புதன், 9 மார்ச், 2011

அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்... -அவுட்லுக் ஆங்கில வார இதழ் ஆய்வு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அவுட்லுக் ஆங்கில வார இதழும் எம்.டி.ஆர்.ஏ. நிறுவனமும் சேர்ந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 26-28 ஆகிய நாட்களில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகரபுறத்தைச் சேர்ந்த 626 பேர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2ஜி அலைகற்றை ஊழல் திமுகவை பெருமளவில் பாதித்துள்ளது இந்த ஆய்வில் புலப்பட்டது. இந்த ஆய்வில் பங்கு கொண்டவர்களில் 78.1 விழுக்காட்டினர், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெரும் பங்கு உள்ளதாக கருதினர். அ. ராசா கொள்ளையடித்ததாகக் கூறப்படும் 1.72 கோடி ஸ்பெக்ட்ரம் பணத்தினால் கருணாநிதியின் குடும்பத்தினர் பயனடைந்துள்ளதாக ஆய்வில் பங்குகொண்ட 73 விழுக்காட்டு மக்கள் நம்புகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுக்கள் திமுகவை பெருமளவு பாதிக்கும் என்று 71.9 விழுக்காட்டினர் கருத்துத் தெரிவித்தனர். இந்த தேர்தலில் மிகப்பெரும் பிரச்னையாக விலைவாசி உயர்வு அமையும் என்று 73 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி 54 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்றும், திமுக கூட்டணி 37.4 விழுக்காடு வாக்குகளைப் பெறும் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலிலிதா ஆகிய இருவரில் ஊழல் குறைவாக செய்தவர் யார் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என்றும் இந்த ஆய்வில் பங்கு கொண்டவர்களில் அதிகமானோர் தெரிவித்துள்ளனர். திமுக அரசின் நிர்வாகம் மிக மோசமானது என்று 48.4 விழுக்காடு மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.