செவ்வாய், 6 செப்டம்பர், 2011

2.5 லட்சம் பொறியியல் மாணவர்களை வேலைக்கு எடுக்கும் ஐடி நிறுவனங்கள்- ஆளெடுப்பு தொடங்கியது

சென்னை: முன்னணித் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களின் கேம்பஸ் இன்டர்வியூக்கள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு 2.5 லட்சம் பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு எடுக்கப்பட்டனர். இந்த நிலையில் கூடுதலாக 50 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு வேலை கிடைக்கவுள்ளது.

வழக்கமாக கடைசி செமஸ்டரின்போதுதான் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தமுறை 7வது செமஸ்டரிலேயே கேம்பஸ் இன்டர்வியூவை ஏற்பாடு செய்துள்ளன ஐடி நிறுவனங்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூக்களை தொடங்கி, பலருக்கு ஆபர் லெட்டர்களையும் கூட கொடுக்க ஆரம்பித்து விட்டனவாம்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 702 மாணவர்களுக்கு டிசிஎஸ்ஸில் வேலை கிடைத்து நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல வேலம்மாள் குழும பொறியியல் மாணவர்கள் 515 பேருக்கும் வேலை கிடைத்துள்ளது. சாய்ராம் குழும கல்லூரி மாணவர்கள் 500 பேர், ஆர்எம்கே கல்லூரி மாணவர்கள் 645 பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.

அதேபோல காக்னிஸன்ட் நிறுவனம், சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 807 பேரைத் தேர்வு செய்துள்ளது. அதேபோல கோவை பி.எஸ்ஜி கல்லூரி மாணவர்கள் 703 பேரையும் இது தேர்வு செய்துள்ளது.

சேலம் சோனா கல்லூரியைச் சேர்ந்த 417 பேருக்கு அசன்ஜரில் வேலை கிடைத்துள்ளது.

அமிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 700 பேரை விப்ரோ வேலைக்கு எடுத்துள்ளது.

வழக்கமாக அதிக அளவிலான இளம் பொறியயாளர்கள் ஐடி வேலைகளில் சேருவது ஆந்திராவில்தான். அங்கு ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சேருகின்றனர். அடுத்த இடம் தமிழகத்துக்கு. தமிழகத்திலிருந்து ஐடி வேலையில் சேருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.8 லட்சாகும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை சேருகின்றனர்.

அதிக அளவில் ஆட்கள் எடுக்கப்படும்போதிலும் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட சம்பள விகிதமே இந்த ஆண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். ஆண்டுக்கு ரூ. 3 முதல் 3.25 லட்சம் குறைந்த சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.