வியாழன், 29 மே, 2014

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்தினால் பேரழிவுதான் : காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் யாசின் மாலிக்

பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடியும் அவரது சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தங்களது 3 முக்கிய கொள்கைகளை செயல்படுத்துவதில் மும்முரம் காட்டுகின்றனர். முஸ்லிம் தனிநபர் சட்டத்தை ஒழித்துவிட்டு பொதுசிவில் சட்டத்தை உருவாக்குவது, ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மக்களின் விருப்பங்களுக்கு எதிராக முழுமையாக இந்தியாவுடன் இணைப்பது என்கிற திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது. இந்த அபாயகரமான செயல்திட்டங்களை மோடி செயல்படுத்த முனைந்தால் ஒட்டுமொத்த துணைக்கண்டமுமே மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நிச்சயமாக இது பேரழிவுகளையே ஏற்படுத்தும். இவற்றில் இருந்து விடுபட்டு
அமைதியை உருவாக்க மோடி முனைய வேண்டும். மோடி அரசின் அண்மைய செயல்பாடுகள் அனைத்தும் அமைதியை முன்னெடுப்பதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இனவாத போக்கையே பின்பற்றுவதாக இருக்கிறது. காஷ்மீரத்து மக்களின் கருத்துகளைக் கேட்காமலேயே எப்படி
பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்திவிட முடியும்? பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
 நடத்துகிறார். மறுபுறமோ ஜம்மு காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிற 370வது பிரிவை நீக்குவது குறித்து அவரது இணை அமைச்சர் பேசுகிறார். இதன் மூலம் எப்படி இந்த அரசின் மீது நம்பிக்கை வரும்? லட்சக்கணக்கான காஷ்மீரிகளை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு
 இந்தியா- பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவுகளை அடைந்துவிட முடியுமா என்ன? ஜம்மு காஷ்மீரத்து மக்களைப் பொறுத்தவரையில் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் நட்புறவைத்தான் விரும்புகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த இருநாட்டு தலைவர்களுமே ஜம்மு காஷ்மீரிகளை மனிதர்களாகக் கூட பார்ப்பதில்லை. தங்களது உதடுகளில் காஷ்மீர் என்ற சொல்லையே உச்சரிக்க மறுக்கிறார்களே.. இப்படி நீங்கள் மவுனமாக இருந்து கொண்டே எப்படி காஷ்மீரத்து பிரச்சனையை தீர்க்கப் போகிறீர்கள்? காஷ்மீரத்து பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட உறவுகள் மேம்பாடு அடையும் என்று கனவு கண்டால் அது நிறைவேறாத ஒன்றாகவே இருக்கும்.







கருத்துகள் இல்லை: