நானூற்றி ஐம்பது ஆண்டுகால வரலாற்று சின்னமாக கம்பீரமாக காட்சிதந்த இறையில்லமாம் பாபர் மஸ்ஜித், சட்டத்தை பாதுகாக்கும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, சட்டமன்றத்தின் முதல்வரான கல்யான் சிங் எனும் இந்துத்துவா அரசின் ஒத்துழைப்போடு, மத்திய அரசின் கண்டுகொல்லாமை உதவியோடு உலகம் சாட்சியாக பட்டப்பகலில் அத்வானி-முரளிமனோகர் ஜோஷி-உமாபாரதி போன்றவர்களின் உத்தரவின் பேரில் இந்துத்துவா பயங்கரவாதிகள் பாபர் மஸ்ஜிதை தரைமட்டமாக்கினர். பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் யார் என்று கேட்டால் பச்சிளம் குழந்தையும் பட்டென்று அடையாளம்காட்டும் இந்த பயங்கரவாதிகளை! ஆனாலும் மத்தியில் அன்று இருந்த பொம்மை பிரதமர் ராவ், முஸ்லிமகளின் சிந்தனையை திசைதிருப்பும் வகையில், இடிக்கப்பட்ட அதே இடத்தில் மஸ்ஜித் கட்டித்தரப்படும் என்று கூறியதோடு, பியார்ச்சினையை ஆரப்போடுவதற்கு வழக்கமாக ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படும் ஆணையம் ஒன்றை போட்டார்.
அந்த லிபரான் கமிஷன் 'மெகா சீரியலாக' 48 தடவை நீட்டிக்கப்பட்டு, 11 ஆண்டுகள் கழித்து 8 கோடியை காலிசெய்தபின் அறிக்கையை சமர்ப்பித்தது. லிபரான் அவர்கள் தனது அறிக்கையை சமர்ப்பித்த அந்த வேளையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நடந்துகொண்டுதான் இருந்தன. காங்கிரஸ் அரசுக்கு உண்மையில் முஸ்லிம்கள் மீது அக்கறை இருந்திருக்குமானால், அந்த கூட்டத்தொடரிலேயே அறிக்கையை வைத்து விவாதித்து இருக்கும். ஏற்கனவே சச்சார் அறிக்கையை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டதுபோல், இதையும் கிடப்பில் போட்டது. ஆனாலும் அனைத்திற்கும் ஆற்றலுடைய அல்லாஹ், பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் நெருங்கிவரும் வேளையில் லிபரான் அறிக்கையை 'லீக்' ஆக செய்துவிட்டான். அந்த அறிக்கையும் அத்வானி-வாஜ்பேயி உள்ளிட்ட இந்துத்துவாக்களை குற்றவாளியாக அடையாளம் காட்டுகிறது.
- பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு வாஜ்பேயி-அத்வானி- முரளிமனோகர் ஜோஷி மற்றும் இந்து அமைப்புகளே காரணம். இதற்கான நேரடி சாட்சிகள் அடங்கிய ஆதாரங்கள் உள்ளன.
- பாபர் மஸ்ஜிதை எப்படி இடிக்கவேண்டும் . அந்த சமயத்தில் யார் என்ன என்ன செய்யவேண்டும் என்று மிக மிக திட்டமிட்டு நடத்தப்பட்டது.
- வாஜ்பேயி-அத்வானியை குற்றமற்றவர்கள்- நிரபராதி என்று கூறிவிடமுடியாது.
- பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் சங்பரிவார் ஏற்பாடு செய்த கரசேவகர்கள் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒருங்கிணைத்து அழைத்துவரப்பட்டுள்ளனர். மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு இவர்களுக்கு பண பட்டுவாடா நடந்துள்ளது. ராம ஜென்ம பூமி திட்டத்திற்காக அதன் தலைவர்கள் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து வங்கியில் சேமித்து வைத்திருந்தனர். மஸ்ஜித் இடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மஸ்ஜிதுக்குள் எவ்வாறு நுழையவேண்டும் என்றும் வழிகாட்டப்பட்டுள்ளது.
- மஸ்ஜிதை இடித்தவர்களின் முகம் மூடப்பட்டிருந்தது.
- பாபர் மஸ்ஜிதை இடிக்கவேண்டும் என்று வினய்கத்தியார்-உமாபாரதி ஆகியோர் பலமுறை பேசி கரசேவகர்களிடம் ஆவேசத்தை தூண்டிவிட்டனர். அசோக் சிங்கால், சிரிராஜ் கிஷோர் ஆகியோரும் கரசேவகர்களை பாபர் மஸ்ஜித் இடிப்புக்காக வழிநடத்தினார்கள். எனவே மஸ்ஜித் இடிப்பில் பாஜக மற்றும் சங் பரிவார மூத்த தலைவர்களுக்கு அதிக பங்குண்டு.
இவ்வாறாக மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்களிப்பை அடையாளம் காட்டும்அறிக்கை, நரசிம்மராவிற்கு நற்சான்று வழங்குவது நெருடலை தருகிறது. மாநில அரசு மத்திய அரசிடம் எவ்வித உதவியும் கோரவில்லை. மாநில கவர்னர் பரிந்துரை செய்யாமல் மத்திய அரசால் மாநில அரசின் விவகாரத்தில் தலையிட முடியாது என்கிறார் லிபரான். சட்ட அடிப்படையில் இது சரி என்றாலும், மாநில அரசு சங்க்பரிவார அரசாக இருக்கும் நிலையில் மஸ்ஜிதை இடிக்கும்பணியை முன்வந்தது செய்து கொண்டிருக்கும் நிலையில், கூப்பிடு தொலைவில் இருந்த மத்திய அரசின் இராணுவம் கண்டுகொள்ளாமல் இருந்தது நியாயமானதா..? இது எப்படி இருக்கிறதென்றால், உடலில் தீப்பிடித்து எரியும் ஒருவனை காப்பாற்ற அவன் அழைத்தால்தான் வருவேன் என்று சொல்வதுபோல் உள்ளது. மாநில அரசு செயலிழந்தால் அங்கு சட்டம் ஒழுங்கை நலைநாட்டுவது மத்திய அரசின் கடமையல்லவா..? மாநில அரசின் காவலர்கள் மஸ்ஜித் இடிப்பின்போது கண்மூடிக்கொண்டபோது, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அங்கு மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது தாமாகவே முன்வந்தது மஸ்ஜிதை காக்கவேண்டியது மத்திய அரசல்லவா..?
சரி! இது ஒருபுறமிருக்க, மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டித்தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் நரசிம்மராவ். அதை நிறைவேற்ற தனது ஆயுளில் சிறு துரும்பையும் அசைக்காத ராவ் குற்றவாளி இல்லையா..? மேலும் பாபர் மஸ்ஜித் சம்மந்தமான முஸ்லிம் அமைப்புகள், கோர்ட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் இந்த வழக்கு விஷயத்தில் பிரச்சினையை தீர்க்க போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சுயநலத்துடன் நடந்துகொண்டனர். அவர்கள் மீதும் தவறு உள்ளது என்றும் கூறியுள்ளார் லிபரான். இது உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் கண்டனத்திற்குரியவர்கள். அதே நேரத்தில் லிபரான் ஆணையம் முன்பாக அத்வானி போன்றோர் ஆஜராகாமல் இழுத்தடித்ததையும், பலமுறை சம்மன் அனுப்பப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆக, அறிக்கை வெளியாகியுள்ளநிலையில், அறிக்கையில்தான் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தப்பட்ட வில்லையே என்று மத்திய காங்கிரஸ் அரசு கண்டுகொல்லாமையை கடை பிடிக்காமல் உடனடியாக அதிகார பூர்வமாக அறிக்கையை அவையில் தாக்கல் செய்யவேண்டும். விவாதம் நடத்தப்படவேண்டும். சம்மந்தப்பட்ட பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவேண்டும். மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட்டு முஸ்லிம்களிடம் வழங்கப்படவேண்டும்.இதுதான் காங்கிரஸ் பாபர் மஸ்ஜித் விசயத்தில் முஸ்லிம்களுக்கு இழைத்த துரோகத்திற்கு பரிகாரமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக