திங்கள், 30 ஜனவரி, 2012

ஜனவரி 30 - காந்தி படுகொலை பரப்பரப்பான அந்த நிமிடங்கள்...

நன்றி : Thamimun Ansari

இந்தியாவில் முக்கியத் தலைவர்களின் பிறந்த நாட்களும், இறந்த நாட்களும் முக்கியத்துவத்துடன் நினைவுகூரப்படுகின்றன. அரசு விளம்பரங்களுடன் ஆடம்பர நிகழ்வுகளாக அவை வரலாறுகளைக் கூறுகின்றன.

ஆனால் காந்தியின் நினைவுநாள் மட்டும் முக்கியத்துவமின்றி பெயரளவுக்கு நினைவு கூரப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? காந்தியின் நினைவு தினத்தை முதன்மைப்படுத்தினால், காந்தியின் படுகொலைக்கான பின்னணி வருடந்தோறும் நினைவுபடுத்த வேண்டிவரும்.

காந்தியைக் கொன்ற கோட்சே, அவனது சமூகமான சித்பவன் பிராமணர்கள், அவனை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம், அதன் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோரின் சதிகள் வருடந்தோறும் விவாதிக்கப்படுவதை ஆதிக்க சக்திகள் விரும்புவதில்லை.

இன்றுவரை கடந்த 64 வருடங்களாக காந்தியைக் கொன்ற பயங்கரவாதியான கோட்சேயின் சாம்பலை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவவத அமைப்பு.

காந்தியைக் கொன்ற கோட்சே, அப்பழி முஸ்லிம்கள் மீது விழவேண்டும் என்ற சதித்திட்டத்தோடு செயல்பட்டான். முஸ்லிம்களைப் போல பிறப்புறுப்பில் சுன்னத் செய்துகொண்டு, கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டு இப்படுகொலையைச் செய்தான்.

காந்தி கொலையானதும் அவன் பிடிக்கப்பட்டான். அப்போது ஆர்.எஸ்.எஸ். கும்பல் காந்தியைக் கொன்றவர் ஒரு முஸ்லிம் என்று நாடெங்கும் பரப்பியது. முஸ்லிம்களும், அவர்களது சொத்துக்களும் தாக்கப்பட்டன. உடனே பிரதமர் நேரு, அகில இந்திய வானொலி வழியாக, வதந்தியை மறுத்து, காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்பதைத் தெரிவித்ததும் நிலைமை மாறியது. காந்தியின் படுகொலைக்கு அன்றைய உள்துறை அமைச்சரும், தீவிர மதவெறியருமான சர்தார் வல்லபாய் படேலும் மறைமுகக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபோன்ற ஏராளமான உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம், புதிய தலைமுறை இந்தியர்களிடம் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

காந்தி படுகொலைக்கான பின்னணியைத் தோலுரிக்கும் வகையில் ‘1948 ஜனவரி 30’ என்ற நூலை பிரபல திராவிட இயக்கவாதியான திருவாரூர் அர.திருவிடம் எழுதியுள்ளார். இந்நூலை நீங்களும் படித்து, உங்களது இந்து நண்பர்களிடமும் அறிமுகப்படுத்த வேண்டும். பள்ளிக்கூட மாணவர்களிடமும், ஆசிரியர்களிடம் இந்நூல் பரப்பப்படுவது அவசியமாகும்.

நூல்: 1948 ஜனவரி 30

கிடைக்குமிடம்: நக்கீரன் பதிப்பகம்

105, ஜானிஜகான்சாலை,

இராயப்பேட்டை, சென்னை&14

தொடர்புக்கு: 044&43993029

விலை: ரூ.125

1948 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை, குளிரிலும், பனியிலும் மரம், செடிகள்கூட நடுங்கிக் கொண்டிருக்கும் டெல்லிக் குளிரில் வழக்கம்போல் இருளுக்கு முன்பாகவே எழுந்திருந்தார் காந்தி.

விழுந்தது போக மீதி இருந்த சில பற்களை, முனை நசுக்கி நாராக்கப்பட்ட குச்சி ஒன்றினால் துலக்கி, காலைக் கடன்களை முடித்து, பகவத் கீதையின் சில பக்கங்களைப் படித்து கடவுளை வணங்கியபின், தரையில் உட்கார்ந்து எழுதுவதற்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு அடி உயரமுள்ள சாய்வான மேசை ஒன்றின்முன் அமர்ந்து காங்கிரஸ் கட்சிக்கான சில புதிய சட்டதிட்ட விதிகளை எழுதிக் கொண்டிருந்தார்.

காலை மணி 8. தேநீர் அருந்தியவாறு மாலையில் நடத்தப் போகும் கொலையை எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள் சதிகாரர்கள் மூவரும். முதல்நாள் மாலை அவர்கள் பிர்லா மாளிகை சென்றபோது போலீசார் உடல்ரீதியான ஆயுதப் பரிசோதனைகள் எதுவும் செய்யவில்லை என்றாலும், இன்றும் அதேநிலை இருக்கும் என்று நம்பமுடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கும் போலீசார் திட்டத்தை மாற்றி & வருபவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று பரிசோதனை செய்தால் பிடிபட்டுவிடுவோம். எனவே கருப்புப் போர்வை ஒன்றினால் முகத்தையும், கேமராவையும் மூடி படம் எடுக்கும் ஒரு அடி சதுரமும் மூன்று கால்களும் கொண்ட கேமரா ஒன்றை வாங்கி அதற்குள் துப்பாக்கியைப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையலாம். மிக அருகில் இருந்து சுடுவதற்கு வசதியாக படம் எடுக்கப் போகும் சாக்கில் காந்தியின் வழிபாட்டு மேடைக்கு மிக அருகிலேயே கேமராவைப் பொருத்திக் காத்திருந்து, சரியான நேரம் வரும்போது சுட்டுவிடலாம் என்ற நாதுராம் கோட்சேயின் ஆலோசனையை ஆப்தே மறுத்துவிட்டான்.

அதுபோன்ற கேமராக்களை இப்போது யாரும் பொது இடங்களிலும், செய்தி சேகரிக்கப் போகும் இடங்களிலும் பயன்படுத்துவதில்லை. கைக்கு அடக்கமான வெளிநாட்டு கேமராக் களைத் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கும் மேலாக & இதற்குமுன் காந்தியைக் கொலை செய்ய முயற்சித்த போதும், படம் பிடிக்கப் போவதாக சொல்லித்தான் உள்ளே நுழைந்தோம். எனவே படப்பிடிப்பாளர்களிடம் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார் கள் என்ற ஆப்தேயின் கருத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மாற்றுத் திட்டமாக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து செல்லலாம் என்றான் ஆப்தே. முஸ்லிம் பெண்களின் காவலராகிவிட்ட காந்தியைப் பார்க்க, வழிபாட்டுக் கூட்டத்திற்கு ஏராளமான முஸ்லிம் பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அதற்கு வழிபாட்டு மேடையின் அருகிலும் செல்ல முடியும் என்று முடிவு செய்த அவர்கள் பர்தா வாங்குவதற்காக கடைத்தெருவிற்கு வந்தார்கள். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பழைய டில்லியில் பர்தா வாங்குவது ஒன்றும் சிரமமாக இல்லை.

ரயில் நிலையம் அருகிலேயே உள்ள கடை ஒன்றில் பெரிய அளவிலான பர்தா ஒன்றை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார்கள்.

பர்தாவைப் போட்டுப் பார்த்த நாதுராம் கோட்சே இதுவும் வராது என்று அதைக் கழற்றித் தூர எறிந்தான். ஏராளமான சுருக்கங்களும் மடிப்புகளும் இருப்பது மட்டுமல்லாமல், கண்களையும் மறைக்கும் இதைப் போட்டுக் கொண்டு குறி பார்த்து சுட முடியாது. அப்படி ஒருநிலை ஏற்பட்டு காந்தியையும் சுட முடியாமல் பிடிபட்டால் பெண் வேடமணிந்து சென்ற கேவலத்திற்கும் ஆளாக நேரிடும் என்றான் கோட்சே. வேறு என்ன செய்யலாம் என்று மூவரும் ஆளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதும், இன்னொருவர் மறுப்பதுமாக நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

இறுதியாக ஒரு திட்டம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. டெல்லியின் குளிரைத் தாங்குவதற்காக முழங்கால் வரை நீண்ட, மழைக்கோட்டு போன்ற தொளதொளப்பான மேலாடை அப்போது பெரும்பாலானோரால் அணியப்பட்டு வந்தது. துப்பாக்கியை இடுப்பில் செருகி, மேலே அந்தக் கோட்டை அணிந்தால் இடுப்பி லிருக்கும் துப்பாக்கியை எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். நீங்கள் இருவரும் போய் அந்த ஆடையை வாங்கி வாருங்கள் என்றான் தனிமையில் இருக்க விரும்பிய கோட்சே.

சைவ உணவை விரும்பிய ஆப்தே வேறு ஒரு உணவு விடுதிக்கும் போய் மதிய உணவை முடித்துக் கொண்டு தொளதொளப்பான அந்த ஆடையை வாங்கிக்கொண்டு திரும்பிய போது, அவர்கள் தங்கி இருந்த ரயில்வே ரிடையரிங் அறையைக் காலி செய்வதற்கான நேரம் தாண்டி இருந்தது. எனவே அறையைக் காலி செய்துவிட்டு, முதல் வகுப்பு பயணிகள் ஓய்வறைக்கு தற்காலிகமாக இடம் மாறினார்கள் மூவரும். அறையைக் காலி செய்யும் முன் துப்பாக்கியை எடுத்து அதற்குள் ஏழு தோட்டாக்களைத் திணித்த நாதுராம் அதை இடுப்பில் செருகிக்கொண்டு அதை மறைப்பதற்காக நண்பர்கள் புதிதாக வாங்கி வந்த ஆடையை அணிந்து கொண்டான்.

மதிய உணவிற்குப்பின் சற்று ஓய்வெடுத்த காந்தி, பத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சந்தித்திருந்தார். இறுதியாக அவரைச் சந்தித்தவர் வல்லபாய் படேல். நேருவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக அவர் காந்தியிடம் கொடுத்திருந்த கடிதம் இருவருக்கும் இடை யில் இருந்த சிறிய மேசையில் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.

நேரு, படேல் இருவரையுமே இழக்க விரும்பாத காந்தி, சிக்கலான சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒருவருக்கொருவர் இணங்கிப் போனதுபோல் இப்போதும் இருக்க வேண்டும் என்று படேலிடம் வற்புறுத்தினார். ஆழமான அவர்களது விவாதம் நேரம் போவது தெரியாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. மாலைச் சிற்றுண்டிக்கான நேரம் வந்துவிட்டதால், சில ஆரஞ்சுச்சுளைகள், காற்கறி சூப், ஆட்டுப்பால் ஆகியவற்றைக் கொண்டு வந்தார் காந்தியின் உதவியாளர் ஆபா. அவற்றைச் சாப்பிட்டு முடித்ததும், உழைக்காமல் உண்ணும் உணவு திருடுவதற்குச் சமம் என்ற அவரது கொள்கைப்படி ராட்டையில் நூல் நூற்றவாறு படேலிடம் விவாதத்தைத் தொடர்ந்தார் காந்தி.

மாலை 4 மணிக்குப் புறப்பட வேண்டும் என்பது அவர்கள் திட்டம். அதுவரை ரயில் நிலைய ஓய்வு அறையிலேயே பாதுகாப்பாகத் தங்க விரும்பிய அவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்திருந்தார்கள். முதலில் கோட்சே மட்டும் பிர்லா மாளிகைக்குச் செல்ல வேண்டும்.

ஆப்தேயும், கார்கரேயும் அவனைப் பின்தொடர்ந்து தனியே செல்ல வேண்டும். வழிபாட்டுக் கூட்டத்தில் காந்தி அமரும் மேடையில் இருந்து 30 அடி தூரத்திற்குள் சுடுவதற்கு வாய்ப்பான ஒரு இடத்தில் கோட்சே இருப்பான். ஆப்தேயும், கார்கரேயும் அவனது இரண்டு பக்கத்திலும் அறிமுகம் இல்லாதவர்கள் போல் நிற்கவேண்டும். எதுவும் பேசக்கூடாது. கோட்சே சுடும் நேரத்தில் அதை யாராவது பார்த்துவிட்டு தடுக்க முயன்றால் தடுக்க முயல்பவர்களை அவர்கள் இரண்டு பேரும் தடுத்து நிறுத்த வேண்டும், என்பது அவர்களது செயல் திட்டம்.

பிர்லா மாளிகைக்குப் போவதற்குமுன், பிர்லா மந்திருக்குப் போகவேண்டும் என்பது அவர்களின் விருப்பம். துப்பாக்கி வைத்திருக்கும் கோட்சே முதலில் புறப்பட்டான். ஆனால் அவன் பிர்லா மந்திருக்குப் போகவில்லை. அதற்கு அருகே உள்ள சிவாஜியின் சிலையருகே உலாத்திக் கொண்டிருந்தான். பின்னால் புறப்பட்ட ஆப்தேயும், கார்கரேயும் பிர்லா மந்திருக்குச் சென்றார் கள். காலணிகளை வெளியே கழற்றி வைத்துவிட்டு, தங்களது வருகையின் அடையாளமாக கோவில் மணியை சிலமுறை ஆட்டி னார்கள்.

மந்திரில் உள்ள லட்சுமி நாராயணன், காளி ஆகிய கடவுள்களிடம் தங்களது முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

மக்கள் போற்றும் 78 வயதான முதிய தலைவரைக் கொலை செய்வதற்கு அவர்கள் கடவுளின் துணை யை வேண்டினார்கள். யார் எதை வேண்டினாலும் தட்டில் விழும் சில காசுகளுக்காக கடவுளின் அருளுக்கு அடையாளமாக சில பூக்களையும், யமுனை நதியின் (டெல்லியில் ஓடுவதால் சுலபமாகக் கிடைக்கும்) புனித நீரில் சில துளிகளையும் கொடுக்கும் பிர்லா மந்திரின் அர்ச்சகர் அவர்களுக்கும் பிரசாதங்களைக் கொடுத் தார்.

வணங்கிய கடவுள்கள் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியே வந்து, எதிரே காத்திருந்த கோட்சேயிடம் நேரமாகி விட்டது என்பதற்கு அடையாளமாக தனது கைக்கெடிகாரத்தைப் பார்த்தான். சின்ன முள்ளிலும் பெரிய முள் 6லும் இருந்தது. ஆப்தேயையும் கார்கரேயையும் பார்த்து, இரண்டு கைகளையும் கூப்பி வணங்கிவிட்டு எதிரே வந்த டோங்கா ஒன்றைப் பிடித்து பிர்லா மாளிகைக்குச் சென்றான் கோட்சே. சில நிமிடங்களுக்குப்பின் இன்னொரு டோங்காவைப் பிடித்து அவனைப்பின் தொடர்ந்தார்கள் ஆப்தேயும் கார்கரேயும்.

நேரம் தவறாமை காந்தியின் உடன்பிறந்த குணம். எந்தச் சூழ்நிலையிலும் சரியாக 5 மணிக்கு வழிபாட்டுக் கூட்டத் தைத் தொடங்கி விடுவார். இப்போது நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

காந்தியிடம் பேசிக் கொண்டிருந்தவர் இந்திய அரசின் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல், அவர்களின் பேச்சில் குறுக்கிடுவது மரியாதைக் குறைவாக இருக்கும். நேரத்தை நினைவுபடுத்தா விட்டால் காந்தியின் கோபத்திற்கு ஆளாகநேரிடும் என்ற அச்சத்தோடு காந்தியின் பார்வைபடும் இடத்தில் நின்று அவரது கடிகாரத்தைச் சுட்டிக்காட்டினார் மனு.

குறிப்பறிந்த காந்தி அவரது இங்கர்சால் கடிகாரத்தை இடுப்பிலிருந்து எடுத்துப் பார்த்தபோது அது 5 மணி 10 நிமிடங்கள் எனக்காட்டியது. கடவுளைக் காக்க வைப்பது குற்றமாகும். வழிபாட்டுக் கூட்டத்திற்கு நேரமாகி விட்டது, நான் புறப்படுகிறேன் என்று படேலுக்கு விடை கொடுத்துவிட்டு புறப்பட்டார் காந்தி.

உண்ணாவிரதம் இருந்தே உடல்ப லத்தை இழந்திருந்த அவர் மனு, ஆபா ஆகிய இருவரின் தோள்களைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்வது வழக்கமாகிவிட்டது. இன்றும் அவர்களது தோள்களைப் பிடித்தவாறு வேகமாக நடக்கத் தொடங்கினார்.

அதற்கு முன்னதாகவே காந்தியின் எச்சில் துப்புவதற்கான குடுவை, உரையாற் றுவதற்கு எழுதி வைத்த விவரங்கள், குறிப்புகள் எடுப்பதற்கான சிறு புத்தகம் பேனா ஆகியவைகளை ஒரு பையில் வைத்து எடுத்துக் கொண்டார் மனு.

காந்தி வழிபாட்டுக் கூட்டத்திற்கு வரும்போது வழக்கமாக அவருடன் வருபவர்களில் இருவர் இன்று வரவில்லை. ஒருவர் டாக்டர் சுகீலா நய்யார், பாகிஸ்தான் சென்றிருந்தார். மற்றொருவர் டெல்லியின் காவல்துறைத் துணைத்தலைவரும், காந்தியின் பாதுகாப்புக்கான பொறுப்பினை ஏற்றிருந்தவருமான டி.டபிள்யூ.மெஹ்ரா.

கடந்த சில நாட்களாக அவரைத் தாக்கி இருந்த புளூ காய்ச்சல் அவரை எழுந்து நடமாட முடியாத அளவிற்குச் செய்துவிட்டது. எனவே ஏ.என்.பாட்டியா என்ற அதிகாரியிடம் பாதுகாப்புப் பொறுப்பினை ஒப்படைத்திருந்தார். அவரும் மறுநாள் டெல்லியில் நடக்கவிருந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்குச் சென்றுவிட்டார். இரண்டு பக்கமும் போகன்வில்லா மலர்கள் பூத்துக் குலுங்கும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட நடைபாதையில் வழிபாட்டு மேடைக்குச் செல்வது காந்தியின் வழக்கம்.

இன்று நேரமாகி விட்டது. எனவே வழக்கமான பாதையைத் தவிர்த்து இடையே இருந்த புல்வெளி வழியாக நடக்க ஆரம்பித்தார் அவர்.

கொலையாளிகள் மூவரும் மக்களோடு மக்களாக வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்திருந் தனர். உள்ளே நுழையும்போது நாதுராம் கோட்சேயிடம் உடல்ரீதியான சோதனை எதுவும் செய்யப்படவில்லை. அதுவே வெற்றிக்கான நல்ல சகுனமாக இருந்தது அவர்களுக்கு. வழிபாட்டு மேடைக்கு அருகே செல்லாமல் கூட்டத்தின் வெளிவட்டத்தில் மேடையின் வலதுபுறமாக நின்றிருந்தான் கோட்சே. மக்களின் பார்வை காந்தியை நோக்கி இருக்கும்போது பின்னால் நின்றால்தான் எந்த இடையூறும் இல்லாமல் குறிபார்த்துச் சுட முடியும் என்பது அவனது கணக்கு. அவனுக்கு இருபக்கமும் ஆப்தேயும், கார்கரேயும் நின்று கொண்டிருந்தார்கள். மேடைக்கும் அவர்களுக்குமான தூரம் 30 அடிக்கும் குறைவாகவே இருக்கும் என்பதைக் கணக்கிட்ட ஆப்தே, சரியான இடத்தைத்தான் கோட்சே தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கூட்டத்தில் அமர்ந்த பிறகு காந்தியைச் சுடவேண்டும் என்று தீர்மானித்திருந்த கோட்சே, கடிகாரத்தைப் பார்த்தான். அதன் முட்கள் 5 மணியைத் தாண்டி இருந்தன.

இதுவரை லப்&டப் என்று துடித்துக்கொண் டிருந்த அவனது இதயம் இப்போது, என்ன ஆயிற்று காந்திக்கு? ஏன் தாமதப்படுத்துகிறார் என்று துடிக்க ஆரம்பித்தது.

நேரம் தவறும் போதெல்லாம் மனு மீதும், ஆபா மீதும் கோபப்படும் காந்தி, ‘நீங்கள் தான் எனது கடிகாரங்கள். நான் தனியே இன்னொரு கடிகாரத்தைப் பார்க்க வேண்டுமா?’ என்று கோபமான குரலில் கூறியவாறு மக்களைப் பார்த்துக் கையசைத்தவாறு வந்து கொண்டிருந்தார். வழக்கமான பாதையில் வராமல் வேறு திசையில் இருந்துவரும் காந்திக்கு வழிவிடும் விதத்தில் ‘பாபுஜீ... பாபுஜீ...’ என்ற ஆரவார வரவேற்புக் குரல்களோடு மக்களே அவருக்கு பாதை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மின்னல் வேகத்தில் நிலைமைகளைப் புரிந்துகொண்டான் கோட்சே, அந்தப் பாதை வழியாகத்தான் காந்தி வருவார், கூட்டத்தின் பின்னால் இருக்கும் தன்னைத் தாண்டித்தான் அவர் முன்னே போக வேண்டும். வழிபாட்டு மேடையில் அமர்ந்த பிறகு 30 அடி தூரத்தில் இருந்து சுடுவதைவிட எதிரே வரும்போது மூன்றடி தூரத்திலிருந்து சுடுவது சுலபம் என்று அவனது மூளை கணக்குப் போட்டது. கடவுளே பார்த்துக் கொடுத்த நல்ல வாய்ப்பு இது. இரண்டு அடிகள் முன்னே வந்தால் போதும். காந்தியை நேருக்கு நேர் சந்திக்கலாம் என்று தீர்மானித்தான்.

அவனது இரண்டு கைகளும் சட்டைப்பைக்குள் இருந்தன. இடது கையை வெளியே எடுத்தான். அதில் ஒன்றுமில்லை. வலதுகை, சட்டைப்பைக் குள் தானியங்கி துப்பாக்கியை லாவக மாகப் பிடித்திருந்தது.

காந்தி மூன்றடி தூரத்தில் வந்துவிட்டார். ‘நமஸ்தே காந்திஜி’ என்று கூறிய கோட்சே, இடுப்புவரை குனிந்து வணங்கினான். அவன் காந்தியின் கால்களில் விழுந்து வணங்க முயற்சிக்கிறான் என்று கருதிய மனு, ‘பாபுவின் வழிபாட்டுக்கு நேரமாகி விட்டது’ என்று கூறி அவனைத் தடுப்பதற்காகக் கையை நீட்டினார்.

கோட்சேயின் இடது கை முரட்டுத் தனமாக அவரைத் தள்ளியது. அவன் தள்ளிட்டதால் தடுமாறிய மனுவின் கையிலிருந்த காந்தியின் எச்சிற் துப்பும் குடுவை அடங்கிய பை கீழே விழுந்து சிதறியது. அதை எடுக்க கீழே குனிந்தார் மனு.

வலது கையிலிருந்த துப்பாக்கியின் விசையை மூன்று முறை அழுத்தினான் கோட்சே.

பாயின்ட் ப்ளாங் ரேஞ்சில் சுடப்பட்ட அந்த மூன்று குண்டுகளில் ஒன்று காந்தியின் வயிறு வழியாக வெளியேறியது. இன்னொரு குண்டு முதுகைத் துளைத்து வெளியே வந்தது. மற்றொரு குண்டு வெளியில் வர மனமில்லாமல் அவரது நுரையீரலில் பதிந்தது.

வேடனின் அம்புபட்டதுபோல் துடித்து வீழ்ந்த அந்த சமாதானப் புறாவின் வாய்¢‘ஹேராம்! ஓ கடவுளே!’ என்று முணுமுணுத்தது.

அவரது இடுப்பிலிருந்து நழுவிக் கீழே விழுந்த, அவருக்கு விருப்பமான இங்கர்சால் கடிகாரம் அப்போது காட்டிய நேரம் 5 மணி 17 நிமிடங்கள்.

- ‘1948 சனவரி 30’ நூலிலிருந்து...

கருத்துகள் இல்லை: