொகை ருபாய் 12,000/-த்தை அரசானது அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா கம்பெனிக்கு நேரடியாக வழங்குகிறது. அரசு வழங்கும் பணம் மீண்டும் அரசின் கஜானாவுக்கு சென்றுவிடுகிறது. (2) மிலாடிநபி விடுமுறை: முஸ்லிம் பண்டிகைகளுக்கு விடுமுறை விடுவதாக அரசு காட்டிக்கொள்கிறது. இதுவும் முஸ்லிம்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதில்லை. இதுகுறித்து முஸ்லிகள் விழிப்படைய வேண்டும்.
1970இல் பாபர்மசூதி இடிக்கப்பட்டது. 1970-1980களில் கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றபோது ஹைதராபாத் முஸ்லிம் இளைஞர்கள் வீதிகளில் பட்டாசை வெடித்து கொண்டாடி தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்துக் கொண்டனர். ஏனெனில் அவர்களின் வலிகளையும் இரண்டாந்தார குடிமக்களாக நடத்துவதையும் அரசு கண்டு கொள்ளவில்லை. மேலும் நாங்கள் மோசமானவர்கள் இல்லையென்பதனை நிருபிக்கும் பொருட்டு முஸ்லிம்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படையாக்கினர். தங்கள் பிள்ளைகளுக்கு அரபி மொழியிலான பெயர்களை மட்டுமே சூட்டிக்கொண்டனர். தலையில் தொப்பியணிந்தும் முகத்தில் தாடி வளர்த்தும் தாங்கள் முஸ்லிம்கள் என்பதனை பறைச்சாற்றிக் கொள்ள முன்வந்தனர். பெண்கள் அனைவரும் பர்தா அணிவது கட்டாய கடமையானது. அதுவரையும் இவைகளை அதிகமானோர் பின்பற்றாமலே வாழ்ந்து வந்தனர்.
1990க்கு பின்பு முஸ்லிம்கள் வாக்குசாவடிக்கு வந்து வாக்களிப்பது அதிகமானது. இதனால் அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்ற அளவிற்கு வலிமை பெற்றிருந்தனர். தங்களுடைய உரிமைக்காக வீதியில் வந்து போராடவும் தயங்கவில்லை. முஸ்லிம்களில் பலர் பல்வேறு கட்சிகளில் இணைந்து கொண்டனர். இதனால் முஸ்லிம் மதத்தலைவர்கள் காணாமல் போனார்கள். பாபர் மசூதி இடிப்புக்குப்பின்பு முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காததால் உத்திரபிரதேசம் பீகார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காணாமல் போனது. அதன் அடிப்படையில் முஸ்லிம்களின் அவலநிலையை எடுத்துக்காட்ட வந்ததுதான் சச்சார் கமிட்டி அறிக்கை. முஸ்லிம்கள் பிற சமுதாயத்தினரைவிட பின்தங்கியுள்ள உண்மை நிலையை பட்டியலிட்டு காட்டியது. சச்சார் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் காங்கிரஸ் செயல்படுவதுபோல் பாவனை காட்டுகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சியைக் கொண்டு வந்தது.
வறுமையில் வாழுகின்ற முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளை தொழிற்சாலைகளில் பட்டறைகளில் கடைகளில் வேலைசெய்யவே அனுப்புகிறார்கள். ஏன் அவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால், ”தொழிற்சாலைக்கு சென்றால் பிள்ளை கற்றுக்கொள்ளும் ஆனால் படிக்காது; பள்ளிக்கு சென்றால் குழந்தை படிக்கும் ஆனால் கற்றுக்கொள்ளாது” என்கின்றனர். இதுதான் நமது கல்வியின் தரம் என்பதனை சாதாரண மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். நமது நாட்டில் பத்தாம் வகுப்புவரை படித்தவன் மேசை துடைக்கும் பியூன் வேலை செய்கிறான். டிகிரிவரை படித்தவன் டாஸ்மார்க் கடையில் மதுபானம் விற்கிறான். இதுதான் நாம் கற்கும் கல்வியின் லட்சணம். ஒரு பியூன் வேலையை ஒருவன் கற்றுக்கொள்வதற்கு அவன் பத்தாம் வகுப்புவரை படிக்க வேண்டியுள்ளது. பிராண்டி விற்பதற்கு ஒருவன் டிகிரிவரை படிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு படித்தவர்கள் லஞ்சம் கொடுக்காமல் வேலைக்கு அமர முடியவில்லை. இக்கேள்வியை கல்வி கற்காதவர்கள் கேட்கும்போது நம்மால் பதில்சொல்ல முடிவதில்லை. வெளிநாடுகளில் கற்றலும் படித்தலும் இணைந்தே பயணிக்கிறது. நமது கல்வி வெறும் ஏட்டு சுரைக்காயாகத்தான் இன்னும் உள்ளது. எனவே நமது கல்வி தரத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.
மகாராஸ்டிராவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 10.6%. சிறையிலுள்ள மொத்த தொகையில் 40% இவர்கள்தான். ராஜஸ்தானில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 9.6%. சிறையிலுள்ள மொத்த தொகையில் இவர்களின் பங்கு 25% ஆகும். மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் சிறைச்சாலைகளில் இருப்பவர்களின் பட்டியலைத்தர மறுத்துவிட்டது. நமது நாட்டில் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கல்ளில் 80% இஸ்லாமிய சகோதரர்களே.
தாடி வைப்பவர்களெல்லாம் வன்முறையாளர்கள் அல்லது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்ற எண்ணமும், பிரச்சனை நடந்தால் முஸ்லிம் இளைஞர்களை காவல்துறையினர் கேள்வி கேட்காமலேயே கைது செய்வதும், காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய பதவி உயர்வுக்காக வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆயுத குச்சுகளையும் துப்பாக்கிகளையும் தாங்களே தயார் செய்துவிட்டு முஸ்லிம்களை ஆயுதங்களுடன் கைதுசெய்ததாக பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரம் செய்து பதவி உயர்வினை பெறுவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் பெரும்பங்கு ஆற்றுபவர்கள் காவல்துறையினரே.
இதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் ஊடகத்துறை பார்ப்பனர்களின் கைகளில் இருப்பதுதான். ஊடகத்துறையில் 3% முஸ்லிம்களே பணியாற்றுகின்றனர். ஆனால் மக்கள் தொகையில் 3% இருக்கும் பார்ப்பனர்களில் 49%பேர் ஊடகத்துறையில் இருக்கிறார்கள். இந்து மதவாதிகளும் ஆதிக்கவாதிகளும் நிரம்பி வழியும் ஊடகங்கள் தொடர்ந்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கின்றன.
அரசு பணிகளில் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு புலனாய்வுதுறை, உளவுதுறை, ராணுவதுறை போன்றவை வெறும் கனவுதான். உளவுதுறை பணியில் முஸ்லிம்களை சேர்க்கக்கூடாதென்பது மதசார்பற்ற ஜனநாயகத்தில் எழுதப்படாத சட்டமாகவேயுள்ளது. ராஜேந்தர சச்சார் சொல்கிறார், ”இஸ்லாமிய சமூகம் இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. ஒன்று பயங்கரவாதி; மற்றொன்று தேசப்பற்று அற்றவன். ஆனால் நான் பார்த்த வகையில் இஸ்லாமியர்களுக்கு இந்தியன் என்ற உணர்வு அதிகம்”. மீனா மயில் சொல்கிறார், ”உலகின் எந்த மூலையில் தீவிரவாத வன்முறை தாக்குதல்கள் நடந்தாலும் முஸ்லிம் அமைப்புகளை நோக்கியே கைநீட்ட நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். இடிக்கப்பட்டது பாபர்மசூதிதான் என்றாலும் இடித்தது இந்து வெறியர்களே. எனினும் அவப்பெயர் என்னவோ முஸ்லிம்களுக்குத்தான்”.
1953இல் வெளியான காகா கலேல்கர் கமிஷன், 1983இல் வெளியான கோபால்சிங் கமிஷன், 1989இல் வெளியான மண்டல் கமிஷன், 2006இல் வெளியான சச்சார் கமிஷன், 2009இல் வெளியான ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகிய அனைத்தும் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, அரசு வேலைவாய்ப்பு குறித்து தொடர்ந்து ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அவ்வறிக்கையின் முடிவுகளில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியிருப்பதாகவும், அவர்களுக்கு ராணுவத்திலும் நீதித்துறையிலும் போதியளவு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் எச்சரிக்கிறது. இருப்பினும் இவ்வறிக்கைகளின் அடிப்படையில் அரசு செயல்படுவதாக இல்லை.
நமது நாடு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்நாட்டின் இரண்டாவது பெரும் சமுதாயமான முஸ்லிம் சமுதாயம் வளர்ச்சியின் சுவையை அனுபவித்திராத ஒரு சமூதாயமாக உள்ளது. நலிவடைந்தவர்களில் ஒருவருக்கு உணவும் உடையும் வேலைவாய்ப்பும் அளிப்பதும் இன்னொருவருக்கு அதனை வழங்காமல் மறுப்பதும் பாரத பண்பாடுமில்லை; சமதர்ம கோட்பாடுமில்லை. எனவே நலிவடைந்தவர்கள் நலமடைய ஆவன செய்வதும் உயரச்செய்வதும் ஏறெடுத்து பார்க்க வேண்டிய முக்கிய பணிகளாகும். 2020க்குள் இந்தியா வல்லரசாக வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கிற நாம் அடித்தட்டு சமுதாய மக்கள் ஆட்டம் காண்கிற நிலையிலோ அல்லது கோபப்படுகிற நிலையிலோ விட்டுவைப்பது அறிவுடைமையாகாது. அவ்வாறு விட்டுவைத்தால் நாம் நமது அரசியல் சட்ட சாசனத்தை குழிதோண்டி புதைப்பதற்கு சமமாகும். முஸ்லிம்கள் முன்னேறுவது முஸ்லிம்களின் தேவை என்பதனைவிட தேசத்தின் தேவையென்பதனை உணரவேண்டும்.
சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் (1) அரசு உடனடியாக இங்கிலாந்தில் உள்ளது போன்று சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான சமவாய்ப்பு ஆ¬ணையத்தை உருவாக்க வேண்டும். (2) மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியில் 15% முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும். (3) மத்திய அரசு மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் வேலைக்கான நேர்காணல் நடக்கும்போது அதிகாரிகள் குழுவில் முஸ்லிம்கள் கட்டாயமாக இடம்பெற வேண்டும். சச்சார் கமிட்டி அறிக்கையை கேட்டபின்பும் நாம் மீண்டும் அப்படியே இருந்தால் வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிக்கமாட்டார்கள். தலித்துகளின் வளர்ச்சிக்காக பிறசமுதாய மக்கள் எப்படி முன்னுக்கு வந்து ஒருங்கிணைந்து போராடினார்களோ அப்படி நாம் போராட முன்வர வேண்டும். இல்லையென்றால் சச்சார் கமிஷன் அறிக்கை வெறும் கானல் நீராகவே இருக்கும்.
சச்சார் அறிக்கை குறித்து வேடிக்கையான ஒரு முல்லா கதையுள்ளது. ஒரு விடுமுறை நாளில், முல்லா இறச்சி கடைக்குச் சென்று அரைக்கிலோ ஆட்டுக்கறி வாங்கினார். பக்கத்திலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி என்றொரு செய்முறை புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் வீதியில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு தெருநாய் அவரது கையிலிருந்த இறச்சிபையை பறித்துக்கொண்டு ஓடியது. தெருவில் இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் பதறினர். சிலர் நாயைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். முல்லா மட்டும் பதறவுமில்லை; ஓடவுமில்லை. இதனைப்பார்த்த ஒருவர் முல்லாவிடம் உம்முடைய இறச்சிப்பையை நாய் தூக்கிக்கொண்டு ஓடுகிறது; நீங்கள் பதறாமல் நிற்கிறீரே என்றார். அதற்கு முல்லா, நாய் இறச்சியைக் கொண்டு ஓடினாலும் செய்முறை புத்தகம் என்னிடமல்லவா இருக்கிறது என்றாராம். இப்பொழுது இறச்சி மத்திய அரசிடமுள்ளது. சச்சார் அறிக்கை என்கிற செய்முறை புத்தகம் நம்மிடமுள்ளது. சிந்திப்போம்! செயல்படுவோம்!!
வழக்கறிஞர் ஜோ. தமிழ்ச்செல்வன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு புதூர் கிராமத்தைச் சார்ந்தவர். எளிமையான மீனவர் குடும்பத்தில் பிறந்த அவர், சுய முன்னேற்றமாய் படித்து வழக்குரைஞர் ஆனவர். கல்வித் தகுதி எம்.ஏ., எம்.எல் படிப்பை முடித்து, வழக்குரைஞராகவும் சமூகப் போராளியாகவும் இருந்து வருகிறார். சமூக அவலங்களுக்கு எதிராக தைரியமாய் முழக்கமிடுபவர். இவரின் எழுத்துக்கள் சீரிய எண்ணமும், முற்போக்குச் சிந்தனையைக் கொண்டது என்றால் அது மிகையாகாது.
source : http://tamilcharam.net/controversial-sachar-committee/