1. தமிழக இடஒதுக்கீடு
தமிழகத்தில் தற்போது முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை குறைந்தது 5 சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
2. மத்திய அரசில் இடஒதுக்கீடு
மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கும் அனைத்து சிறுபான்மையினருக்குமான 4.5 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு மோசடி என இப்பொதுக்குழு குற்றம்சாட்டுகிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின்படி மொத்த சிறுபான்மையினருக்கும் 15 சதவீத இடஒதுக்கீடும், அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் 10 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்றும், இதற்காக அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.
3. கூடங்குளம் அணுஉலை விவகாரம்
கூடங்குளம் அணுஉலை உற்பத்திக்கு எதிராக நான்கு மாத காலமாக அப்பகுதி மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நமது எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பையும், சுற்றுச்சூழலையும் காத்திடும் வகையில் கூடங்குளம் அணுஉலை செயல்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மேற்கு வங்கத்தில் அணுஉலைகளை அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில அரசு அறிவித்திருப்பது போல், இவ்விஷயத்தில் தமிழக அரசும் உறுதியான நிலைபாட்டைப் பின்பற்ற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
4. முல்லைப் பெரியாறு விவகாரம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகள், மனிதாபிமானத்திற்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் சவால்விடும் வகையில் இருப்பதாக இப்பொதுக்குழு குற்றம்சாட்டுகிறது.
இவ்விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
5. மீனவர்கள் பாதுகாப்பு
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளன. இவ்விஷயத்தில் இந்திய அரசு போதிய அக்கரையின்றி செயல்படுகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடற்பகுதியில் இந்தியக் கடற்படையை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
6. தீவிரவாத பீதி
இந்தியாவெங்கும் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் காவி பயங்கரவாத சக்திகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குப் பின்னணியாக செயல்படும் முதன்மை சக்திகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அனைத்து குண்டுவெடிப்புகளுக்குப் பின்னாலும் உள்ள இவர்களது தொடர்புகள் முழுமையாக கண்டறியப்பட வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
7. அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
இந்தியா முழுக்க பல்வேறு தீவிரவாதப் பின்னணியின் தொடர்பாக சந்தேகிக்கப்பட்டு, விசாரணைக் கைதிகளாக வாடும் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நஷ்டஈடு வழங்கவும் ஆவண செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
8. மதக்கலவர தடுப்புச் சட்டம்
நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்த "மதக்கலவர தடுப்புச் சட்டத்தை' எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாமல் அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு ஜனநாயகத்தின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
9. பரமக்குடி சம்பவம்
பரமக்குடியில் கடந்த செப்.11, 2011 அன்று காவல்துறையில் ஆறு தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்டதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வை, போர்க்களமாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு இலாக்காப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
10. கட்டண உயர்வு
தமிழக அரசு பேருந்துக் கட்டண உயர்வு அதிரடியாக உயர்த்தியது பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. சாமான்ய மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் அன்றாடம் பாதிக்கப்படுவதால், பேருந்து கட்டண உயர்வைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
11. ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை
பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதிகளின் விடுதலை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், 14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
12. வெளிநாட்டு வாழ் தமிழர் நலன்
வளைகுடா நாடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நலனைக் காக்கும் விதத்தில் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
மேலும், வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட ஆவண செய்யப்படும் என சமீபத்தில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியிருப்பதை இப்பொதுக்குழு மனமார வரவேற்கிறது.
13. அரபு வசந்தத்திற்கு வரவேற்பு
மத்திய கிழக்கு - அரபு நாடுகளில் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகம் வேண்டி பொதுமக்கள் நடத்திவரும் கிளர்ச்சிகளுக்கு இப்பொதுக்குழு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
எகிப்தில் அமைதி வழியில் தேர்தலை சந்தித்து, தங்களின் எண்ணங்களை சாதித்துக் கொண்ட எகிப்து மக்களை இப்பொதுக்குழு பாராட்டுகிறது. மேலும் சிரியா, ஜோர்டான், ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் அமைதியும், ஜனநாயகமும் மலர அரபு லீக்கும், முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பும் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தலையிட வாய்ப்பளிக்க வேண்டாம் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
14. போர் வேண்டாம்
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் தேர்தலைக் கணக்கில் கொண்டு, ஈரானின் மீது போர் தொடுக்க முயலும் அமெரிக்காவை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது. சட்டவிரோதமாக அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்காவுக்கு ஈரானை எச்சரிக்க எந்தத் தகுதியும் இல்லை. மேலும், சர்வதேச சமூகம் இந்த பாரபட்சப் போக்கைக் கண்டிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
15. ஹஜ் விசாவை அதிகரிக்க வேண்டும்
இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செய்யும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கை வருடந்தோறும் உயர்ந்து வருகிறது. 20 கோடி இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கேற்ப, சவூதி அரேபியாவிடம் கூடுதல் ஹஜ் விசாக்களைப் பெற மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
16. உளவு அமைப்புகளுக்கு கண்டனம்
இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செய்யும் ஹாஜிகளுடன் உளவாளிகளை இந்திய அரசு அனுப்பி வைப்பதாக பல ஹாஜிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் உண்மையாக இருக்குமெனில், இப்பொதுக்குழு அதை வன்மையாக கண்டிக்கிறது. முஸ்லிம்களின் இறைநம்பிக்கையையும், தேசப்பற்றையும் உளவுபார்ப்பதை ஜீரணிக்க முடியாது. இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
17. பூரண மதுவிலக்கு
மக்களின் முன்னேற்றம், ஆரோக்கியம், குடும்ப வாழ்வு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி, பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
18. தானே புயல் நிவாரணம்
கடந்த மாதம் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களையும், புதுச்சேரியையும் தாக்கிய தானே புயலில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழக அரசின் நிவாரண உதவிகள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்ற குறைகளும், கவலைகளும் உள்ளது. இவ்விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துமாறு தமிழக அரசையும், மத்திய அரசையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக