புதன், 9 ஜூலை, 2014

காஸாவில் இஸ்ரேல் என்ன செய்ய முயல்கிறது?

காஸா மீதான தனது தாக்குதல்களை முழு பலஸ்தீனத்திற்கும் எதிரான தாக்குதல்களாக விஸ்தரிக்கப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்துடன் தங்களது தாக்குதல்கள் ஆனது மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லாமல் நீண்ட காலம் நீடிக்கும் தாக்குதலாக நிகழ்த்தப்படும் என்றும் அது அறிவித்துள்ளது. பலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நகரங்கள் மீது நடாத்தும் ரொக்கெட், மற்றும் மோட்டார் தாக்குதல்களிற்கு ஒரு நிரந்தர தீர்வினை காணாமல் ஓயப்போதவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேல் தாங்கள் செய்த தவறின் வலிகளை பலஸ்தீன பயங்கரவாதிகளும் அவர்களிற்கு ஆதரவளித்தவர்களும் பல தலைமுறைகளிற்கு உணரும் அளவிற்கு தாங்கள் தகுந்த பாடம் புகட்ட உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இதனை அதனது பாதுகாப்பு அமைச்சர் Moshe Yaalon காட்டமான வார்த்தைகளின் ஊடாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினமான செவ்வாய்க்கிழமை (08-07-2014) வரை இஸ்ரேலிய ஸியோனிஸ்ட்களினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் காரணமாக 27 பலஸ்தீனர்கள் மரணமாகியுள்ளதாகவும், 137 பேர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் பலஸ்தீன தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய உளவு ஏஜென்சிகள் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் கட்டிடங்கள், வாகனங்கள், வீடுகள் போன்றவற்றை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கி வருகின்றன. ஒரு சிறிய பிரதேசத்தில் 01 மில்லியன் மக்கள் அடர்த்தியாக வாழும் காஸா மீதான தாக்குதல் என்பது அதிக உயிர்ச்சேதங்களை விளைவிக்க வல்லதாக உள்ளன.

தாங்கள் வான் தாக்குதல்கள் ஊடாக சில அடிப்படை சுத்திகரிப்புக்களை செய்துள்ளதாகவும், கடந்த செய்வாய்க்கிழமை வரை 180 இற்கும் அதிகமான சோட்டீஸ்களை (வான் பறப்பு தாக்குதல்களை) செய்து முடித்துள்ளதாகவும், இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை தாங்கள் அடைந்துள்ளதாகவும், இதன் பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் (IDF) பலஸ்தீன எல்லை நிலங்களை ஊடறுத்து தரை தாக்குதல்களை நிகழ்த்த உள்ளதாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட தாக்குதலிற்கு 40,000 இஸ்ரேலிய படையினர் பலஸ்தீன் நோக்கி நகர்த்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தாங்கள் 50 இற்கும் மேற்பட்ட பலஸ்தீன பயங்கரவாதிகளின் இலக்குகளை குறி வைத்துள்ளதாகவும், இவர்கள் மீது விமானங்கள் மட்டுமல்லாது கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள், ஆட்டிலறி எனும் நீண்ட தூர பீரங்கிகள் மூலமும் சமகாலத்தில் தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என்றும் இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இம்முறை தங்கள் முதன்மை இலக்காக இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் படையணியின் முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும், அவர்கள் எங்கும் செல்ல முடியாத படி ஹீயுமன் சீல் நிலையில் தங்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அழித்தொழிப்பதை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நிகழும் என்றும் தாங்கள் தங்கள் திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்பதாகவும் இம்முறை இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இஸ்ரேலிய அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 40,000 இஸ்ரேலிய ரிசேர்வ போர்ஸஸ் இதில் பங்கேற்க உள்ள நிலையில் சுமார் 1500 இஸ்ரேலின் சிறப்பு படையினர், IDF's special K-9 யுனிட், Sayeret Maglan யுனிட் 212, Yamam யுனிட் போன்ற தாக்குதல் அணிகளும் முன்னிலைகளை கடந்த நிலையில் பலஸ்தீனில் நுழைய முற்பட்டுள்ளன.

அல்-குதுஸ் பிரிக்கேட்டின் கொமாண்டர் Hafiz Hamad, பெய்த் ஹனூனில் நடைபெற்ற வான் தாக்குதல்களில் ஏலவே மரணித்துள்ளார். 2012-ல் இஸ்ரேலிய ஸியோனிஸ இராணுவம் இது போன்றே காஸாவில் உள்நுழைந்து 08 நாட்கள் சமரிட்டது. ஆனால் ஹமாஸ் போராளிகளின் அர்ப்பணம் நிறைந்த தாக்குதல்களை முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்வாங்கிச் சென்றனர். அப்போது முதலே அவர்கள் காஸா மீதான இன்னொரு இனவழிப்பு தாக்குதலை நிகழ்த்த அவாக்கொண்டிருந்தனர், பத்ரில் தோற்று உஹதை எதிர்பார்திருந்த குறைசிய காபிர்கள் போன்று.

2012-ல் நடைபெற்ற சண்டைகளில் இஸ்ரேலிய இராணுவத்தின் பெரிய பலமே அவர்களது அல்-மர்க்கபா யுத்த டாங்கிகளாகும். ஆனால் கஸ்ஸாம் போராளிகளின் தாக்குதல்களில் பல டாங்கிகள் சிதறடிக்கப்பட்டன. அவற்றின் இழப்புக்கள் ஆரம்பித்த மறு மணித்தியாலங்களிலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தங்கள் இலக்கை வெற்றிகரமாக செயற்படுத்தி முடித்து விட்டதாக கூறி பின்வாங்க ஆரம்பித்தனர். பலஸ்தீனம் மீதான இப்போதைய தாக்குதல்களில் இஸ்ரேலிய இராணுவம் சின்-பெட்டினால் வழங்கப்பட்டுள்ள துல்லியமான உளவுத்தகவல்களையும், ட்ரோன் விமானங்களையும் பெரிதும் நம்பியுள்ளது. “எமக்கு இழப்புக்கள் அற்ற எதிரிக்கு அதிகபட்டச இழப்புக்களை உருவாக்கும் ஒப்பரேசன் இது” என ஏலவே ஜெரூஸலம் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்ததனை நாம் இங்கு சுட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

நன்றி : கைபர் தளம்

கருத்துகள் இல்லை: