செவ்வாய், 30 நவம்பர், 2010

எயிட்ஸின் எதிரி பர்தாவே!


புனித தீனுல் இஸ்லாம், நல்லதோர் குடும்பம் சின்னாபின்னப்பட்டுவிடாது அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. எனவே, அக்குடும்பத்தில் மனோ இச்சை எனும் வைரஸ் தொற்றி அதன் இயற்கைச் சூழலைக் கேடுபடுத்திடாமல் மக்கள் ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குனங்களென்ற உதவிவாய்ந்த தூண்களால் சுவர் எழுப்பியுள்ளது. மேலும், புனித இஸ்லாம் மார்க்கம், அனாச்சாரங்களின் பக்கம் இட்டுச் செல்லக் கூடியவற்றைச் தடுப்பதற்காக திரைகளை எற்படுத்துயுள்ளது. ஆணும், பெண்ணும் சந்திக்கும் சமயம் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கட்டளை பிறப்பித்துள்ளது.

நிச்சயமாக அல்லாஹ் பெண்ணைக் கண்ணியப்படுத்துவதற்காகவும் இழிவிலிருந்து அவளின் தன்மானத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் மேலும், குழப்பவாதிகள், தீய எண்ணம கொண்டவர்களின் தீங்குகளை விட்டும் அவளைத் தூரப்படுத்துவதற்காகவும், விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்காகவும், பெண்ணின் கண்ணியத்தையும் பத்தினித்தனத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்கமாக்கியுள்ளான்.

அல் – குர்ஆனில் வல்ல நாயன், “(நபியே!) முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்களின் மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும், அவற்றில் வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் முந்தானைகளால் தங்களின் முன்பகுதியை மறைத்துக் கொள்ளட்டும். மேலும், அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்!” (24:31)

எனப் பறைசாற்றுகின்றான். குழப்பங்கள் சூழ்ந்து பரவிக்கிடக்கும் இக்காலத்தை விட வேறு எக்காலத்தில் அச்சம் அதிகமாக இருக்க முடியும்! காமுகர் தெருக்களிலும் கடை வீதிகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் அவர்கள் நிரம்பியும் நல்லவர்கள் அறிதாகியும் விட்டனர். இஸ்லாம் பெண்களை அந்நிய ஆடவர்களுடன் கலந்துரவாடுவதை தடுத்திருப்பது போன்று மேற் கூறியவை அனைத்தும் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகும். இஸ்லாம் பாதிகாப்பின் மீதும், குழப்பத்தையும், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகளை அடைத்துவிடுவதின் மீதும் அக்கறை கொள்கிறது. பெண் வெளியே செல்வதிலும் அந்நிய ஆடவர்களுடன் கலந்துரையாடுவதிலும், அவளின் வதனத்தைத் திறந்து செல்வதிலும், மனோ இச்சைகளைக் கிளறிவிடக்கூடியவைகளும், பாவத்திற்குக் காரணமான செயல்களை இலகுபடுத்துவதும், அவைகளைச் செய்யக் கூடியவர்களுக்கு அவற்றை இலகுவாக்கக்கூடிய வைகளாய் இருக்கின்றன. மேலும், மறைக்கப்பட வேண்டிய ஒளறத் திறக்கப்படுவதாலேயே எதிர்பால் கவர்ச்சி ஏற்படுகின்றது.

அதனால்தான் இறைவன் தனது அருள்மறையாம் குர்ஆனில்: “நபியுடைய மனைவியரே! நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரிந்து கொண்டிருக்காதீர்கள்” (33: 53)
என வெளிச்சம் போட்டுகாடுகின்றான்.

ஒரு பெண் சில சந்தர்ப்பங்களில் தனது அவசியத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பவரில்லாதபோது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நிர்ப்பந்த தேவைகளுக்காக மார்க்க வரம்புகளைக் பெண் தனது அலங்காரத்தை வெளிப்படுத்தாது இஸ்லாமிய முறைப்படி தன்னை மறைத்துக் கொண்டு வெளியேறி, ஆண்களை விட்டும் நீங்கி அவர்களுடன் கலந்திடாதவாறு சென்று வருவதில் குற்றமில்லை. ஒரு பெண் அந்நியருடன் தனித்திருப்பதை தடுக்கப்பட்டிருப்பது அவளது குடும்பத்தையும் நற்குணங்களையும் பாதுகாப்பதற்கு இஸ்லாம் அமைத்துள்ள சிறந்த வழியாகும். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் ஆன்மாக்களையும் நற்குணங்களையும் பாழாக்குவத்தின் மீது பேராசை உள்ளவனாக இருக்கிறான்.

“ஆண், பெண் இருவரும் தனித்திருக்கையில் மூன்றாவதாய் ஷைத்தான் இருக்கிறான்.” எனும் மணிமொழியை நினைவிற் கொள்க! பர்தா அணிவது அவசியம் தானா? பெண்ணை முக்காடிட்டு வீட்டினுள் மறைத்து வைப்பது தகுமா? வளர்ந்திருக்கும் விஞ்ஞான உலகில் நடமாட தடை விதிக்கலாமா? இது என்ன நியாயம்? திரையிட்டு சிறை வைக்கும் ஆடவர் ஆணவம் அடங்காதா? ஆணுக்கு ஒரு நீதி! பெண்ணுக்கு ஒரு நீதியா? ஆடவர் உள்ளத்தை கவரத்தானே இறைவன் படைத்தான்? என்றெல்லாம் கூறி பர்தா கூடாது என்றே பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால் அப்படியல்ல. நெருப்பும் பஞ்சும் நெருங்கினாலே அபாயம்! என்பது போல் ஓர் ஆணும அந்நிய பெண்ணும் பார்த்தாலே பெரும் ஆபத்து! பெண்ணின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும். எந்த ஆண்மகனும் நாசமடைவது திண்ணம்! பர்தாவுக்குள் பதுங்கியிருக்க வேண்டிய பாவை பகிரங்கமாக வெளிவந்தால் அதுவும் நறுமணம் பூசி, ஆடை அலங்காரத்துடன் வீதிகளில் வலம் வந்தால் ஆண்களின் சலசலப்புத்திக்கு நல்ல தீனி படைத்தவளாக மாறிவிடுவாள். சீ.... ஒழுக்கக்கேடு சமூகத்தையே செல்லரித்துவிடும்!

பள்ளி முதல் கல்லூரி வரையிலும், அலுவலகங்களிலும் ஆண், பெண் பாகுபாடு இன்றி நெருங்கிப் பழகுவதால், பெண்களிடம் இயற்கையிலேயே இருக்க வேண்டிய நாணமும், நளினமும் சிதைந்து சீரழிந்து விடுகிறது. அத்தகையவர்களின் பெண்மை மரத்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் அவர்களது மணவாழ்வு மணமற்று, மகிழ்வற்று விவாகரத்து வரை போய்விடுகிறது. ஆணும், பெண்ணும் கலந்துரையாடிப் பழகும் தினசரிப் பழக்கமுள்ளவளின் கற்பு அனலிடை மெழுகாய் அழிந்துவிடும் என்பது நிச்சயம். ஏனெனில், ஓர் ஆணும், பெண்ணும் சந்தித்து கண் மூலமாகப் பெரும் இன்பம் காமத்தில் பாதி அல்ல, அதனிலும் பெரிது! என்பது வெள்ளிடைமலை. ஷைத்தானின் அம்பே பார்வையாகும்!

கருத்துகள் இல்லை: