சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமலஹாசனிடம் ஒரு பத்திரி்கையாளர், "உங்களின் அடுத்த இலக்கு ஆஸ்கர் விருதுதானே?" என்று கேட்டார். அதற்குக் கமல், "ஆஸ்கர் விருது என்பது உலகத்தரம் வாய்ந்ததல்ல. அது அமெரிக்கத் தரம் வாய்ந்தது. அமெரிக்காவின் தரத்தைத்தான் நாம் இராக்கிலே பார்க்கிறோமே!" என்று பதிலளித்தார். உண்மையும் அதுதான். அதுபோலவே மேற்கத்தியர்களால் வழங்கபெறும் விருதுகள் அவர்களின் சிந்தனைகளையும் கருத்துகளையும் ஏற்பவர்களுக்கே வழங்கப் படுவது மீண்டுமொரு நிரூபிக்கப் பட்டுள்ளது. தகுதியில்லாத அமெரிக்க அதிபர் ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்கியதன் மூலம் அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா போன்றவர்களை நோபல் கமிட்டி அவமானப் படுத்தியிருக்கிறது!
ஒபாமா எந்த விதத்தில் இவ்விருதிற்குப் பொருத்தமானவர் என்பது நோபல் குழுவிற்கே வெளிச்சம். பெண்களையும் குழந்தைகளையும் -குறிப்பாக இஸ்லாமியர்களைக்- கொல்வதையேக் கொள்கையாக கடைப்பிடித்து வரும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் ஒபாமாவும் ஒருவர். அமெரிக்காவின் பாரம்பர்யமிக்க இக்கொள்கையினைச் சற்றும் பிசகாமல் கடைப்பிடித்து வரும் ஒபாமாவிற்கு இவ்விருதினை வழங்கியதன் மூலம் இவ்விருதின் தராதரத்தினை உலகம் அறிந்துக்கொள்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை நோபல் கமிட்டி வழங்கியுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு, ஒபாமா கடந்த பத்து மாதங்களில் சாதித்தவை யாவை?
-
மற்ற அமெரிக்க அதிபர்களைவிட, "அமைதி, அமைதி வேண்டும்" எனப் பத்திரிகையாளர்களிடம் பேட்டி என்ற பெயரில் கூடுதலாக பம்மாத்துச் செய்வதாலா?
-
ஆப்கானிய அப்பாவிகளைக் கொல்வதற்கு மேலும் ஆயிரக்கணக்கான கொடுங்கோல் இராணுவத்தினை அனுப்ப முயலுவதாலா?
-
தீவிரவாதிகள் என்ற பெயரில் தினம் தினம் குழந்தைகள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி பாகிஸ்தானியர்களை ஆளில்லா விமானத்தின் மூலம் கொன்றொழிப்பதாலா?
-
பொருளாதாரத் தடை என்ற பெயரில் லட்சக்கணக்கான இரானியர்களை இன்னும் துன்பப் படுத்தத் துடிப்பதாலா?
-
தவறான பொருளாதாரக் கொள்கையால் உருவாக்கப்பட்டப் பொருளாதார வீழ்ச்சியினால் உலகில் பீதியை ஏற்படுத்தி, தமது ஆயுத விற்பனையைப் படுஜோராக விரிவு படுத்துவதாலா?
-
அமெரிக்காவின் கள்ளப் பிள்ளை இஸ்ரேலின் பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து ஆசிர்வதிப்பதாலா?
-
"பாலஸ்தீனில் வரலாறு காணாத பெரும் போர்க் குற்றத்தினை அப்பாவிகள் மீது இஸ்ரேல் அரங்கேற்றியது" என்ற உண்மையை யூதராக இருந்தும் உலகிற்கு ஆதாரத்துடன் நிரூபித்த கோல்டுஸ்டோனின் அறிக்கையை வழக்கம்போல் தமது வீட்டோ என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திக் கிடப்பில் போட்டதாலா?
-
தமக்கு ஒத்து ஊதாத ஆட்சியாளர்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு உள்நாட்டுக் குழப்பத்தையும் கிளர்ச்சியையும் உருவாக்குவதற்குத் தமது உளவுத்துறையைப் பயன்படுத்துவதாலா?
-
மனித இனம் பார்த்திராத சித்ரவதைகளை அபூகுரைப் மற்றும் குவாண்டனமோ சிறைக் கூடங்களில் அரங்கேற்றுவதாலா?
-
அரபு நாடுகளை அச்சுறுத்துவதற்காகத் தன் கள்ளப் பிள்ளை இஸ்ரேலுக்கு மேலும் மேலும் ஆயுதங்களை வாரி வழங்குவதாலா?
-
கோடிக்கணக்கான குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் ஆப்ரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது வட்டி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் தமது கட்டுபாட்டில் இயங்கும் உலக வங்கியினை மென்மேலும் கொள்ளையடிக்க ஊக்கப்படுத்துவதனாலா?
-
அமைதி, பேச்சுவார்த்தை என்று பாகிஸ்தானும் இந்தியாவும் நெருங்கி வரும்போது இந்தியாவைப்பற்றி பாகிஸ்தானிடமும், பாகிஸ்தான் பற்றி இந்தியாவிடமும் போட்டுக் கொடுப்பதனாலா?
இவற்றில் எந்தக் காரணத்திற்காக ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கிறது?
வாங்கிய பிறகாவது நோபல் விருதிற்குத் தன்னைத் தகுதியானவராக மாற்றிக் கொள்ள வேண்டுமேயானால் அமெரிக்க அதிபர் ஒபாமா மிக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். அதற்காக,
-
மனித இனத்திற்கு எதிராகத் தமக்கு முன்னாள் இருந்த அமெரிக்க அதிபர்கள் செய்த அநியாயங்களுக்காகவும் அக்கிரமங்களுக்காகவும் அப்பாவி மக்களிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடப் போகிறாரா?
-
தம்மிடமுள்ள ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களில் ஒன்றையாவது அழிக்கப் போகிறாரா?
-
அமெரிக்காவின் கள்ளப் பிள்ளை இஸ்ரேலின் போர்க் குற்றங்களையும் கொடுஞ் செயல்களையும் கண்டிக்கவாவது போகிறாரா?
-
பாலஸ்தீன மக்களை ஏமாற்றுவதை நிறுத்தத்தான் போகிறாரா?
-
இராக்கிலும் ஆப்கனிலும் தங்கள் இராணுவத்தினர் புரியும் அடாவடிகளை நிறுத்துவதற்கு உத்தரவிடப் போகிறாரா?
-
தனது நாட்டு இராணுவத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு பில்லியன் பில்லியன் டாலர்களை நஷ்டயீடாக வாரி இறைக்கப் போகிறாரா?
-
அமெரிக்கா என்பது உலகச் சட்டாம்பிள்ளை என்று காட்டுவதற்காக உலகில் பல பகுதிகளில் நிறுத்தி வைத்திருக்கும் தமது இராணுவத்தினரை திரும்ப அழைக்கத்தான் போகிறாரா?
இவற்றுள் எதையுமே செய்யாதவரை அமைதிக்கான நோபல் விருதுக்கு ஒபாமா எவ்வகையிலும் பொருத்தமானவருமில்லை; தகுதியானவருமில்லை!
ஆக்கம்: சகோ. ஃபைஸுர் ஹாதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக