திங்கள், 16 ஜூன், 2014

சீட் வாங்கித் தர 'தரகு' வேலை பார்த்த ராம்தேவ்.. பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ வெளியிட்ட தகவல்கள்

 
டெல்லி: லோக்சபா தேர்தலின் போது பாரதிய ஜனதாவில் போட்டியிட பலருக்கும் சீட் வாங்கித் தந்த தரகு வேலையில் யோகா குரு பாபா ராம்தேவ் ஈடுபட்டார் என்பதை பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யும் பாடகருமான பாபுல் சுப்ரியோ அம்பலப்படுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தின் அசன்சோல் லோக்சபா தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக நின்று வென்றவர் பாபுல் சுப்ரியா. வங்கமொழி பத்திரிகையான அனந்தபஜார் பத்திரிகாவில் நேற்று அவர், தமக்கு பாஜகவில் எப்படி சீட் கிடைத்தது என்ற திடுக்கிடும் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். 
இதுபற்றி பாபுல் சுப்ரியோ எழுதியுள்ளதாவது: சீட் வாங்கித் தர 'தரகு' வேலை பார்த்த ராம்தேவ்.. பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ வெளியிட்ட திடுக் தகவல்கள பிப்ரவரி 28-ந் தேதியன்று விமானத்தில் பயணம் செய்த போது எனக்கு அருகே பாபா ராம்தேவ் அமர்ந்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிட பலருக்கும் சீட் வாங்கிக் கொடுத்த கதையை விவரித்துக் கொண்டிருந்தார் ராம்தேவ். அப்போது யதேச்சையாக, எனக்கும் பாஜகவில் போட்டியிட சீட் வாங்கிக் கொடுங்கள்.. எனக்கு சீட் வாங்கித் தரவில்லையெனில் நீங்கள் சீட் வாங்கித் தரும் ரகசியத்தை பத்திரிகைகளில் சொல்லிவிடுவேன் என்று நகைச்சுவையாக மட்டும்தான் கூறினேன். பின்னர் என்னுடைய தொலைபேசி எண்ணை குறித்துக் கொள்ளுமாறு அவரது உதவியாளரிடம் கூறினார். அதன் பிறகு மார்ச் 1-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம் "பாபா உங்களைப் பற்றி எங்களிடம் சொல்லியிருக்கிறார். உங்களால் எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்? 70 லட்சம் ரூபாய் என்பது லிமிட்.. அதற்கு மேலும் சிலர் செலவு செய்கிறார்கள் என்றார். ஆனால் நானோ, மோடிஜியை நேசிக்கிறேன். அதனால்தான் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.. என்னால் பணம் எல்லாம் செலவு செய்ய முடியாது என்று கூறினேன். அதைத் தொடர்ந்து 3 நாட்களுக்குப் பின்னர் ராம்தேவ், என்னை தொலைபேசியில் அழைத்தார். அப்போது, உங்களுக்கு சீட் உறுதியாகி இருக்கிறது என்றார். நானோ என்னால் பணம் செலவழிக்க முடியாது என்றேன். அதற்கு சிரித்துக் கொண்டே பாபா ராம்தேவ், அதை பாரதிய ஜனதா கட்சி பார்த்துக் கொள்ளும். ஆனால் நீங்கள் என்னிடம் பவன் முக்தா ஆசனம் (வாயுவை எப்படி உடலில் இருந்து வெளியேற்றுவது) கற்றுக் கொள்வேன் என்று உறுதியளிக்க வேண்டும் என்றார். மார்ச் 7- ந் தேதியன்று மேற்கு வங்க பாரதிய ஜனதா தலைவர் ராகுல் சின்ஹா எனக்கு போன் செய்தார். அசன்சோல் தொகுதியில் நீங்கள் போட்டியிடுவதில் ஆட்சேபனை எதுவும் இருக்கிறதா என்றார். நான் ஏன் அசன்சோல் தொகுதி என்றேன். அதற்கு, அசன்சோல் ஹிந்தி பெல்ட். நீங்கள் அந்த மொழியை சரளமாக பேசுகிறீர்கள். நாம் கடினமாக வேலை செய்தால் அங்கு வென்றுவிட முடியும் என கருதுகிறேன் என்றார். இவ்வாறு அந்த பத்திரிகையில் பாபுல் சுப்ரியோ எழுதியுள்ளார். இந்த கட்டுரை பற்றி பாபுல் சுப்ரியோவிடம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட கேட்ட போது, இதன் தொடர்ச்சி அடுத்த வாரமும் வர இருக்கிறது.. அதில் இன்னமும் சுவாரசிய தகவல்கள் இடம் பெறும் எனக் கூறி கொளுத்திப் போட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: