புதன், 4 நவம்பர், 2009

அரசியல்வாதிகளின் அலம்பலும்- மக்கள் படும் இன்னலும்!

இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு போக்குவரத்து நெரிசல்தான். இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் எளியதவனையில் கிடைப்பதுதான். ஆயிரம் ரூபாய் முன்பணம் கட்டினால் அடுத்த அரைமணிநேரத்தில் ஒரு டூவீலர் சாவி உங்கள் கையில் என்ற அளவுக்கு பைனான்சியர்களின் எண்ணிக்கை பெருத்துவிட்டது . இவ்வாறாக எளிய தவணையில் வாகனங்கள் கிடைப்பதால் சைக்கிள்களுக்கு குட்பை சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிள் எனும் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டியதன் விளைவு சென்னை போன்ற பெருநகரங்களில் திரும்பிய பக்கம் எல்லாம் போக்குவரத்து நெரிசல் மயம். இந்த நெரிசலில் நீந்தி மக்கள் உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு செல்வதே குதிரை கொம்பாக இருக்கும் நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் சாதி சங்கங்கள் மற்றும் பல்வேறு ஊழியர்கள் நடத்தும் தீடீர் சாலைமறியல் ஒருபுறம். அதையும் சகித்துக்கொண்டு காத்துகிடந்து பிறகு வண்டியை கிளப்பினால், அமைச்சர் வருகிறார்-முதல்வர் வருகிறார் -பிரதமர் வருகிறார், அவர் வருகிறார் இவர் வருகிறார் என்று ஒரு மணிநேரம் முன்பாகவே சாலைகள் சீல்வைக்கபடுகின்றன. நம்ம அரசியல்வாதிகள் எப்ப சொன்ன நேரத்துல வந்தாங்க...? சாவகாசமாக வருவார்கள். அதுவரை பயணிகள் மட்டுமன்றி, அலுவலகம் செல்வோர், கல்வி சாலைகளுக்கு செல்வோர், அவசர வேலையாக செல்வோர், அவசர மருத்துவம் நாடி ஆஸ்பத்திரி செல்வோர் ஆகியோர் அந்த அரசியல்வாதி வந்து அந்த சாலையை கடக்கும்வரை காத்து கிடக்கவேண்டும். அல்லது வேறு சாலையில் பலகிலோ மீட்டர் சுற்றி தமது இடத்தை அடையவேண்டும். தாம் சொகுசாக செல்வதற்காக மக்களை காக்கவைப்பது எந்தவகையில் நியாயம் என்று எந்த அரசியல்வாதிகளும் சிந்திப்பதில்லை. அவ்வாறு மக்களை துச்சமென மதிப்பதால் இவர்கள் செய்யும் இந்த அலப்பறையில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கவேண்டியுள்ளது. நேற்று கூட பிரதமர் கலந்து கொண்ட நிகச்சிக்காக சாலை சீல் வைக்கப்பட, உரிய நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்லமுடியாததால் ஒரு சிறுநீரக நோயாளி உயிரிழந்ததாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

எனவே, இந்த அரசியல்வாதிகள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களுக்காக சாலையை சீல் வைப்பதும், வேறு பாதைக்கு மாற்றி விடுவதும் நிறுத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகளும் மக்களோடு மக்களாக பயணிக்கவேண்டும். மக்களை போல் அவர்களும் போக்குவரத்து நெரிசலை உணரவேண்டும். அப்போதுதான் மக்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு விளங்கும். அரசியல்வாதிகள் உரிய நேரத்திற்கு நிகழ்ச்சியில் பங்கெடுக்கவேண்டும் என்றால், அலுவலகம்செல்லும் ஊழியன் எப்படி முன்கூட்டியே கிளம்புகிறானோ அதுபோன்று அரசியல்வாதிகளும் முன்கூட்டியே கிளம்ப வேண்டும். அதைவிடுத்து தான் ஒருவருக்காக பலரை கஷ்டத்துக்கு உள்ளாக்குவது அரசியல்வாதிகளாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அநியாயமாகும். ஒரு அரசியல்வாதிக்காக செய்த கெடுபிடியால் ஒரு உயிர் போயுள்ளதே! அப்படியாயின் ஒரு சாமான்யனின் உயிரின் மதிப்பு அவ்வளவுதானா..? சிந்திக்க வேண்டுகிறோம். அமெரிக்கக் அதிபர் ஒபாமா சாதரணமாக சர்ச்சுக்கு போய் வருகிறார் . அவர்மனைவி சர்வ சாதரணமாக மார்க்கட்டில் போய் கூடையில் காய்கறி வாங்கிவருகிறார். அங்கெல்லாம் இதுபோன்ற அடாவடிகள் இருப்பதாக தெரியவில்லை. நாமறிந்தவரை அரபு நாட்டின் மன்னரோ-கவர்னரோ சாலையில் பயணித்தால் போக்குவரத்து நிறுத்தப்படுவதில்லை. மாறாக அவர் மக்களோடு மக்களாக வருகிறார் . அவர் வரும்போது மட்டும் சிக்னல் ஓப்பனாக விடப்படுகிறது அவ்வளவுதான். ஒரு நாட்டின் மன்னராகவே இருந்தாலும் 'பந்தா' இல்லாமல் இந்த அரபுலக மன்னர்கள் திகழ்வதற்கு அவர்கள் ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய வழிமுறையே காரணமாகும். ஆம்! உலகை நேர்வழி படுத்த, உலகை படைத்த இறைவனால் அனுப்பப்பட்ட உலக தூதர் முஹம்மத் [ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறை பாரீர் ;

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
"நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்" என்று பதிலளித்தார்கள்
ஆதாரம்;புஹாரி எண் 2465

எனவே, இஸ்லாம் ஒன்றுதான் வணக்கத்தோடு-வாழ்க்கையையும் ஒரு சேர சொல்லித்தந்த மார்க்கமாகும். இந்த மார்க்கத்தை பின்பற்றினால் அனைவரும் பிறரின் நலம் நாடும் ஒருவராக மாறுவது திண்ணம்.

கருத்துகள் இல்லை: