சென்னை: இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில்
மத்திய அரசு தலையிட்டு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் கொழும்பு அருகே இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும்
அளுத்கமா, பேருவளை ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சிங்கள இனத்தைச்
சேர்ந்த பவுத்தத் துறவிகள் இசுலாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
இசுலாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகளைத் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.
மசூதிகள் மீதும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிங்கள, பவுத்த ஆதிக்க வெறியர்களின் இந்தத் தாக்குதலில் இதுவரை மூன்று
இசுலாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்
காயமடைந்துள்ளனர். ‘பொதுபலசேனா' என்னும் அமைப்பைச் சேர்ந்த புத்தத்
துறவிகளே இந்தக் கொடூரமான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இசுலாமியர்களின் புனித நூலான குர்ஆனையும் தீயில் எரித்து வெறியாட்டம்
ஆடியுள்ளனர். சிங்கள, பவுத்த இனவெறிக் கும்பலின் காட்டுமிராண்டித் தனமான
இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அயல்நாட்டுச் சுற்றுப் பயணத்திலிருக்கும் இராஜபக்சே வன்முறையில் ஈடுபடுவோர்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதாகத்
தகவல்கள் கூறுகின்றன. இதனை பவுத்தத் துறவிகளுக்கான எச்சரிக்கையாக
புரிந்துகொள்ள இயலாது; இசுலாமியர்களுக்கு எதிரான எச்சரிக்கையாகத்தான்
புரிந்துகொள்ள முடியும்.
எனவே, இந்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு சிங்கள அரசுக்குக் கடும்
எச்சரிக்கை விடுக்க வேண்டும். இசுலாமிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க
தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மை மக்களுக்கு
எதிராகவும் சிங்கள அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு பவுத்தத் துறவிகளின்
இந்த வெறியாட்டமே ஒரு சாட்சியமாக உள்ளது. எனவே, இலங்கையில் வாழும்
தமிழர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மைச்
சமூகத்தினருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு இந்திய அரசு உரிய வழிவகை காண
வேண்டும்
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக