சனி, 19 மே, 2012

மாணவர் இந்தியா – முதல் மாவட்ட மாநாடு

இறைவனின் திருப்பெயரால்..



கூத்தாநல்லூர் – நகராட்சி அலுவலகம் முன்பாக 17.5.12 மாலை 4 மணியளவில், மாணவர் இந்தியா அமைப்பின் முதல் மாவட்ட மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடத்திய வன்முறை, பற்றியெறியும் பாலஸ்தீன விடுதலை களம், ஈராக்கில் அமெரிக்காவின் அட்டூழியம், காஷ்மீர் கண்ணீர் காட்சிகள், குஜராத் கலவரம் ஆகியவற்றின் புகைப்பட கண்காட்சியும், மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவ முகாம், கல்வி நிறுவனங்களின் அரங்கம், சட்ட ஆலோசனை அரங்கம் போன்றவைகளும் இடம் பெற்று இருந்தன.
மாவட்ட தலைவர் K.H. நூர்தீன் அவர்கள் தலைமையெற்க, நீதிபோதனை உரையினை S.P யூசுப் அவர்கள் நிகழ்த்த, நிகழ்ச்சி தொகுப்பு உரையினை டாக்டர். முஹம்மது சர்வத்கான் M.B.B.S அவர்களும், சிறப்புரையினை R. பிரபு தாஸ் – மாவட்ட வக்கீல்கள் அணி செயலாளர் அவர்கள் நிகழ்த்தினார்கள். இம்மாநாட்டில், மாநில பொறுப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக், செயற்குழு உறுப்பினர் A. நாச்சிக்குளம் தாஜ்தீன் மற்றும் தமுமுக மமக நகர, கிளை நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி அவர்களின் உரையின் சில பகுதிகள்..
”தமுமுகவின் வளர்ச்சிப்பாதையினை மாணவர் இந்தியா நன்றாக கவனிக்க வேண்டும். மாணவர் இந்தியாவின் அமைப்பு 2000 ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது தான். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்று செயல் படுத்த முடியவில்லை. ஆனால் இன்று மாணவர் இந்தியா அமைப்பு நன்றாக செயல்படும் அமைப்பாக உள்ளது.”
மமக மாநில பொது செயலாளர் M. தமீமுன் அன்சாரி உரையின் சாராம்சம்..
”இழந்த உரிமைகளை மீட்க பிறந்தது தான் தமுமுக, அதனை பின்தொடர்ந்து வந்தது மமக. 18 ஆண்டுகள் கடும் உழைப்பு, பல போராட்டங்கள், கடந்த காலத்தில் நாம் ஆற்றிய தியாகங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நாம் மனதில் பதிவு செய்ய வேண்டும். வரலாற்று சுவடுகளை எடுத்து பார்த்தால் மாணவர்களும், இளைஞர்களும் தான் மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளார்கள்”.
தமுமுக மமக மாநில தலைவர் J.S. ரிபாயி அவர்களின் உரையின் சாராம்சம்..
”செல்போன் கலாச்சாரம் நம் சமுதாயத்தை சீரழித்து விட்டது. நம் சமுதாயத்தில் செல்போனால் வேலி தாண்டிய வெள்ளாடாக பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மாறி விட்டார்கள்.”
தமுமுகவின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமாகிய M.H ஜவாஹிருல்லா M.B.A. M.Phil., Ph.D., அவர்களின் உரையிலிருந்து சில பகுதிகள்..
”இருண்ட காலத்தில் இருந்த சமூகத்தில் அனைத்து துறைகளிலும் தனித்தன்மையினை உருவாக்கியவர் நபி (ஸல்) அவர்கள் என்றால் மிகையாகாது. இஸ்லாம் வரலாற்றில் இளம் வயதில் தன்னுயிரினை தந்தவர் அன்னை சுமைய்யா. ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டதில் பலர் இளைஞர்கள் என்பதும் வரலாற்று குறிப்பு தான். இளைய சமுதாயம் நினைத்தால் பலவற்றை சாதிக்கலாம்.
மதுவினால் பல இளைஞர்கள் சீரழிந்து போய் கொண்டு இருக்கிறார்கள். ஓராண்டு கால சாதனையை சிறப்பிக்கும் அதிமுக அரசு வளமான தமிழகமாக மாறுவதற்கு பூரண மதுவிலக்கு அவசியம் என்பதினை பற்றி சட்டமன்றத்தில் 16.5.12 அன்று பேசி இருக்கிறேன்.
இம்மாநாட்டில் முத்துப்பேட்டையை தனித்தாலுக்காகவும், கூத்தாநல்லூரை தனித்தாலுக்காக மாற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3000 த்துக்கும் மேற்பட்ட கலந்துக்கொண்ட இம்மாநாடு இரவு 11.30 மணிக்கு முடிவடைந்தது.

செவ்வாய், 15 மே, 2012

கூத்தாநல்லூரில் மாணவர் இந்தியா மாநாடு


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் முதல் மாவட்ட மாநாடு மே 17 அன்று நடைபெற உள்ளது. ம.ம.க. மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும், மாணவர் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சர்வத் கான் தலைமையில் மாணவர் படையும் மாவட்டமெங்கும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

இந்த மாநாட்டையொட்டி மதியம் 4 மணி முதல் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற கல்வியாளர்கள், கல்வி குறித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். மற்றொரு அரங்கில் இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் சட்ட ஆலோசனை அரங்கம், மருத்துவ பரிசோதனை ஆய்வு அரங்கம், புத்தக கடைகளின் கண்காட்சி ஆகியவற்றுடன் பல்வேறு கல்வி நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி மதியம் 4 மணி முதல் mmklive.com மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் அணி, அணியாக திரண்டு வரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டுப் பணிகள் குறித்து மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, மமக மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவ்வப்போது கலந்தாலோசித்து வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலமெங்கும் மாணவர் இந்தியாவை கட்டியமைக்கும் பணிகளில் ஒரு பகுதியாக இம்மாணவர் மாநாடு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 14 மே, 2012

யா அல்லாஹ் இந்த தாயின் நிலை உலகில் யாருக்கும் வராமல் இருக்க உன்னிடம் துவா செய்கிறேன்







அஸ்ஸலாமு அலைக்கும் ,

எனது பெயர் ஜீனத் வயது 60 / 2008 , எனது கணவர் பெயர் ஜான் பாட்சா , எனது மூத்த மகனும் , மகளும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டனர் , எங்களின் கடைக்குட்டி இளைய மகன் ஆஜம் தனது 19 ஆவது வயதில் 1998 ஆம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து இன்று வரை விடுதலை கிடைத்திடாமல் சிறையில் இருந்து வருகிறான் .
அவனது நீண்டகால சிறைவாசத்தால் மனம் நொந்து போன எனது கணவர் ஜான் பாட்சா 2004 ஆம் ஆண்டில் இறந்து போனார் (இன்னா லில்லாஹி ) எனது துன்பகளுக்கு துணையாய் அறுதல் அளித்து வந்த கணவரும் இறந்து விட்டதால் , சிறையில் உள்ள எனது மகனின் பிரிவு என்னை அதிகம் வாட்ட தொடங்கியது அதனால் சிறைக்கு சென்று அடிக்கடி மகனை தூரத்தில் நின்றாவது பார்த்து வருவேன் , இது எனக்கும் எனது மகனுக்கும் சற்று ஆறுதலை தந்தது , அதுவும் சில காலம் தான் எனது பார்வை குறைபாடலும் உடல் நோய்களாலும் படுத்த படுக்கை ஆனேன் உடல் நிலைமை மிகவும் மோசமாகி 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவை அரசு மருத்தவ கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன் , இந்த படுக்கை தான் இவ்வுலகில் இறுதி படுக்கையாகிறது என்பதை உணர தொடங்கினேன் மன்னரை செல்லும் முன் சிறையில் உள்ள மகனை ஒரு முறையாவது காண்பேனோ என்று தவித்து கொண்டிருந்தேன் என் மகனோடு சில மணி நேரம் கூட இவ்வுலகில் வாழ முடியாமல் எனக்குரிய மரணத்தின் நேரம் என்னை பற்றி கொண்டது (இன்னா லில்லாஹி ) ...........
14 வருடங்களை அடிமை சிறையில் வாழும் எனது மகன் தந்தையையும் , தாயையும் இழந்து அநாதையாய் சிறையில் எப்படி தவிப்பானோ !?

யா அல்லாஹ் ! எனது மகனோடு நாளை மறுமையில் சுவனத்தில் ஒன்று சேர்பாயாக , இந்த நிலை தமிழக சிறையில் உள்ள எவருக்கும் ஏற்படாமல் காப்பாயாக!

மேல் உள்ள படத்தில் உள்ளவர் தான் ஜீனத்(ஜனாஸாவாக ) அருகில் உள்ளவர் தான் சிறைவாசி ஆஜம் ........

 சகோதரா ! சகோதிரிகளே ! நீங்களும் இவர்களுக்கு வேண்டி துஆ செய்வீர்களாக ....


source & thanks to :  Thamilagamuslim Siraivasigal

சனி, 12 மே, 2012

மதுரையில் காவல்துறையை கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

பாரதீய ஜனதா கட்சியின் மாநாட்டிற்காக, அத்வானி மதுரை வருகையை முன்னிட்டு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை, மிரட்டி, துன்புறுத்தும் மதுரை மாநகர காவல் துறையை கண்டித்து, தமுமுக சார்பில் நெல்பேட்டை அருகில் ஆர்ப்பாட்டம் 9.5.2012 இல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்து தடை விதித்தால், தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் M.H. சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் V.M. அப்துல் ரஃபி, மாநகர தலைவர் S. ஷேக் இப்ராஹீம், மாநகர செயலாளர் PM ஷேக் அஹமத் அப்துல்லாஹ், மாநகர பொருளாளர் A. முஹம்மது ஸாலிஹ், மாவட்ட துணை செயலாளர் K. அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 120 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.



வியாழன், 10 மே, 2012

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சட்டசபையில் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை


முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையிலே பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் சமூக நீதி தழைத்தோங்க கூடிய ஒரு மாநிலம். நீதிக்கட்சி தொடங்கி, பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் போட்ட பாட்டையிலே 1994 ஆம் ஆண்டிலே இந்திராசானி வழக்கிலே உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிலே 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியபோது, அந்தத் தீர்ப்பு தமிழகத்தின் பாரம்பரிய சமூக நீதியைப் பாதிக்கக்கூடிய வகையிலே அமைந்தபோது, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிகச் சிறப்பான ஒரு முடிவை எடுத்து, இந்தப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அரசியல் சாசனச் சட்டத்தினுடைய 9 ஆவது அட்டவணையிலே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததை இந்த நேரத்திலே, தொடக்கத்திலே நன்றி கூறி, நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேபோல்தான் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இடையிலே குறுக்கிட்டுப் பேசியபோது, மீண்டும் அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, அவசர அரசாணையைப் பிறப்பித்து இன்று பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் தமிழகத்திலே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு நிச்சயமாக அதிமுக அரசுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் செல்லக்கூடாது என்பது ஒரு நீதியான, நேர்மையான வாதம் அல்ல. உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் ஓ. சின்னப்பரெட்டி அவர்கள் கூட ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தனை விழுக்காடு இருக்கின்றார்களோ அத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டுமென்று அவருடைய கருத்தினை பதிவு செய்திருக்கின்றார். அந்தப் பாதையிலே தொடர்ச்சியாக இந்த அரசும் நடவடிக்கை எடுத்து, தமிழகத்திலே எத்தனை விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு கொடுக்கக்கூடிய நாள் நிச்சயமாக இந்த ஆட்சியிலே வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய அதிமுக அரசு இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் நேரத்திலே கொடுத்த பல வாக்குறுதிகளை அடுக்கடுக்காக தமிழக அரசு நிறைவேற்றி வருகின்றது. விலையில்லா அரிசியாக இருக்கட்டும் அல்லது மிக்சி, கிரைண்டர், பேன் ஆக இருக்கட்டும். அதேபோல சிறுபான்மை கிறிஸ்தவ மக்களுக்கு ஜெருசலேம் செல்வதற்கான மானியமாக இருக்கட்டும், இவை எல்லாவற்றையும் நிறைவேற்றி வந்திருக்கின்றீர்கள். அதற்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதே நேரத்திலே, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்திலே முஸ்லிம்களுக்காக தமிழகத்திலே இருக்கின்ற 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அதிகரித்துத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கின்றார்கள். அந்த வாக்குறுதியையும் விரைவிலே நிறைவேற்றி வைக்கப்பட வேண்டுமென்று இந்தத் தருணத்திலே மீண்டும் நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த 3.5 விழுக்காடு என்று இருப்பதனால், Roaster 200 points போட வேண்டிய சூழலிலே, அதிலே பலருக்கும் பல சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, இந்த fraction ஐ எடுத்து அதை முழுமையாக்கிவிட்டால் Roaster ஐ 100 ஆக்கி விடலாம். அதனால் எல்லோருக்கும் பலன் கிடைக்கும் என்பதை இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சில துறைகளிலே, குறிப்பாக மருத்துவ மேல் படிப்பிலே, அதைபோல பல்கலைக்கலகங்களிலே இருக்கக்கூடிய சில துறைகளிலே பத்துக்கும் குறைவாக அங்கே இருக்கை இருக்கும்போது அந்த roaster முறையை நாம் அமல்படுத்தும்போது சில சமூகத்தினர் 25, 50 ஆண்டுகளுக்கு பிறகுதான் அவர்களுடைய turn வரக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. இந்த முரண்பாடுகளையும் களைவதற்கு நிச்சயமாக இந்த அரசு முயற்சி எடுக்க வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்திலே தலித்-ஆக அல்லது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களாக இருக்கக்கூடியவர்கள் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டால் அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலே சேர்ப்பதற்கு ஓர் அரசாணை கடந்த காலங்களிலே போடப்பட்டு அது அமலிலே இருக்கின்றது. ஆனால், அதே நேரத்திலே தலித் ஆகவோ அல்லது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்து அரசியல் சாசன சட்டம் தரக்கூடிய உரிமையின் அடிப்படையிலே இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு முஸ்லிமாக மதம் மாறியவர் என்றுதான் சான்றிதல் கொடுக்கிறார்களே தவிர, ஏனென்றால் அவர்கள் S.C. க்கான உரிமையையும் இழந்து விடுகிறார்கள். B.C. க்கான உரிமையையும் இழந்துவிட்ட பிறகு அவர்களுக்கு நியாயப்படி B.C. முஸ்லிம் என்று சான்றிதல் கொடுக்க வேண்டும். அதற்கு வழி இல்லையென்று சொல்கிறார்கள். எனவே, கிறிஸ்தவத்தை தழுவிய தலித்துகளுக்கு இருப்பதுபோன்று ஓர் அரசாணை இந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட வேண்டுமென்று இந்த நேரத்திலே தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சமீபத்திலே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம், சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஜனவரி 2012 லே 250 சிறுபான்மை மொழி வழி ஆசிரியர்களுக்கான நேர்காணலை நடத்தியது. இதில் உருது வழி பாடங்களுக்காக 20 பணியிடங்களிலே 2 மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது. எஞ்சிய 18 இடங்கள் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு Roaster முறையிலே ஒதுக்கப்பட்டதனால், அந்த வகுப்பார்களிலே உருது படித்தவர்கள் யாரும் இல்லை என்பதன் காரணமாக இந்த 18 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இதுபோன்ற முரண்பாடுகளை களைவதற்கும் இந்த அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறுபான்மை மக்களுக்கென தனியாக மருத்துவக்கல்லூரி தொடங்க சட்டசபையில் மமக ஆலோசனை

முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு சிறப்பான சாதனையை செய்வதற்கான ஒரு ஆலோசனையை இந்த அவையில் முன் வைக்க விரும்புகிறேன். வக்ப் வாரியத்தின் சார்பாக சிறுபான்மை மக்களுக்கென தனியாக ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இஸ்லாமிய சமுதாயத்திற்கு நீண்டகாலமாக இருந்துவரும் இந்த ஆசையை, தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
அதுபோல 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், நெல்லிக்குப்பம் மற்றும் கடலூர் Old town, பழைய நகரத்தில் வக்ப் வாரியத்திற்கு சொந்தமான இடங்களிலே புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கம் வீடு கட்டுவதற்கு முன்வந்தாலும் கூட கட்ட முடியவில்லை. ஏனென்றால் அந்த இடம் வக்ப் - க்கு கீழே இருக்கின்றது. எனவே, அரசாங்கம் வக்ப் வாரியத்திற்கு பணம் கொடுத்து வக்ப் வாரியத்தின் மூலமாக வீடு கட்டி அந்த மக்கள் பயனடைவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் திறப்பதற்கு அரசாங்கம் இணையான நிதியை அரசு தரும் என்ற ஒரு நிலையிலிருந்தது. அது கடந்த திமுக ஆட்சியிலே மாற்றப்பட்டு அதிகபட்சமாக matching grant, இணை நிதியாக 10 இலட்சம்தான் தருவோம் என்று சொன்னார்கள். என்னுடைய கோரிக்கை என்னவென்றால், அந்த மகளிர் சங்கங்கள் வலுவாக அமைவதற்கு இந்த அரசாங்கம் matching grant ஆக பார்க்காமல் 10 இலட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தினுடைய பணிகள் விரிவாக்கப்பட வேண்டும். Co-operative bank இல் ஒழுங்காக லோன் தருவதில்லை. அதனைச் சீர் செய்ய வேண்டும். நான் இந்த ஆட்சியைப் பற்றி சொல்லவில்லை. கடந்த காலங்களிலே Co-operative bank மட்டுமல்லாமல், Nationalized Bank களிலிருந்து அந்த லோன் பெறுவதற்கான வழிவகை செய்ய வேண்டும். TAMCO விற்கும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்திற்கும் விரைவிலே தலைவர்களும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, நல்ல வாய்ப்பைதந்த மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து அமர்கிறேன்

புதன், 9 மே, 2012

காஷ்மீர் மாநிலத்திலிருந்து முஸ்லிம் பெண் ஐஏஎஸ்!

காஷ்மீர் மாநிலத்தின் ஈஸ் அஸ்கர் என்ற 25 வயது இள மங்கை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு

'அகில இந்திய அளவில் நடக்கும் ஒரு தேர்வில் வெற்றி பெறுவது என்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்கு தெரியும். அதுவும் கடந்த 20 வருடங்களாக முழு காஷ்மீரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெண் என்ற வகையில் பாதுகாப்பும் முக்கியததுவம் பெறுகிறது. எனது பெற்றோரும் எனது உறவினர்களும் நான் இந்த நிலையை அடைய மிகுந்த உறு துணையாக இருந்துள்ளனர்.” என்றார்.

கேள்வி: காஷ்மீரைப் பொறுத்தவரை மேல் படிப்புக்கு செல்வது என்பது மிகுந்த சிரமமான ஒன்று என்று சொல்லப்ட்டு வருகையில் உங்களின் இந்த முன்னேற்றம் எதைக் காட்டுகிறது?

பதில்: “நான் மட்டும் அல்ல. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் காஷ்மீருக்கும் இந்திய நாட்டுக்கும் திறம்பட பணியாற்றவே விரும்புகின்றனர். லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஸ்ரீநகர் என்று அனைத்து பிரதேச மக்களும் தற்போது படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கொடுத்தால் கண்டிப்பாக தங்களின் திறமையினால் முன்னுக்கு வருவார்கள்.”