வியாழன், 17 ஜூலை, 2014

இஸ்ரேலின் இனப்படுகொலை.. ராஜ்யசபாவில் விவாதத்தை தடுத்த சுஷ்மா ஸ்வராஜ்- கொந்தளித்த எதிர்க்கட்சிகள்!!



டெல்லி: இஸ்ரேல் நடத்தி வரும் பாலஸ்தீன இனப்படுகொலை குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு அந்த விவாதம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினார். காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். காஸா பகுதிக்குள் நுழைந்திருக்கும் இஸ்ரேலிய தரைப்படையோ அந்த மண்ணின் மக்களை சொந்த மண்ணைவிட்டு வெளியேறச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்றம் பாதிப்பு 
ஆனால் மத்திய அரசோ இதுபற்றி விவாதிக்க மறுத்து வருகிறது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ராஜ்யசபா அலுவலல் குறிப்பில்..
 இந்நிலையில் இன்று ராஜ்யசபா அலுவல் குறிப்பில், காஸா தாக்குதல் மீதான விவாதம் பூஜ்ய நேரத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் கூடியிருந்தனர்
சுஷ்மா திடீர் எதிர்ப்பு
 ஆனால் சபை கூடியபோது காஸா தாக்குதல் மீதான விவாதத்தை அனுமதிக்க முடியாது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இஸ்ரேல்- பாலஸ்தீன உறவு பாதிக்கும்
 இத்தகைய விவாதத்தின் மூலம் இஸ்ரேல், பாலஸ்தீனத்துடனான நட்புறவு பாதிக்கப்படும் என்றார். மேலும் இன்று காலை அலுவல் பட்டியலை பார்த்தபோதே, காஸா தாக்குதல் மீதான விவாதம் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை தான் கவனித்ததாகவும், ராஜ்யசபா தலைவருக்கு மரியாதை அளிக்கும் வகையிலேயே சபைக்கு வந்திருப்பதாகவும் கூறினார்.
சபாநாயகருக்கு கடிதம் தன்னிடம் 
ஆலோசனை மேற்கொள்ளாமல் அலுவல் குறிப்பில், காஸா தாக்குதல் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருப்பதாக சுஷ்மா கூறினார். மேலும் இஸ்ரேல்-காஸா பிரச்சனையை விவாததிற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவரது முடிவுக்காக காத்திருப்போம். அவரது முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
ஒத்திவைப்பு 
சுஷ்மா ஸ்வராஜ் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக உணவு இடைவேளைக்கு முன்னர் இரண்டு முறையும் அதன் பின்னர் பிற்பகல் 3 மணி வரையும் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு சபை மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்ததால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அன்றும் எதிர்ப்பு 
முன்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் எதிர்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் தீர்மானம் கொண்டுவரவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது இஸ்ரேலின் பாலஸ்தீன இனப்படுகொலை குறித்து விவாதிக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இலங்கைக்காக பயப்படும் சுஷ்மா? 
இஸ்ரேலின் பாலஸ்தீன இனப்படுகொலையை விவாதித்தால் இலங்கையின் இனப்படுகொலை குறித்து விவாதிக்க நேரிடும் என்பதாலும் கூட சுஷ்மா ஸ்வராஜ் இத்தகைய கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கக் கூடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
நன்றி  தட்ஸ் தமிழ்



கருத்துகள் இல்லை: