வெள்ளி, 16 செப்டம்பர், 2011

சிறுபான்மையினர் நல நிதி பெற சிறப்புக் குழு அமைப்பு- மமக தலைவருக்கு அமைச்சர் பதில்

சிறுபான்மையினர் நல நிதி பெற சிறப்புக் குழு அமைப்பு- மமக தலைவருக்கு அமைச்சர் பதில்


"சிறுபான்மையினர் நலனுக்கான மத்திய அரசின் நிதியை பெற சிறப்புக் குழு அமைக்கப்படும்" என்று அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபையில் தெரிவித்தார்.


நிதி ஒதுக்க மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் நிகழ்த்திய உரையின் போது இந்த தகவல் வெளியானது.


இது தொடர்பான விவரம் வருமாறு:

ஜவாஹிருல்லாஹ் : சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்காக மத்திய அரசு ஐந்தாண்டு திட்டத்தின் பெயரால் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மதரசாக்களில் தரமான கல்வியைத் தரும் திட்டம், சிறுபான்மையினரின் கல்விக் கூடங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டம் ஆகியவற்றுக்கான நிதியைத்தான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இவற்றைப் பெறுவதற்காக தமிழகத்திலிருந்து சிறுபான்மையினர் நடத்தும் 12 நிறுவனங்கள் முறைப்படி விண்ணப்பித்திருந்தன. இவற்றை முறையாக மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டியது கடமை.


ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய பரிந்துரை ஏதும் செய்யாத காரணத்தால் மத்திய அரசின் இந்த நிதி தமிழகத்திற்குக் கிடைக்காமலேயே போய்விட்டது. எனவே முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு பரிந்துரை செய்வதற்கான குழுவை அமைத்து மத்திய அரசிடமிருந்து அந்த நிதியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.


அமைச்சர் சி.வி.சண்முகம் :
திமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய குழு ஒன்று அமைத்தார்கள். ஆனால் அந்த குழு செயல்படவேயில்லை. தற்போது புதிய குழுவை அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


ஜவாஹிருல்லா :
நன்றி! தனித் தேர்வாளர்கள் 14 வயதுக்கு மேல் 8ம் வகுப்பு தேர்வை எழுத திமுக ஆட்சிக் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமான தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும். தேர்வு முடிந்ததும் தேர்வு வினாத் தாட்களுக்கான சரியான விடையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். விடைத்தாள்களை மாணவர்கள் கட்டணம் கட்டிக் கேட்டால் வழங்குவதற்கு வகை செய்ய வேண்டும்.


உறுப்பினர்களுக்கு சட்டமன்ற அறிவிப்புகள் மின்னஞ்சல் மூலம் வருவது மகிழ்ச்சிக்குரியது. அதே போன்று உறுப்பினர்களின் உரைத் தொகுப்பையும் மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பி வைத்தால் அதிலேயே நாங்கள் திருத்தி அனுப்பிவிட முடியும். இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் பேசினார்.

கருத்துகள் இல்லை: