“60 இடங்களா, 63 இடங்களா என்பதல்ல பிரச்சனை, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக புலனாய்வு செய்துவரும் ம.பு.க., தனது குடும்பத்தினரை விசாரணைக்கு அழைக்கவோ அல்லது கைது செய்யவோ கூடாது என்று உறுதிமொழியை தி.மு.க. தலைவர் எதிர்பார்க்கிறார். அதில்தான் சங்கடம் உள்ளது” என்று டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தாக செய்திகள் கூறுகின்றன.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்ற மும்பையின் டி.பி.ரியால்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி (கடனாகவோ அல்லது பங்குகள் பெறவோ) கொடுத்த காரணம் என்ன? என்ற ம.பு.க.வின் வினாவிற்கு கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தால் திருப்திகரமான பதில் சொல்ல முடியாததால், அது தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரரான தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை விசாரிக்க வேண்டிய முடிவை ம.பு.க. எடுத்துள்ளதாம்.
அது மட்டுமின்றி, வீட்டு மனை விற்பனை நிறுவனமான டி.பி.ரியால்டிக்கு 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்ற முக்கிய கேள்விக்கும் உரிய பதிலை எதிர்பார்க்கிறது ம.பு.க. இதேபோல் யுனிடெக் எனும் மற்றொரு வீட்டு மனை விற்பனை நிறுவனமும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றுள்ளது. இதன் பின்னணியில் டாடா டெலிகாம் உள்ளதும், அதற்கு ரூ.1,650 கோடி கடன் வழங்கப்பட்டதும் எந்த அடிப்படையில் என்பதை ம.பு.க. நீதிமன்றத்திற்கு விளக்க வேண்டிய நிலை உள்ளது.
சென்னையில் உள்ள வோல்டாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் மிக மிக குறைந்த விலையில் விற்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து நீலகிரியில் ஒரு தேயிலைத் தோட்டம் வாங்கப்பட்டதும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக (ஜெயலலிதா அறிக்கை இதை சுட்டிக்காட்டுகிறது) இருப்பதால் அது பற்றியெல்லாம் உண்மையறிய கனிமொழியிடம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்தில் ம.பு.க. உள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
FILE
இதற்கு காங்கிரஸ் மிகவும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. ம.பு.க. விசாரணையை சாதாரண சூழலில் கட்டுப்படுத்திவிட முடியும். தற்போது 2 ஜி விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதால், அது எழுப்பிய பல வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டுமெனில் ‘தொடர்புடைய அனைவரிடமும்‘ விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ம.பு.க.விற்கு இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்தில் அதுதான் எல்லா வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளதால் இதில் மத்திய அரசு ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இச்சிக்கலில் மத்திய அரசின் நிலையை விளக்க கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை வந்து தி.மு.க. தலைமையை சந்திப்பதாக இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆக, எந்த காரணத்திற்காக கூட்டணிச் சிக்கல் ஏற்பட்டதோ அதற்குத் தீர்வு காண முடியாமல் இரு கட்சிகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசால் தனக்கு உதவ முடியும் என்று கருணாநிதி நினைக்கிறார். அது தங்கள் கையைவிட்டுப் போய்விட்ட நிலை என்று காங்கிரஸ் கூறுகிறது.
இந்த நிலையில்தான் இன்று காலையிலும் பேச்சுவார்த்தை டெல்லியில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.