டெல்லி: இந்த நாடு இன்னொரு முறை பிளவுபட்டால் அதற்கு ராஜ் தாக்கரே போன்ற சக்திகள் தான் காரணமாக இருப்பார்கள் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் காட்டமாகக் கூறினார்.
இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்காக மகாராஷ்டிர சட்டசபையில் சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ அபு ஆஸ்மி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டது குறித்து லாலு கூறுகையில்,
ராஜ் தாக்கரேவின் எம்எல்ஏக்கள் நாட்டின் தேசிய மொழிக்கும் அரசியல் சட்டத்துக்கும் விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இதற்கு மேல் எந்த காரணமும் வேண்டாம். அந்த நடவடிக்கை உடனே எடுக்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், இந்த நாடு இன்னொரு முறை பிளவுபட்டால் அதற்கு ராஜ் தாக்கரே போன்ற சக்திகள் தான் காரணமாக இருப்பார்கள் என்றார்.
தேச துரோகிகள்-பாஸ்வான்:
லோக் ஜன் சக்தி தலைவரான ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில், ராஜ் தாக்கரே கட்சியினர் தேச துரோகிகள். இது இந்திக்கு மாத்திரமல்ல, இந்த நாட்டின் ஒற்றுமை உணர்வுக்கு நேர்ந்துள்ள அவமானம் என்றார்.
பெருமை தேடி தந்த அபு-முலாயம் பாராட்டு:
இந் நிலையில் சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவர் கூறுகையில்,
ராஜ் தாக்கரே ஆட்களின் மிரட்டலையும் மீறி இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்த என் கட்சியின் எம்எல்ஏவான அபு ஆஸ்மியை முதலில் பாட்டுகிறேன். அவரது தைரியம் மெச்சக்கதக்கது.
தனது செயல் மூலம் நாட்டுக்கும் தேசிய மொழிக்கும் அவர் பெருமை தேடித் தந்துவிட்டார். சில கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும்போது தாக்குதல்கள் நடக்கத்தான் செய்யும். அதைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள் என்றார்.
'வேடிக்கை பார்க்கும் காங்-பவார் கட்சி':
சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சி்ங் கூறுகையில், அபு ஆஸ்மிக்கு ராஜின் ஆட்கள் ஒரு வாரமாக மிரட்டல் விடுத்து வந்த நிலையில் சட்டசபையில் போதிய காவலர்களை ஏன் நிறுத்தவில்லை?. தாக்குதல் நடக்கட்டும் என்று தானே.. ராஜ் மனம் கோணாமல் நடந்து கொள்வதற்குத் தானே.
சட்டசபையில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு தான் காரணம். ராஜை விட அவர்கள் மீது தான் நான் அதிக குற்றம் சாட்டுவேன் என்றார்.
4 ஆண்டு சஸ்பெண்ட்:
இந் நிலையில் அபு ஆஸ்மியை தாக்கிய மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்எல்ஏக்கள் சிஷிர் ஷிண்டே, ரமேஷ் வஞ்சலா, ராம் காதம், வசந்த் கீதே ஆகிய 4 பேரும் 4 ஆண்டுகளுக்கு சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை விலக்கக் கோரி நீதிமன்றத்தை நாடப் போவதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிஷிர் ஷிண்டே இன்னும் எம்எல்ஏவாகக் கூட பதவியேற்கவில்லை. பதவி ஏற்கும் முன்பு அவரை சஸ்பெண்ட் செய்தது செல்லாது என்று ராஜ் தாக்கரேவின் ஆட்கள் 'லா பாயிண்ட்' பேசி வருகின்றனர்.
ஆஸ்மியை கெரோ செய்த சிவசேனா:
இந் நிலையில் இன்று பால் தாக்கரேவின் சிவசேனா கட்சியினர் சட்டதபைக்கு வந்த அபு ஆஸ்மியை கெரோ செய்தனர்.
பால் தாக்கரேவுக்கு வயதாகிவிட்டாலும் சின்னப் பையன் மாதிரி பேசுவதாக அபு ஆஸ்மி கூறியதற்கு கண்டனம் தெரிவித்த சிவ சேனா எம்எல்ஏக்கள், ஒழுங்காகப் பேசினால் தான் இனி மகாராஷ்டிரத்துக்குள் நீ நடமாட முடியும் என எச்சரித்தனர்.
முன்னதாக தனது சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள கடிதத்தில், அபு ஆஸ்மி சிவசேனா கட்சியினரிடம் சிக்கினால் 'தந்தூரி' ஆகிவிடுவார் என்று கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக