திங்கள், 7 ஜூலை, 2014

ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லி: முஸ்லிம்களின் ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தனிமனித உரிமைகளைப் பறிக்கும் ஃபத்வா உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் விஸ்வ லோசன் மாதன் என்ற வழக்கறிஞர் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள், நாட்டின் நீதித்துறைக்கு இணையானவையான செயல்படுகின்றன. இவை பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம், தாருல் குவாஜா, தாருல் இஃப்தா போன்ற மத அமைப்புகளின் செயல்பாடுகளில் நீதிமன்றம் தலையிடாது; அதே நேரத்தில் ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகளை ஏற்பதும் ஏற்காததும் தனிநபர் விருப்பம் என்றும் கூறியிருந்தது.

மேலும் இந்த உத்தரவுகளை யார் மீதும் திணிக்க முடியாது. இதனால் தங்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக கருதினால் மாநில அரசுகள் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உதாரணமாக, தசரா பண்டிகையை குறிப்பிட்ட தேதியில் கொண்டாட வேண்டும் என்று இந்து மதகுருக்கள் கூறினால் தவறில்லை. அதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தினால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. "ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படியானவை அல்ல; அந்த நீதிமன்றங்களுக்கு எந்த ஒரு சட்ட அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. மக்களின் அடிப்படை உரிமையை பறிக்க எந்த ஒரு மதத்துக்கும் உரிமை இல்லை. அடிப்படை உரிமைகளை பறிக்கும் மத அடிப்படையிலான உத்தரவுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. தனிமனித உரிமைகளைப் பறிக்கும் மத அடிப்படையிலான உத்தரவுகள் சட்டவிரோதமானவை" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துகள் இல்லை: