செவ்வாய், 31 ஜனவரி, 2012

டாக்டர் ஜாகிர் நாயிக் சர்வதேச விருது பெற்றார் :

டாக்டர் ஜாகிர் நாயிக் சர்வதேச விருது பெற்றார் :


உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய வெப்சைட் ஆன் இஸ்லாம் டாட் நெட் சர்வதேச அளவில் இஸ்லாமிய மற்றும் சமூக சேவைக்காக அளிக்கப்படும் "முஸ்லிம் ஸ்டார் ஆப் தி இயர்"- 2011 விருதுகள் அறிவிக்கப்பட்டனர்.



இந்தியாவிலிருந்து டாக்டர் ஜாகிர் நாயிக், அப்துல் ஹக்கீம் பைஸி, ஆகியோர் விருதுகள் பெற்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆன்லைன் வாசகர்களின் வாக்கெடுப்பு அடிப்படையிலேயே, கல்வி, சமூகத்துறையை சேர்ந்த பத்து பிரமுகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எமன் விடுதலைப் போராளியும் நோபல் பரிசுபெற்றவருமான தவக்குல் கர்மான், எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியில் இரண்டு கண்களை இழந்தும்கூட போராட்டக்களத்தில் உறுதியுடன் நின்ற அஹ்மத் ஹறாறா, குவைத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணரும் ஜீவகாருண்ய சேவகருமான அப்து ரஹிமான் சுவைத்,

சுடீஸ் பாடகர் மாஹின் சைன், கனடா ஹாக்கி நட்சத்திரம் நசீம் காதரி, பிரபல கிளினிக்கல் சைகோளஜிஸ்ட் டாக்டர் நாயிப் அல் முதவ்வ,

சைனீஸ் அழைப்பாளன் வெயில் இப்ராஹீம், பிரிட்டிஷ் கம்யூனிட்டி லீடர் தாரிக் ஜஹான், ஆகியோரும் பரிசுபெற்றவர்களாவர்.

தகவல் : P.A. சையத் முஹம்மது
http://www.islamicvision.info/2012/01/blog-post_31.html#more

தமுமுக-மமக பொதுக்குழு தீர்மானங்கள்

1. தமிழக இடஒதுக்கீடு

தமிழகத்தில் தற்போது முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை குறைந்தது 5 சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2. மத்திய அரசில் இடஒதுக்கீடு

மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கும் அனைத்து சிறுபான்மையினருக்குமான 4.5 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு மோசடி என இப்பொதுக்குழு குற்றம்சாட்டுகிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின்படி மொத்த சிறுபான்மையினருக்கும் 15 சதவீத இடஒதுக்கீடும், அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் 10 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்றும், இதற்காக அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

3. கூடங்குளம் அணுஉலை விவகாரம்

கூடங்குளம் அணுஉலை உற்பத்திக்கு எதிராக நான்கு மாத காலமாக அப்பகுதி மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நமது எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பையும், சுற்றுச்சூழலையும் காத்திடும் வகையில் கூடங்குளம் அணுஉலை செயல்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேற்கு வங்கத்தில் அணுஉலைகளை அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில அரசு அறிவித்திருப்பது போல், இவ்விஷயத்தில் தமிழக அரசும் உறுதியான நிலைபாட்டைப் பின்பற்ற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

4. முல்லைப் பெரியாறு விவகாரம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகள், மனிதாபிமானத்திற்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் சவால்விடும் வகையில் இருப்பதாக இப்பொதுக்குழு குற்றம்சாட்டுகிறது.

இவ்விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

5. மீனவர்கள் பாதுகாப்பு

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளன. இவ்விஷயத்தில் இந்திய அரசு போதிய அக்கரையின்றி செயல்படுகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடற்பகுதியில் இந்தியக் கடற்படையை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

6. தீவிரவாத பீதி

இந்தியாவெங்கும் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் காவி பயங்கரவாத சக்திகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குப் பின்னணியாக செயல்படும் முதன்மை சக்திகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அனைத்து குண்டுவெடிப்புகளுக்குப் பின்னாலும் உள்ள இவர்களது தொடர்புகள் முழுமையாக கண்டறியப்பட வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

7. அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

இந்தியா முழுக்க பல்வேறு தீவிரவாதப் பின்னணியின் தொடர்பாக சந்தேகிக்கப்பட்டு, விசாரணைக் கைதிகளாக வாடும் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நஷ்டஈடு வழங்கவும் ஆவண செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

8. மதக்கலவர தடுப்புச் சட்டம்

நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்த "மதக்கலவர தடுப்புச் சட்டத்தை' எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாமல் அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு ஜனநாயகத்தின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

9. பரமக்குடி சம்பவம்

பரமக்குடியில் கடந்த செப்.11, 2011 அன்று காவல்துறையில் ஆறு தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்டதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வை, போர்க்களமாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு இலாக்காப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

10. கட்டண உயர்வு

தமிழக அரசு பேருந்துக் கட்டண உயர்வு அதிரடியாக உயர்த்தியது பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. சாமான்ய மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் அன்றாடம் பாதிக்கப்படுவதால், பேருந்து கட்டண உயர்வைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

11. ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை

பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதிகளின் விடுதலை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், 14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

12. வெளிநாட்டு வாழ் தமிழர் நலன்

வளைகுடா நாடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நலனைக் காக்கும் விதத்தில் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மேலும், வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட ஆவண செய்யப்படும் என சமீபத்தில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியிருப்பதை இப்பொதுக்குழு மனமார வரவேற்கிறது.

13. அரபு வசந்தத்திற்கு வரவேற்பு

மத்திய கிழக்கு - அரபு நாடுகளில் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகம் வேண்டி பொதுமக்கள் நடத்திவரும் கிளர்ச்சிகளுக்கு இப்பொதுக்குழு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

எகிப்தில் அமைதி வழியில் தேர்தலை சந்தித்து, தங்களின் எண்ணங்களை சாதித்துக் கொண்ட எகிப்து மக்களை இப்பொதுக்குழு பாராட்டுகிறது. மேலும் சிரியா, ஜோர்டான், ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் அமைதியும், ஜனநாயகமும் மலர அரபு லீக்கும், முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பும் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தலையிட வாய்ப்பளிக்க வேண்டாம் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

14. போர் வேண்டாம்

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் தேர்தலைக் கணக்கில் கொண்டு, ஈரானின் மீது போர் தொடுக்க முயலும் அமெரிக்காவை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது. சட்டவிரோதமாக அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்காவுக்கு ஈரானை எச்சரிக்க எந்தத் தகுதியும் இல்லை. மேலும், சர்வதேச சமூகம் இந்த பாரபட்சப் போக்கைக் கண்டிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

15. ஹஜ் விசாவை அதிகரிக்க வேண்டும்

இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செய்யும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கை வருடந்தோறும் உயர்ந்து வருகிறது. 20 கோடி இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கேற்ப, சவூதி அரேபியாவிடம் கூடுதல் ஹஜ் விசாக்களைப் பெற மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

16. உளவு அமைப்புகளுக்கு கண்டனம்

இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செய்யும் ஹாஜிகளுடன் உளவாளிகளை இந்திய அரசு அனுப்பி வைப்பதாக பல ஹாஜிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் உண்மையாக இருக்குமெனில், இப்பொதுக்குழு அதை வன்மையாக கண்டிக்கிறது. முஸ்லிம்களின் இறைநம்பிக்கையையும், தேசப்பற்றையும் உளவுபார்ப்பதை ஜீரணிக்க முடியாது. இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

17. பூரண மதுவிலக்கு

மக்களின் முன்னேற்றம், ஆரோக்கியம், குடும்ப வாழ்வு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி, பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

18. தானே புயல் நிவாரணம்

கடந்த மாதம் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களையும், புதுச்சேரியையும் தாக்கிய தானே புயலில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழக அரசின் நிவாரண உதவிகள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்ற குறைகளும், கவலைகளும் உள்ளது. இவ்விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துமாறு தமிழக அரசையும், மத்திய அரசையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திங்கள், 30 ஜனவரி, 2012

ஜனவரி 30 - காந்தி படுகொலை பரப்பரப்பான அந்த நிமிடங்கள்...

நன்றி : Thamimun Ansari

இந்தியாவில் முக்கியத் தலைவர்களின் பிறந்த நாட்களும், இறந்த நாட்களும் முக்கியத்துவத்துடன் நினைவுகூரப்படுகின்றன. அரசு விளம்பரங்களுடன் ஆடம்பர நிகழ்வுகளாக அவை வரலாறுகளைக் கூறுகின்றன.

ஆனால் காந்தியின் நினைவுநாள் மட்டும் முக்கியத்துவமின்றி பெயரளவுக்கு நினைவு கூரப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? காந்தியின் நினைவு தினத்தை முதன்மைப்படுத்தினால், காந்தியின் படுகொலைக்கான பின்னணி வருடந்தோறும் நினைவுபடுத்த வேண்டிவரும்.

காந்தியைக் கொன்ற கோட்சே, அவனது சமூகமான சித்பவன் பிராமணர்கள், அவனை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம், அதன் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோரின் சதிகள் வருடந்தோறும் விவாதிக்கப்படுவதை ஆதிக்க சக்திகள் விரும்புவதில்லை.

இன்றுவரை கடந்த 64 வருடங்களாக காந்தியைக் கொன்ற பயங்கரவாதியான கோட்சேயின் சாம்பலை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவவத அமைப்பு.

காந்தியைக் கொன்ற கோட்சே, அப்பழி முஸ்லிம்கள் மீது விழவேண்டும் என்ற சதித்திட்டத்தோடு செயல்பட்டான். முஸ்லிம்களைப் போல பிறப்புறுப்பில் சுன்னத் செய்துகொண்டு, கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டு இப்படுகொலையைச் செய்தான்.

காந்தி கொலையானதும் அவன் பிடிக்கப்பட்டான். அப்போது ஆர்.எஸ்.எஸ். கும்பல் காந்தியைக் கொன்றவர் ஒரு முஸ்லிம் என்று நாடெங்கும் பரப்பியது. முஸ்லிம்களும், அவர்களது சொத்துக்களும் தாக்கப்பட்டன. உடனே பிரதமர் நேரு, அகில இந்திய வானொலி வழியாக, வதந்தியை மறுத்து, காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்பதைத் தெரிவித்ததும் நிலைமை மாறியது. காந்தியின் படுகொலைக்கு அன்றைய உள்துறை அமைச்சரும், தீவிர மதவெறியருமான சர்தார் வல்லபாய் படேலும் மறைமுகக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபோன்ற ஏராளமான உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம், புதிய தலைமுறை இந்தியர்களிடம் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

காந்தி படுகொலைக்கான பின்னணியைத் தோலுரிக்கும் வகையில் ‘1948 ஜனவரி 30’ என்ற நூலை பிரபல திராவிட இயக்கவாதியான திருவாரூர் அர.திருவிடம் எழுதியுள்ளார். இந்நூலை நீங்களும் படித்து, உங்களது இந்து நண்பர்களிடமும் அறிமுகப்படுத்த வேண்டும். பள்ளிக்கூட மாணவர்களிடமும், ஆசிரியர்களிடம் இந்நூல் பரப்பப்படுவது அவசியமாகும்.

நூல்: 1948 ஜனவரி 30

கிடைக்குமிடம்: நக்கீரன் பதிப்பகம்

105, ஜானிஜகான்சாலை,

இராயப்பேட்டை, சென்னை&14

தொடர்புக்கு: 044&43993029

விலை: ரூ.125

1948 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை, குளிரிலும், பனியிலும் மரம், செடிகள்கூட நடுங்கிக் கொண்டிருக்கும் டெல்லிக் குளிரில் வழக்கம்போல் இருளுக்கு முன்பாகவே எழுந்திருந்தார் காந்தி.

விழுந்தது போக மீதி இருந்த சில பற்களை, முனை நசுக்கி நாராக்கப்பட்ட குச்சி ஒன்றினால் துலக்கி, காலைக் கடன்களை முடித்து, பகவத் கீதையின் சில பக்கங்களைப் படித்து கடவுளை வணங்கியபின், தரையில் உட்கார்ந்து எழுதுவதற்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு அடி உயரமுள்ள சாய்வான மேசை ஒன்றின்முன் அமர்ந்து காங்கிரஸ் கட்சிக்கான சில புதிய சட்டதிட்ட விதிகளை எழுதிக் கொண்டிருந்தார்.

காலை மணி 8. தேநீர் அருந்தியவாறு மாலையில் நடத்தப் போகும் கொலையை எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள் சதிகாரர்கள் மூவரும். முதல்நாள் மாலை அவர்கள் பிர்லா மாளிகை சென்றபோது போலீசார் உடல்ரீதியான ஆயுதப் பரிசோதனைகள் எதுவும் செய்யவில்லை என்றாலும், இன்றும் அதேநிலை இருக்கும் என்று நம்பமுடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கும் போலீசார் திட்டத்தை மாற்றி & வருபவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று பரிசோதனை செய்தால் பிடிபட்டுவிடுவோம். எனவே கருப்புப் போர்வை ஒன்றினால் முகத்தையும், கேமராவையும் மூடி படம் எடுக்கும் ஒரு அடி சதுரமும் மூன்று கால்களும் கொண்ட கேமரா ஒன்றை வாங்கி அதற்குள் துப்பாக்கியைப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையலாம். மிக அருகில் இருந்து சுடுவதற்கு வசதியாக படம் எடுக்கப் போகும் சாக்கில் காந்தியின் வழிபாட்டு மேடைக்கு மிக அருகிலேயே கேமராவைப் பொருத்திக் காத்திருந்து, சரியான நேரம் வரும்போது சுட்டுவிடலாம் என்ற நாதுராம் கோட்சேயின் ஆலோசனையை ஆப்தே மறுத்துவிட்டான்.

அதுபோன்ற கேமராக்களை இப்போது யாரும் பொது இடங்களிலும், செய்தி சேகரிக்கப் போகும் இடங்களிலும் பயன்படுத்துவதில்லை. கைக்கு அடக்கமான வெளிநாட்டு கேமராக் களைத் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கும் மேலாக & இதற்குமுன் காந்தியைக் கொலை செய்ய முயற்சித்த போதும், படம் பிடிக்கப் போவதாக சொல்லித்தான் உள்ளே நுழைந்தோம். எனவே படப்பிடிப்பாளர்களிடம் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார் கள் என்ற ஆப்தேயின் கருத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மாற்றுத் திட்டமாக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து செல்லலாம் என்றான் ஆப்தே. முஸ்லிம் பெண்களின் காவலராகிவிட்ட காந்தியைப் பார்க்க, வழிபாட்டுக் கூட்டத்திற்கு ஏராளமான முஸ்லிம் பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அதற்கு வழிபாட்டு மேடையின் அருகிலும் செல்ல முடியும் என்று முடிவு செய்த அவர்கள் பர்தா வாங்குவதற்காக கடைத்தெருவிற்கு வந்தார்கள். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பழைய டில்லியில் பர்தா வாங்குவது ஒன்றும் சிரமமாக இல்லை.

ரயில் நிலையம் அருகிலேயே உள்ள கடை ஒன்றில் பெரிய அளவிலான பர்தா ஒன்றை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார்கள்.

பர்தாவைப் போட்டுப் பார்த்த நாதுராம் கோட்சே இதுவும் வராது என்று அதைக் கழற்றித் தூர எறிந்தான். ஏராளமான சுருக்கங்களும் மடிப்புகளும் இருப்பது மட்டுமல்லாமல், கண்களையும் மறைக்கும் இதைப் போட்டுக் கொண்டு குறி பார்த்து சுட முடியாது. அப்படி ஒருநிலை ஏற்பட்டு காந்தியையும் சுட முடியாமல் பிடிபட்டால் பெண் வேடமணிந்து சென்ற கேவலத்திற்கும் ஆளாக நேரிடும் என்றான் கோட்சே. வேறு என்ன செய்யலாம் என்று மூவரும் ஆளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதும், இன்னொருவர் மறுப்பதுமாக நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

இறுதியாக ஒரு திட்டம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. டெல்லியின் குளிரைத் தாங்குவதற்காக முழங்கால் வரை நீண்ட, மழைக்கோட்டு போன்ற தொளதொளப்பான மேலாடை அப்போது பெரும்பாலானோரால் அணியப்பட்டு வந்தது. துப்பாக்கியை இடுப்பில் செருகி, மேலே அந்தக் கோட்டை அணிந்தால் இடுப்பி லிருக்கும் துப்பாக்கியை எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். நீங்கள் இருவரும் போய் அந்த ஆடையை வாங்கி வாருங்கள் என்றான் தனிமையில் இருக்க விரும்பிய கோட்சே.

சைவ உணவை விரும்பிய ஆப்தே வேறு ஒரு உணவு விடுதிக்கும் போய் மதிய உணவை முடித்துக் கொண்டு தொளதொளப்பான அந்த ஆடையை வாங்கிக்கொண்டு திரும்பிய போது, அவர்கள் தங்கி இருந்த ரயில்வே ரிடையரிங் அறையைக் காலி செய்வதற்கான நேரம் தாண்டி இருந்தது. எனவே அறையைக் காலி செய்துவிட்டு, முதல் வகுப்பு பயணிகள் ஓய்வறைக்கு தற்காலிகமாக இடம் மாறினார்கள் மூவரும். அறையைக் காலி செய்யும் முன் துப்பாக்கியை எடுத்து அதற்குள் ஏழு தோட்டாக்களைத் திணித்த நாதுராம் அதை இடுப்பில் செருகிக்கொண்டு அதை மறைப்பதற்காக நண்பர்கள் புதிதாக வாங்கி வந்த ஆடையை அணிந்து கொண்டான்.

மதிய உணவிற்குப்பின் சற்று ஓய்வெடுத்த காந்தி, பத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சந்தித்திருந்தார். இறுதியாக அவரைச் சந்தித்தவர் வல்லபாய் படேல். நேருவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக அவர் காந்தியிடம் கொடுத்திருந்த கடிதம் இருவருக்கும் இடை யில் இருந்த சிறிய மேசையில் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.

நேரு, படேல் இருவரையுமே இழக்க விரும்பாத காந்தி, சிக்கலான சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒருவருக்கொருவர் இணங்கிப் போனதுபோல் இப்போதும் இருக்க வேண்டும் என்று படேலிடம் வற்புறுத்தினார். ஆழமான அவர்களது விவாதம் நேரம் போவது தெரியாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. மாலைச் சிற்றுண்டிக்கான நேரம் வந்துவிட்டதால், சில ஆரஞ்சுச்சுளைகள், காற்கறி சூப், ஆட்டுப்பால் ஆகியவற்றைக் கொண்டு வந்தார் காந்தியின் உதவியாளர் ஆபா. அவற்றைச் சாப்பிட்டு முடித்ததும், உழைக்காமல் உண்ணும் உணவு திருடுவதற்குச் சமம் என்ற அவரது கொள்கைப்படி ராட்டையில் நூல் நூற்றவாறு படேலிடம் விவாதத்தைத் தொடர்ந்தார் காந்தி.

மாலை 4 மணிக்குப் புறப்பட வேண்டும் என்பது அவர்கள் திட்டம். அதுவரை ரயில் நிலைய ஓய்வு அறையிலேயே பாதுகாப்பாகத் தங்க விரும்பிய அவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்திருந்தார்கள். முதலில் கோட்சே மட்டும் பிர்லா மாளிகைக்குச் செல்ல வேண்டும்.

ஆப்தேயும், கார்கரேயும் அவனைப் பின்தொடர்ந்து தனியே செல்ல வேண்டும். வழிபாட்டுக் கூட்டத்தில் காந்தி அமரும் மேடையில் இருந்து 30 அடி தூரத்திற்குள் சுடுவதற்கு வாய்ப்பான ஒரு இடத்தில் கோட்சே இருப்பான். ஆப்தேயும், கார்கரேயும் அவனது இரண்டு பக்கத்திலும் அறிமுகம் இல்லாதவர்கள் போல் நிற்கவேண்டும். எதுவும் பேசக்கூடாது. கோட்சே சுடும் நேரத்தில் அதை யாராவது பார்த்துவிட்டு தடுக்க முயன்றால் தடுக்க முயல்பவர்களை அவர்கள் இரண்டு பேரும் தடுத்து நிறுத்த வேண்டும், என்பது அவர்களது செயல் திட்டம்.

பிர்லா மாளிகைக்குப் போவதற்குமுன், பிர்லா மந்திருக்குப் போகவேண்டும் என்பது அவர்களின் விருப்பம். துப்பாக்கி வைத்திருக்கும் கோட்சே முதலில் புறப்பட்டான். ஆனால் அவன் பிர்லா மந்திருக்குப் போகவில்லை. அதற்கு அருகே உள்ள சிவாஜியின் சிலையருகே உலாத்திக் கொண்டிருந்தான். பின்னால் புறப்பட்ட ஆப்தேயும், கார்கரேயும் பிர்லா மந்திருக்குச் சென்றார் கள். காலணிகளை வெளியே கழற்றி வைத்துவிட்டு, தங்களது வருகையின் அடையாளமாக கோவில் மணியை சிலமுறை ஆட்டி னார்கள்.

மந்திரில் உள்ள லட்சுமி நாராயணன், காளி ஆகிய கடவுள்களிடம் தங்களது முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

மக்கள் போற்றும் 78 வயதான முதிய தலைவரைக் கொலை செய்வதற்கு அவர்கள் கடவுளின் துணை யை வேண்டினார்கள். யார் எதை வேண்டினாலும் தட்டில் விழும் சில காசுகளுக்காக கடவுளின் அருளுக்கு அடையாளமாக சில பூக்களையும், யமுனை நதியின் (டெல்லியில் ஓடுவதால் சுலபமாகக் கிடைக்கும்) புனித நீரில் சில துளிகளையும் கொடுக்கும் பிர்லா மந்திரின் அர்ச்சகர் அவர்களுக்கும் பிரசாதங்களைக் கொடுத் தார்.

வணங்கிய கடவுள்கள் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியே வந்து, எதிரே காத்திருந்த கோட்சேயிடம் நேரமாகி விட்டது என்பதற்கு அடையாளமாக தனது கைக்கெடிகாரத்தைப் பார்த்தான். சின்ன முள்ளிலும் பெரிய முள் 6லும் இருந்தது. ஆப்தேயையும் கார்கரேயையும் பார்த்து, இரண்டு கைகளையும் கூப்பி வணங்கிவிட்டு எதிரே வந்த டோங்கா ஒன்றைப் பிடித்து பிர்லா மாளிகைக்குச் சென்றான் கோட்சே. சில நிமிடங்களுக்குப்பின் இன்னொரு டோங்காவைப் பிடித்து அவனைப்பின் தொடர்ந்தார்கள் ஆப்தேயும் கார்கரேயும்.

நேரம் தவறாமை காந்தியின் உடன்பிறந்த குணம். எந்தச் சூழ்நிலையிலும் சரியாக 5 மணிக்கு வழிபாட்டுக் கூட்டத் தைத் தொடங்கி விடுவார். இப்போது நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

காந்தியிடம் பேசிக் கொண்டிருந்தவர் இந்திய அரசின் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல், அவர்களின் பேச்சில் குறுக்கிடுவது மரியாதைக் குறைவாக இருக்கும். நேரத்தை நினைவுபடுத்தா விட்டால் காந்தியின் கோபத்திற்கு ஆளாகநேரிடும் என்ற அச்சத்தோடு காந்தியின் பார்வைபடும் இடத்தில் நின்று அவரது கடிகாரத்தைச் சுட்டிக்காட்டினார் மனு.

குறிப்பறிந்த காந்தி அவரது இங்கர்சால் கடிகாரத்தை இடுப்பிலிருந்து எடுத்துப் பார்த்தபோது அது 5 மணி 10 நிமிடங்கள் எனக்காட்டியது. கடவுளைக் காக்க வைப்பது குற்றமாகும். வழிபாட்டுக் கூட்டத்திற்கு நேரமாகி விட்டது, நான் புறப்படுகிறேன் என்று படேலுக்கு விடை கொடுத்துவிட்டு புறப்பட்டார் காந்தி.

உண்ணாவிரதம் இருந்தே உடல்ப லத்தை இழந்திருந்த அவர் மனு, ஆபா ஆகிய இருவரின் தோள்களைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்வது வழக்கமாகிவிட்டது. இன்றும் அவர்களது தோள்களைப் பிடித்தவாறு வேகமாக நடக்கத் தொடங்கினார்.

அதற்கு முன்னதாகவே காந்தியின் எச்சில் துப்புவதற்கான குடுவை, உரையாற் றுவதற்கு எழுதி வைத்த விவரங்கள், குறிப்புகள் எடுப்பதற்கான சிறு புத்தகம் பேனா ஆகியவைகளை ஒரு பையில் வைத்து எடுத்துக் கொண்டார் மனு.

காந்தி வழிபாட்டுக் கூட்டத்திற்கு வரும்போது வழக்கமாக அவருடன் வருபவர்களில் இருவர் இன்று வரவில்லை. ஒருவர் டாக்டர் சுகீலா நய்யார், பாகிஸ்தான் சென்றிருந்தார். மற்றொருவர் டெல்லியின் காவல்துறைத் துணைத்தலைவரும், காந்தியின் பாதுகாப்புக்கான பொறுப்பினை ஏற்றிருந்தவருமான டி.டபிள்யூ.மெஹ்ரா.

கடந்த சில நாட்களாக அவரைத் தாக்கி இருந்த புளூ காய்ச்சல் அவரை எழுந்து நடமாட முடியாத அளவிற்குச் செய்துவிட்டது. எனவே ஏ.என்.பாட்டியா என்ற அதிகாரியிடம் பாதுகாப்புப் பொறுப்பினை ஒப்படைத்திருந்தார். அவரும் மறுநாள் டெல்லியில் நடக்கவிருந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்குச் சென்றுவிட்டார். இரண்டு பக்கமும் போகன்வில்லா மலர்கள் பூத்துக் குலுங்கும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட நடைபாதையில் வழிபாட்டு மேடைக்குச் செல்வது காந்தியின் வழக்கம்.

இன்று நேரமாகி விட்டது. எனவே வழக்கமான பாதையைத் தவிர்த்து இடையே இருந்த புல்வெளி வழியாக நடக்க ஆரம்பித்தார் அவர்.

கொலையாளிகள் மூவரும் மக்களோடு மக்களாக வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்திருந் தனர். உள்ளே நுழையும்போது நாதுராம் கோட்சேயிடம் உடல்ரீதியான சோதனை எதுவும் செய்யப்படவில்லை. அதுவே வெற்றிக்கான நல்ல சகுனமாக இருந்தது அவர்களுக்கு. வழிபாட்டு மேடைக்கு அருகே செல்லாமல் கூட்டத்தின் வெளிவட்டத்தில் மேடையின் வலதுபுறமாக நின்றிருந்தான் கோட்சே. மக்களின் பார்வை காந்தியை நோக்கி இருக்கும்போது பின்னால் நின்றால்தான் எந்த இடையூறும் இல்லாமல் குறிபார்த்துச் சுட முடியும் என்பது அவனது கணக்கு. அவனுக்கு இருபக்கமும் ஆப்தேயும், கார்கரேயும் நின்று கொண்டிருந்தார்கள். மேடைக்கும் அவர்களுக்குமான தூரம் 30 அடிக்கும் குறைவாகவே இருக்கும் என்பதைக் கணக்கிட்ட ஆப்தே, சரியான இடத்தைத்தான் கோட்சே தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கூட்டத்தில் அமர்ந்த பிறகு காந்தியைச் சுடவேண்டும் என்று தீர்மானித்திருந்த கோட்சே, கடிகாரத்தைப் பார்த்தான். அதன் முட்கள் 5 மணியைத் தாண்டி இருந்தன.

இதுவரை லப்&டப் என்று துடித்துக்கொண் டிருந்த அவனது இதயம் இப்போது, என்ன ஆயிற்று காந்திக்கு? ஏன் தாமதப்படுத்துகிறார் என்று துடிக்க ஆரம்பித்தது.

நேரம் தவறும் போதெல்லாம் மனு மீதும், ஆபா மீதும் கோபப்படும் காந்தி, ‘நீங்கள் தான் எனது கடிகாரங்கள். நான் தனியே இன்னொரு கடிகாரத்தைப் பார்க்க வேண்டுமா?’ என்று கோபமான குரலில் கூறியவாறு மக்களைப் பார்த்துக் கையசைத்தவாறு வந்து கொண்டிருந்தார். வழக்கமான பாதையில் வராமல் வேறு திசையில் இருந்துவரும் காந்திக்கு வழிவிடும் விதத்தில் ‘பாபுஜீ... பாபுஜீ...’ என்ற ஆரவார வரவேற்புக் குரல்களோடு மக்களே அவருக்கு பாதை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மின்னல் வேகத்தில் நிலைமைகளைப் புரிந்துகொண்டான் கோட்சே, அந்தப் பாதை வழியாகத்தான் காந்தி வருவார், கூட்டத்தின் பின்னால் இருக்கும் தன்னைத் தாண்டித்தான் அவர் முன்னே போக வேண்டும். வழிபாட்டு மேடையில் அமர்ந்த பிறகு 30 அடி தூரத்தில் இருந்து சுடுவதைவிட எதிரே வரும்போது மூன்றடி தூரத்திலிருந்து சுடுவது சுலபம் என்று அவனது மூளை கணக்குப் போட்டது. கடவுளே பார்த்துக் கொடுத்த நல்ல வாய்ப்பு இது. இரண்டு அடிகள் முன்னே வந்தால் போதும். காந்தியை நேருக்கு நேர் சந்திக்கலாம் என்று தீர்மானித்தான்.

அவனது இரண்டு கைகளும் சட்டைப்பைக்குள் இருந்தன. இடது கையை வெளியே எடுத்தான். அதில் ஒன்றுமில்லை. வலதுகை, சட்டைப்பைக் குள் தானியங்கி துப்பாக்கியை லாவக மாகப் பிடித்திருந்தது.

காந்தி மூன்றடி தூரத்தில் வந்துவிட்டார். ‘நமஸ்தே காந்திஜி’ என்று கூறிய கோட்சே, இடுப்புவரை குனிந்து வணங்கினான். அவன் காந்தியின் கால்களில் விழுந்து வணங்க முயற்சிக்கிறான் என்று கருதிய மனு, ‘பாபுவின் வழிபாட்டுக்கு நேரமாகி விட்டது’ என்று கூறி அவனைத் தடுப்பதற்காகக் கையை நீட்டினார்.

கோட்சேயின் இடது கை முரட்டுத் தனமாக அவரைத் தள்ளியது. அவன் தள்ளிட்டதால் தடுமாறிய மனுவின் கையிலிருந்த காந்தியின் எச்சிற் துப்பும் குடுவை அடங்கிய பை கீழே விழுந்து சிதறியது. அதை எடுக்க கீழே குனிந்தார் மனு.

வலது கையிலிருந்த துப்பாக்கியின் விசையை மூன்று முறை அழுத்தினான் கோட்சே.

பாயின்ட் ப்ளாங் ரேஞ்சில் சுடப்பட்ட அந்த மூன்று குண்டுகளில் ஒன்று காந்தியின் வயிறு வழியாக வெளியேறியது. இன்னொரு குண்டு முதுகைத் துளைத்து வெளியே வந்தது. மற்றொரு குண்டு வெளியில் வர மனமில்லாமல் அவரது நுரையீரலில் பதிந்தது.

வேடனின் அம்புபட்டதுபோல் துடித்து வீழ்ந்த அந்த சமாதானப் புறாவின் வாய்¢‘ஹேராம்! ஓ கடவுளே!’ என்று முணுமுணுத்தது.

அவரது இடுப்பிலிருந்து நழுவிக் கீழே விழுந்த, அவருக்கு விருப்பமான இங்கர்சால் கடிகாரம் அப்போது காட்டிய நேரம் 5 மணி 17 நிமிடங்கள்.

- ‘1948 சனவரி 30’ நூலிலிருந்து...

இனிமேல் இஸ்லாமியர்கள் குறித்து மத துவேஷத்துடன் எழுத மாட்டேன்-கோர்ட்டில் எழுதிக் கொடுத்த சு.சாமி

டெல்லி: இஸ்லாமியர்கள் குறித்து மத துவேஷத்தைத் தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய வழக்கில், இனிமேல் அதுபோல எழுத மாட்டேன் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்ததால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

Subramaniam Swamy


இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு துவேஷக் கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை எழுதியதால் சாமி மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கு இன்று அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக இனிமேல் இதுபோன்ற கட்டுரைகளை எழுத மாட்டேன் என்று சாமி எழுதிக் கொடுத்தார்.
மேலும் கைது செய்யப்பட்டால் ரூ. 25,000 ரொக்க ஜாமீனில் வெளிவரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

சனி, 28 ஜனவரி, 2012

தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்

இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்......

மாநில தலைவராக

மௌலவி JS. ரிபாயி

JS Rifaai

மாநில பொதுச்செயலாளராக

P. அப்துல் சமது

Abdul samad

மாநில பொருளாளராக

O.U. ரஹ்மத்துல்லாஹ்

OU Rahmathullah

மமக மாநில பொதுச்செயலாளராக

M. தமிமுன் அன்சாரி

Thamimun Ansari

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.....

குடியரசு தினத்தை முன்னிட்டு கூத்தாநல்லூர் தமுமுக மற்றும் விநாயாக மிஷன் மருத்துவக்கல்லூரி இனைந்து நடத்திய இலவச பொது மருத்துவமுகாம் புகைப்படம்






கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு பதட்டம்

கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு பதட்டம்

கோவை குனியமுத்தூர் மூவேந்தர் நகர் பகுதியில் தாஜீல் இஸ்லாம் ஹனிபி சுன்னத் ஜமாத் கிளை பள்ளிவாசல் உள்ளது.

நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளிவாசல் முன்புறம் உள்ள ஜன்னல் கண்ணாடியை கல்வீசி தாக்கினர். பள்ளிவாசலில் தங்கியிருந்த மோதினார் நூர்முகமது சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது சிலர் அங்கிருந்து ஒடியுள்ளனர். பள்ளிவாசல் அருகே தமுமுக மாவட்ட துணைத்தலைவர் ரபீக் வீடு உள்ளது. அவரது காரைவீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைத்துள்ளனர்.தகவல் அறிந்ததும் .தமுமுக மாநில செயலாளர் கோவை உம்மர் தலைமையில் தமுமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் முன்பு திரண்டனர் தகவல்அறிந்ததும் போலிஸ் கமிஷனர் சுந்தரமுர்த்தி, துணைக்கமிஷனர் ஹேமா கருணாகரன், உதவிகமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு
வந்து விசாரித்தனர். வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இதே பள்ளிவாசலில் 2009 ம் ஆண்டு இதுபோல் ஜன்னல் கண்ணாடியை உடைத்துனர். கோவை மீண்டும் கலவர நடக்க அதிகமாக வாய்ப்பு உள்ளது இறைவன் பாதுகாப்பான். அமீன்

கோவை தங்கப்பா

வியாழன், 19 ஜனவரி, 2012

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்

இந்திய இசுலாமியர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றன. இசுலாமியர்கள் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்கள், வெளியேற்றப்பட வேண்டியவர்கள் போன்ற துவேச பிரச்சாரத்தை நீண்ட நாட்களாக இந்த அமைப்புகள் செய்து கொண்டு இருக்கின்றன. இந்த பிரச்சாரத்தின் விளைவாக இந்தியாவில் ஆயிரக் கணக்கான உயிர்களை பழி வாங்கிய மதக்கலவரங்களும், மதமோதல்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்தப் பொய்பிரச்சாரம் இந்தியாவின் அமைதியை நிலை குலைய செய்த வேளையில் இந்திய சமய சார்பின்மையையும் கேள்வி குறியாக மாற்றியுள்ளது.

இந்த மதவாத பிரச்சாரத்திற்கு சாதகமாக இசுலாமியர்கள் இந்திய நாட்டை கட்டமைப்பதற்கு இயற்றிய தொண்டினை திட்டமிட்டு திரைக்கு பின்னால் மூடி மறைக்க கூடிய சதி வேலைகளும் முதன்மையாக நடந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக இசுலாமியர்கள் தேச விடுதலைக்கு இயற்றிய தொண்டு வெளிச்சத்திற்கு வராமல் தடை செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்இந்திய இசுலாமியர்கள் தேசிய எழுச்சியின் தொடக்கம் முதல் இந்திய விடுதலைக்கான தியாக தீபத்தை எற்றுவதில் பங்காற்றியுள்ளனர். இந்தியாவில் தேசியம் மற்றும் ஆங்கிலேய விரோத எண்ணங்கள் விதைக்கப்படுவதில் முஸ்லிம்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். இதில் தமிழக முஸ்லிம்கள் தங்களுக்கே உரிய முற்போக்கு தன்மையுடன் முதன்மையான முறையில் தங்கள் தியாகத்தை பதிவு செய்துள்ளனர். தமிழக முஸ்லிம்களின் தியாக செயல்கள் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியாமல் இருக்கின்றது.

இந்திய சமயசார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட சில சகோதரர்கள் வெளிக்கொணர படாத இந்த உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற புனித நோக்கோடு அல்லும் பகலும் வியர்வை சிந்திக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் உழைப்பு வீணாகாமல் இருக்க, காணாமல் போன வரலாற்றுக் கதாபாத்திரங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று, இந்திய சமயசார்பின்மை நிலைநாட்ட உதவிட வேண்டும் என்ற நோக்கோடு இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது.

தமிழக ஆங்கிலேயே சிப்பாய்கள் ஆங்கில அரசிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களின் ஆணைக்கு இணங்கி அமைதியான முறையில் செயல்பட்டதாக நீண்ட நாட்களாக நம்பப்படுகிறது. சென்னை ஆவணகாப்பகத்தில் இருக்க கூடிய ஓரு ஆவணம் இந்த நம்பிக்கையை தகர்த்து எரிகின்றது. தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த 9வது பட்டா¬யன் படையை மும்பைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆங்கில அரசு 1775ல் முடிவு செய்திருந்தது. இந்த முடிவை எற்க மறுத்து இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்கியவர் மக்தும் சாஹிப் என்பது ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்டது. ஆங்கில அரசு அவருக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்து, கேப்டன் கெல் என்கிற ஆங்கில அதிகாரி 900 சிப்பாய்கள் முன்னிலையில் மக்தும் சாஹெப்பை இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றார். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இடம் பிடிக்க வேண்டிய இந்த தகவல் ஆவண காப்பகத்தில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 1806ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் திப்பு சுல்தானின் வாரிசுகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் இயற்றிய குறிப்பிடத்தக்க பங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அந்த சிப்பாய் கலகத்தில் பங்கேற்றதன் காரணமாக ஆங்கில அரசு இசுலாமியர்களை சந்தேகத்துடன் நோக்கினார்கள் என்பது ஃர்ம்ஸ் என்ற ஆங்கில அதிகாரியின் குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. இந்த புரட்சியில் பங்கேற்றதன் எதிரொலியாக ஆங்கில இராணுவத்தில் இசுலாமியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல இசுலாமியர்கள் சென்னையிலும் வேலூரிலும் சிறை வைக்கப்பட்டனர். சிலர் காடுகள் நிறைந்த தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்1806ல் எற்பட்ட எழுச்சியும், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பும் பரவலாக இன்று அறியபட்டாலும், 1839ல் வேலூர் முஸ்லிம்கள் மீண்டும் ஓரு எழுச்சிக்கு தீவிரமாக திட்டமிட்டு அது தோற்றுப்போன வரலாறு பலருக்கு தெரியாத செய்தியாக இருந்து கொண்டு இருக்கிறது. 1806க்கு பிறகு பல இஸ்லாமிய மௌல்விகளும், பக்கீர்களும் வட இந்தியாவில் இருந்து வேலூருக்கு குடிபெயர்ந்தனர். இந்த மௌல்விகளும், பக்கீர்களும் வேலூர் பகுதியில் ஆங்கில விரோத தீயை பற்ற வைத்து கொண்டிருந்தனர். அந்த கால கட்டங்களில் ஜøம்மா பயான்கள் ஆங்கில அரசுக்கு எதிரான கொந்தளிப்புகளை ஊருவாக்க கூடியதாக இருந்தன.

புரஹா ஷா என்கின்ற பக்கீர் வேலூரில் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து வேலூரில் தங்கி இருந்த மௌல்விகளுக்கும், பக்கீர்களுக்கும் ஆஜ்மீர் நகரில் இருந்த ஆங்கில அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இருந்த தொடர்பும், வேலூர் முஸ்லிம்கள் 1839ல் கிளர்ச்சி செய்ய தீட்டிய திட்டமும் வெளியானது. அதே போல் அதே கால கட்டத்தில் வேலூர் பக்கீர் காதர் மீரா என்பவர் கைது செய்யப்பட்டபோது வேலூர் முஸ்லிம்களுக்கும், சென்னை பல்லாவரத்தில் இருந்த ஆங்கில எதிர்ப்பு சிப்பாய்களுக்கும் இருந்த தொடர்பும் அவர்கள் சதித்திட்டத்திற்காக இணங்கி செயல்பட்டது தெளிவானது. அதே வேளையில் வேலூரில் ஆங்கில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகத்ததற்காக லத்தீப் சாஹிப் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழ¬ல் வேலூரில் இருந்து வெளிவந்த சுல்தானா அக்பர் என்கின்ற தினசரி பத்திரிக்கை ஆங்கில விரோத கருத்துக்களை முஸ்லிம்கள் மத்தியில் பதிய செய்தது. ஆக வேலூர் முஸ்லிம்கள் 1806 க்கு பிறகும் ஆங்கில அரசுக்கு தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வேளையில் தேசியம் செழித்து வளர வித்திட்டன என்பது உறுதியாகிறது.

1857 புரட்சியின் பாதிப்புகள் தமிழகத்தை எட்டவில்லை என நீண்ட நாட்களாக போதிக்கப்பட்டு வந்தது. இதனால், சமீபகாலமாக தமிழகத்திலும் 1857ன் எழுச்சியின் பிரதிபழிப்புகள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த காலகட்டத்திலும் தமிழக முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்துள்ளனர் என்பது அறிந்து பெருமை பட வேண்டிய செய்தி மட்டும் ஆல்ல அதை இசுலாமிய சகோதரர்களிடம் கொண்டு சென்று இந்த நாட்டின் விடுதலைக்கு வித்திட்டவர்களில் இசுலாமியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்1857 புரட்சியின் போது சென்னையில் ஆற்காடு நவாப் அவர்களின் தலைமையிடமாக கருதப்பட்ட திருவல்¬லிக்கேணியில் புரட்சியின் தாக்கம் தென்பட வாய்ப்புகள் இருந்ததாக கருதிய ஆங்கிலேயர்கள், இந்த பகுதியை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குலாம் கௌஸ் மற்றும் ஷேக்மன்னு என்கின்ற இரண்டு நபர்கள் சென்னை மாகாணத்தை சேர்ந்தவர்கள் புரட்சியில் பங்கேற்க வேண்டும் என்கின்ற அவர்களின் எண்ணத்தை வழியுறுத்தி போஸ்டர்கள் ஓட்டிய காரணத்தால் கைது செய்யப்பட்டனர். அன்றைய வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சையத் குசா முஹம்மத் ஆவ்குர்ஹா ஹøசைன் என்பவர் வேலூர் மற்றும் புங்கனூர் பகுதிகளில் 1857 புரட்சிக்கு ஆட்களை திரட்டிய காரணத்தால் மார்ச் 1857ல் கைது செய்யப்பட்டார் ஆகஸ்டு 1, 1857ல் சேலம், புட்நூல் தெருவில் ஆய்யம் பெருமாள் சாரி என்பவரின் வீட்டுக்கு முன் ஆங்கில ஆட்சி அன்றைய தினம் வீழ்ந்துவிடும் என்ற செய்தியை எதிர்பார்த்து பலர் கூடியிருந்தனர். அந்த கூட்டத்தில் ஓருவராக இருந்த ஹைதர் என்பவர் இவ்வளவு நேரம் சென்னையில் இந்திய தேசிய கொடி எற்றப்பட்டிருக்கும் என்று தெரிவித்தது அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1857 புரட்சியின்போது செங்கல்பட்டில் அருணகிரி மற்றும் கிருஷ்ணா என்கின்ற இருவர் இந்த பகுதியில் மக்களை திரட்டி கலகம் விளைவித்து கொண்டிருந்தனர். செங்கற்பட்டில் எற்பட்டிருக்க கூடிய இந்த எழுச்சியை ஓருங்கிணைக்க சென்னையில் இருந்து சுல்தான் பக்ஷ் என்பவர் செங்கல்பட்டு சென்றார். இந்த தகவல்களையும் சுல்தான் பக்ஷின் நடவடிக்கைகள் சம்மந்தமாகவும் செங்கற்பட்டு மாஜிஸ்ரேட் சென்னை மாகாண அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக முஸ்லிம் 1857 புரட்சிக்கு முன்னரும், புரட்சியின் நேரத்திலும் மட்டும் இல்லாமல் புரட்சிக்கு பின்னரும் தொடர்ந்து ஆங்கில எதிர்ப்புணர்வை பல இன்னல்களுக்கிடையே கடைப்பிடித்துதான் பரப்பியும் வந்தனர்.

1869ல் கூட வேலூர் நகரத்தில் கலவர சூழ்நிலை இருந்ததாகவும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 20 வது பட்டாயன் வேலூரில் தங்கி இருந்த ஐரோப்பியர்களை சுட்டுக் கொல்ல திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியானதால் அங்கு இருந்த ஐரோப்பியர்கள் அனைவரும் தற்காப்புக்காக துப்பாக்கிகள் வைத்துக்கொள்ளக் கூடிய உரிமை வழங்கப்பட்டது என்பது அரசு உவணங்களில் பதிவாகியுள்ளது.

ஆக இசுலாமியர்கள் இந்திய தேசியவாத எழுச்சியின் தொடக்கம் முதல் சுதந்திர போராட்டத்தின் பல்வேறு கட்டங்களிலும் தங்களின் வீரத்தை விதைத்து போராடி, தியாகித்து, இரத்தம் சிந்தி அந்த இயக்கத்தை வளர்த்து இருக்கின்றனர். இதில் தமிழக முஸ்லிம்கள் முண்ணணியில் இருந்தார்களேயல்லாமல், இரண்டாம் இடத்தில் இருக்கவில்லை. இது முஸ்லிம்கள் பெருமை கொள்ள வேண்டிய, அறிந்து பெருமைப்பட வேண்டியதன்றோ!

-ஆபுல் பாசல்

source : tmmk.in

புதன், 18 ஜனவரி, 2012

பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் போலியானது என்கவுன்டரில் போலீஸ்தான் கொன்றது”

பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் போலியானது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கொளுத்திப் போட்ட வெடி டில்லி அரசியல் மட்டங்களில் நன்றாகவே வெடிக்கத் தொடங்கிவிட்டது.

என்கவுன்டர் நடந்தபோது அப்பார்ட்மென்டுக்கு அருகே சிதறி ஓடும் பொதுமக்கள்

பாரதீய ஜனதா கட்சி “ஆமா.. அதுதானே..” என்று தொடங்கி, பாட்லா ஹவுஸ் போலி என்கவுன்டர் தொடர்பில் அரசு பதில்லொல்லியே ஆகவேண்டும். தார்மீகப் பொறுப்பேற்று உட்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறிவிட, “எனக்கு இருக்கும் சிக்கல் போதாதென்று, இது வேறா?” என அதிர்ந்து போயுள்ளார் உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அவசர அவசரமாக தனது கட்சிப் பிரமுகரின் கூற்றையே மறுத்துள்ள அமைச்சர் சிதம்பரம், “2008-ல் பாட்லா ஹவுஸ் துப்பாக்கிச் சண்டை நிஜமானது. பாதுகாப்புப் படையினரும் தீவிரவாதிகளும் நிஜமாகவே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். அந்தச் சண்டையில்தான் இரு தீவிரவாதிகளும் இறந்து போனார்கள்” என்று கூறியுள்ளார்.

இவர்கள் குறிப்பிடும் என்கவுன்டர் 2008-ம் ஆண்டு செப்டெம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. ஆபரேஷன் பாட்லா ஹவுஸ் என்பது அதற்கு சூட்டப்பட்ட பெயர். டில்லி ஜாமியா நகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் அத்திய முஜாஹிதீன் அமைப்பினர் தங்கியிருப்பதாக கிடைத்த உளவுத் தகவலை அடுத்து, இந்த ஆபரேஷன் திட்டமிடப்பட்டது என்றது டில்லி போலீஸ்.

என்கவுன்டரின் பின் தடயங்களைத் தேடும் போலீஸ்

டில்லி போலீஸின் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மோகன் சர்மா தலைமையில் போலீஸ் படை அந்த வீட்டை சுற்றி வளைத்தது. துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது.

இறுதியில், இரு தீவிரவாதிகள் (ஆதிஃப் அமின், மொஹமெட் சஜித்) கொல்லப்பட்டார்கள், இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என டில்லி போலீஸ் அறிவித்தது.

தாக்குதலுக்கு தலைமை வகித்துச் சென்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் மோகன் சர்மாவும் கொல்லப்பட்டார்.

இந்த என்கவுன்டர் தொடர்பாக அவ்வப்போது புதிய புதிய கதைகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இது எப்போதுமே ஒரு சர்ச்சைக்குரிய என்கவுன்டராகவே இருந்தது.

இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரே இது போலி என்கவுன்டர் என்று சொல்லிவிட்டதில், பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. பூதத்துக்கு பிரியாணி போட பாரதீய ஜனதாவும் தயாராகி விட்டது.

என்கவுன்டர் முடிந்தபின் அங்கு குவிந்த மக்கள்

பா.ஜ.க. பேச்சாளர் ரவி ஷங்கர் பிரசாத், “அமைச்சர் சிதம்பரம் இது நிஜமான என்கவுன்டர் என்று சொல்கிறார். ஆனால், அவரது கட்சித் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் போலி என்கவுன்டர் என்கிறார். திக்விஜய் சிங் இந்தக் குற்றச்சாட்டை சுமத்திய மேடையில் ராகுல் காந்தியும் இருந்தார்.

ராகுல் காந்தி முன்னிலையில் திக்விஜய் சிங் சொல்வதை நம்புவதா, அமைச்சர் சிதம்பரம் சொல்வதை நம்புவதா? சோனியா காந்தியும் ராகுலும் இது தொடர்பாக வாய் திறந்து ஏதாவது கூறும் உத்தேசம் ஏதாவது உள்ளதா?” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.

“எனக்குத் தெரிந்தவரை இது நிஜமான என்கவுன்டர்தான். இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நான் பார்த்துவிட்டேன். போலியாக எதுவும் தெரியவில்லை” என்கிறார் அமைச்சர் சிதம்பரம்.

ஆட்சியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது, கட்சியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தியோ இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

நிலைமை கழுத்துவரை இறுகும்வரை கருத்து தெரிவிக்கும் வழக்கம் அவர்களுக்கு இல்லை.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

சமூக பொறுப்பற்ற தினமலர்..!

கீழே நீங்கள் காணும் படமானது இன்று தினமலர் நாளிதழில் நெஞ்சினிலே ஆல்பம் பகுதியில் இடம் பெற்ற படம் தான் அது.

பசுவின் பக்கதி
தீ மிதிக்கும் பசு: மகர சங்கராந்தியை முன்னிட்டு,
பெங்களூரு மல்லேஸ்வரம் மைதானத்தில் நடந்த
"சங்கராந்தி கோ உற்சவா' நிகழ்ச்சியில், தீ மிதித்த பசு.



மனிதன் தீ மிதிகின்றான் என்றால் அவன் தனது பகுத்தறிவை பயன்படுத்தி? கடவுள் என்று ஒன்று
இருக்கின்றது. அந்த கடவுளுக்கு இது போல பல தேவைகள் இருக்கிறது. கடவுள் நம் தேவையை நிறைவேற்றினால் அந்தகடவுள் நம்மை இதுபோல் வருத்தி கொள்ள விரும்புகின்றான் என்ற அடிப்படையில் தீ மிதிகின்றான்.
அது அவனின் கடவுள் நம்பிக்கை இது மூட பழக்கம்மா இல்லையா என்ற விவாதத்திற்கு நாம் செல்லவேண்டாம். அதை பற்றி விவாதிக்க
நிறைய பேர் இருக்கின்றனர்.
ஆனால் ஒரு பகுத்தறிவற்ற வாயில்லா ஜீவனை கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் இப்படி தீயில் நடக்கவைத்து துன்புறுத்துவது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. இதை கடவுள் பக்தி என்று சொல்லுவதா? அல்லது பைத்திய காரத்தனம் என்றுசொல்லுவதா?. உனக்கு கடவுள் பக்தி அதிகமானால்
நீ தீயில் இறங்கு அல்லது நாக்குல வேல் குத்திக்க அல்லது என்ன வேண்டுமானாளும் செய்துகொள். உன்னை யாரும் எதுவும் செய்ய போவது
இல்லை.
இந்த வாயில்லாத ஜீவனை வருத்துவது அனைத்து சாமானிய மனிதருக்கும் மூடபழக்கம் என்று தெரியும். ஆனால் இந்த தினமலர் நாளிதழ் இதை அங்கீகரிப்பது போல படத்தை வெளியிட்டுள்ளது. சாதாரண
பொதுமக்களை விட சமூக பொறுப்பில் அதிக அக்கறையுடன் நடந்துகொள்ள
வேண்டிய ஒரு நாளிதழ் அதை அங்கீகரிப்பது போல செய்தி வெளியிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
இதை நான் எந்த மதத்தையும் புண்படுத்த வேண்டும் என்பர்த்காக சொல்ல வில்லை. கடவுள்நம்பிக்கை என்பது அவரவர் மனம் சார்ந்தது ஒருவர்
கடவுளை எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம். அது அவர்களின்
தனிபட்ட உரிமை. ஆனால் ஒரு நாளிதழ் அப்படி இருக்க கூடாது அது சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்க்க்காகவே இதை எழுதுகின்றேன்.
நான் பார்த்த வரையில் தினமலர் நாளிதழ் சமூக பொறுப்பற்ற ஒரு பத்திரிக்கையாகவே இன்று வரை தனது செய்திகளை
வழங்கி வருகின்றது. என்னை பொறுத்தவரையில் தினமலர் மக்களால்
புறக்கணிக்க வேண்டிய ஒரு நாளிதழ். இந்த மக்கள் என்றுதான் சிந்திக்க போகின்றர்களோ தெரியவில்லை.

source : http://kalamarudur.blogspot.com/2012/01/blog-post_16.html

வியாழன், 12 ஜனவரி, 2012

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

தானே புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடவும் நிவாராண பணிகளை மேற்க்கொள்ள தமுமுக தலைவர் பேரா எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையிலான குழு 09.1.2011 அன்று விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்றது. இக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக துணைச் செயலாளர் எஸ்.எம். ஜின்னா, தோழமை இயக்கத்தின் இயக்குனர் தேவநேயன் ஆகியோர் இருந்தனர்.

சுனாமி தாக்குதலுக்கு பின் மிகப் பெரிய இழப்பை கடலோர கிராமங்கள் சந்திருந்தது என்பது அனைவராலும் உணர முடிந்தது. ஆழமான வேர்களுக்கு வாழ்ந்து வந்த மரங்கள் வீழ்ந்து கிடந்த காட்சிகள் தானேவின் தாடண்டவத்தை நகல் எடுத்து காட்டியது.

தமுமுகவின் சார்பில் வீட்டை இழந்து நிர்கதியான மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை விழுப்புரம் மாவட்ட தலைவர் கோட்டக்குப்பத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அரிசி, சமையல் பொருட்கள் வழ்ங்கப்பட்டது.

தமுமுக சார்பில் சுமார் 3 லட்சம் மதிப்பில் இடைக்கால நிவாரண உதவிகளை வழங்கப்பட்டது.

மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த பாண்டிசேரி பகுதியில் உள்ள விளியானூர் பகுதிகளை பார்வையிட்டு அங்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள நூர் முஹம்மது நகர், நியூ காலனி, ரயில் நிலைய பகுதி புயல்சேத பகுதிகளை பார்வையிட சென்ற போது அங்கு முற்றிலுமாக கூறைகள் இல்லாத நிலையில் வீடுகள், ஒடுகள் இல்லாத வெறும் சுற்றுச்சுவர் மட்டுமே இருந்த வீடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

கடலூர் ஓ.டி. திரௌபதி நகர், மதினா பள்ளி நகர் 45 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் புயலால் கடுமையாக பாதிக்கப் பட்ட இருந்த பகுதிகளில் முற்றிலுமாக பார்வையிட்டு அதிகமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சுமார் 200 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கபட்டது.

இந்நிவாரண பணிகளை பார்வையிடும் போது விழுப்புரம் மாவட்ட தலைவர் எம்.ஒய். முஸ்தாக்தீன், மாவட்ட செயலாளர் முஹம்மது ரபி, கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ. அபூபக்கர் சித்தீக் மாவட்ட வி.எம். ஷேக் தாவூத், மாவட்ட மமக செயலாளர் எம். மதார்ஷா, கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் எம்.எச். மெஹராஜ்தீன் மாவட்ட செயலாளர் அமானுல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.

இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த பேரா. எம். எச். ஜவாஹிருல்லா.

சேதமடைந்த பகுதிகளில் உடனே நிவாரண பகுதி மத்திய மாநில அரசுகள் இணைந்து செய்ய வேண்டும் எனவும் "தானே" புயலில் வேரோடு வீழ்ந்த மா, பலா, தென்னை, கரும்பு மரங்களை மீண்டும் வளர்த்து, மகசூல் தரும் வரை அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், "தானே" புயலை பேரிடர் இழப்பாக மத்திய அரசு அறிவித்து, பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 15000 ஐ இடைக்கால நிவாரண தொகையாக அரசு வழங்க வேண்டுமென கூறினார்.

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்


"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்