சனி, 12 மார்ச், 2011

தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது



(12 Mar) திருச்சி, மார்ச் 11: தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது என்றார் த.மு.மு.க. மாநிலத் தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான எம்.எச். ஜவாஹிருல்லா. திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: மனிதநேய மக்கள் கட்சி முதன்முதலாக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 தொகுதிகளிலும் நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்ற கருத்துக்கு அ.தி.மு.க. எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இரட்டை மெழுகுவர்த்தி அல்லது தராசு சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் அனைத்து அம்சங்களிலும் மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் காவல் நிலையங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் 46 பேர் இறந்துள்ளனர். மோதல் கொலைகள் மூலம் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு ரூ.11,900 கோடி வீதம் கடந்த ஐந்தாண்டுகளில் ஏறத்தாழ ரூ.59,500 கோடி அளவுக்கு மணல் வளம் ஆளுங்கட்சியினரால் சுரண்டப்பட்டுள்ளது. மணல் அள்ளப்படுவதால் நீர்வளமும், நில வளமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இலவச கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம் மக்களை வஞ்சிக்கும் திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் வீடு கிடைக்கும் என நினைத்தவர்கள் தற்போது தங்களது வீடுகளை இழந்து நிற்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளாக மக்களை வஞ்சித்து வரும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது என்றார் அவர்.
source : http://newshunt.com/share?id=8411446