செவ்வாய், 2 நவம்பர், 2010

திருச்சி: தீண்டாமைச் சுவர் என்ற பெயரில் அரசியல்...

திருச்சி மாநகராட்சி 40வது வார்டு எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள பழைய சக்திவேல் காலனியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுவர் என்று கூறப்படும் வீட்டிற்கு உரிமையாளரான நல்லமுஹம்மதுவின் தந்தை 1964ம் ஆண்டு இந்த காலனியைச் சுற்றி பாதுகாப்பு கருதி சுமார் 10 அடி உயர சுவர் எழுப்பி இருக்கிறார். அந்த காலனியில் அங்கு வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே சாலையும் அமைத்துள்ளார்கள். சாலை முடியும் இடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 அடி நீளத்தில் ஆஸ்பெடாஸ் வீட்டைக் கட்டி தனது தங்கைக்கு வழங்கி உள்ளார்.

தற்பொழுது இந்த காலனிக்குப் பின்புறம் முத்து மாரியம்மன் கோவில் தெரு என்ற பெயரில் வீடுகள் உருவாகி அங்கு அனைத்து சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகள், முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தலித் மக்கள் பழைய சக்திவேல் காலனியில் வரக்கூடாது என வேண்டுமென்றே தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது என பொய்க் கதை புனைந்து 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் நவம்பர் 9ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் சுவரை இடிக்காவிட்டால் நாங்களே இடிப்போம் என கூறியுள்ளனர் வலது கம்யூனிஸ்ட்கள்.


இந்நிலையில் 28ம் தேதி சர்ச்சைக்குள்ளான பகுதியைப் பார்வையிட வந்த இடது கம்யூனிஸ்ட் எம்.பி திரு.லிங்கம் அவர்கள், இந்த சுவர் தீண்டாமை சுவர் அல்ல எனவும், மனிதாபிமானத்துடன் பேசி இப்பிரச்சனையை இருவரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


அதனைத் தொடர்ந்து 29ம் தேதி சர்ச்சைக்குள்ளான பகுதியை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் எஸ். முஹம்மது ஜெய்னுலாபுதீன் பார்வையிட்டு அப்பகுதி மக்களை சந்தித்தார். அவருடன் தமுமுக, மமக மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தார்கள். அங்கு வந்த பத்திரிக்கை நிருபர்களிடம் மாநில அமைப்பு செயலாளர், ‘‘இது ஒருபோதும் தீண்டாமைச் சுவர் ஆகாது. எனவே அரசியல் ஆதாயத்துக்காக விளம்பரம் தேட முயற்சிக்கும் கட்சிகள் மீது அரசும் காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.


‘‘மெயின் ரோட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள பழைய சக்திவேல் காலனியில் உள்ள ஆஸ்பெடாஸ் வீட்டையும் இடித்து விட்டால் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டு மனைகளுக்கு விலை உயரும் அதனால் தாங்கள் அதிகம் பயன் அடையலாம் என நினைக்கும் சில நபர்களுக்காக ஒரு தூய்மையான நேர்மையான அரசியல் கட்சி வாதாடுவது உகந்தது அல்ல என்பதை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சொல்லிக் கொள்கிறோம்’’ என்றும் அவர் மேலும் கூறினார்.


கருத்துகள் இல்லை: