சனி, 6 நவம்பர், 2010

ஈரான்:அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய நினைவுதினம் கொண்டாடப்பட்டது

தெஹ்ரான்,நவ.5:ஈரானின் மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய 31-வது ஆண்டுவிழா ஈரானில் கொண்டாடப்பட்டது.

இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தெஹ்ரானில் முன்பு அமெரிக்க தூதரகம் அமைந்திருந்த கட்டிடத்தின் முன்னால் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் ஒன்று கூடினர். பேனர்கள் மற்றும் கொடிகளுடன் வந்த மக்கள் திரள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கெதிராக கோஷங்களை எழுப்பினர்.

அமெரிக்க கைப்பாவையான ஷாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து இஸ்லாமிய புரட்சி வெற்றிப்பெற்று ஒருவருடம் முடிவடையும் முன்பு 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் பல்கலைக்கழக மாணவர்கள் தெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றினர்.

தேசத்துரோகிகள் சதித்திட்டம் தீட்டுவதற்காக பயன்படுத்தும் மையமாக அமெரிக்க தூதரகம் மாறிவிட்டது எனக் குற்றஞ்சாட்டித்தான் அதனை ஈரான் மாணவர்கள் கைப்பற்றினர்.

இஸ்லாமிய அரசை கவிழ்ப்பதற்கு அமெரிக்க தூதரகம் முயற்சி மேற்கொண்டதற்கான ஆதாரங்களை பின்னர் மாணவர்கள் வெளியிட்டனர். சர்வதேச சர்வாதிகாரத்திற்கெதிரான போராட்டத்தின் தினமாகத்தான் ஈரான் நவம்பர் 4 ஆம் தேதியை அனுஷ்டிக்கிறது.

ஈரான் இளைய தலைமுறையின் வீரத்தின் அடையாளம்தான் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய நிகழ்வு என ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

கருத்துகள் இல்லை: