2011-12 ஆம் ஆண்டிற்கான சிறைத்துறை மானியக் கோரிக்கையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சட்டபேரவையில் பேசியது:
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "The degree of civilization in a society can be judged by entering its prisons" என்று மேலைநாட்டு அறிஞர் சிறைச்சாலைகளைப் பற்றி குறிப்பிட்டார். இந்த அடிப்படையில் 'சிறைச்சாலைகள் மேலாண்மை' என்பது ஒரு ஜனநாயக நாட்டில் மிக முக்கிய பங்காக வகிக்கின்றன. இந்த மேலாண்மையை சிறப்பான முறையில் நம்முடைய முதலமைச்சர், தலைமையிலான இந்த ஆட்சியில் சிறப்பாகச் செய்து வருவதை சிறைத் துறை மானியக கோரிக்கையின் கொள்கை விளக்க குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.
தனது கைதிகளைச் கருணையுடனும், அன்புடனும் நடத்தாத ஒரு சமூகத்தை நாகரீக சமூகம் அங்கிகரிக்க இயலாது சிறைவாசிகளுக்குரிய அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் வழங்காத வரையில் ஒரு சமூகம் தன்னை நாகரீக சமூகமாகக் கருத இயலாது. ஒரு சிறைவாசி, அவர் விசாரணைக் கைதியாக இருந்தாலும் சரி, தண்டனைக் கைதியாக இருந்தாலும் சரி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மனிதர் என்ற தகுதியை இழந்துவிடுகிறார் என்று கருதிவிடக் கூடாது. சிறையில் இருக்கும் ஒருவர் அரசியல் சாசன சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிப்பதற்குத் தகுதியுடையவராகிறார்.
சிறைச்சாலை என்பது ஒரு சீர்திருத்த கூடம், அந்தக் சீர்திருத்தப் பள்ளியில் பல ஆண்டுகள் கழித்தவர்கள் வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழிக்க வேண்டுமென்று கருதுவது நியாயம் இல்லை எனவேதான், தமிழகத்தில் மட்டுமல்ல, மராட்டியம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாநில அரசுகள் ஆயள் தண்டனைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலைச் செய்கின்றன. தமிழகத்திலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் உட்பட பெருந்தலைவர்களின் பிறந்தாளின்போது ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு அரசியல் சாசனச் சட்டத்தின் 161ஆம் பிரிவின் அடிப்படையில் தமிழக அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் முந்தைய திராவிட முன்னேற்ற கழக அரசு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு 1405 ஆயுள் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளித்து விடுதலைச் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஒர் அறிவுரையை அதாவது மாநில அரசு கைதிகளை விடுதலைச் செய்யும் போது எந்தவிதமான பாரபட்சமும் காட்டக்கூடாது ஒரு கைதிக்கு ஒரு விதிமுறை வகுக்கப்பட்டால் அதுதான் எல்லா கைதிகளுக்கு பொருந்தும் என்று ஹரியானா அரசு தொடுத்த ஒரு வழக்கிலே உச்ச நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு ஒரு தீர்பை வழங்கியுள்ளது.
ஆனால் அந்தத் தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு மாறாக, மதுரையிலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சிறந்த கவுன்சிலராக விளங்கிய தோழி லீலாவதியை படுகொலை செய்தார்கள். அந்தப் படுகொலை வெறும் ஆயுதத்தால் செய்யப்பட்டாலும் கூட அதுவும் ஒரு பயங்கரவாத செயல்தான், அந்தப் படுகொலையை செய்த கைதிகளை விடுதலைச் செய்ய வேண்டுமென்பதற்காக, அதுவரை 10 ஆண்டுகள் சிறைத்துறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டார்கள் ஆனால், லீலாவதி அம்மையாரைக் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்பதற்காக 10 ஆண்டுகள் 7 ஆண்டுகளாகக் குறைத்து அவர்களையெல்லாம் விடுதலை செய்வதற்கு வழி வகுத்த தி.மு.க. அரசு, சிறுபான்மையின மக்களினுடைய பாதுகாவலன் நாங்கள்தான் என்று சொல்லக்கூடிய கருணாநிதி அரசு, இதேபோன்ற குற்றச்சாட்டுகளிலே கைதாகி 10 ஆண்டுகளல்ல 13 ஆண்டுகள் சிறையிலிருந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என்று பாரபட்சத்தை காட்டியது. இதற்கு எடுத்துக்காட்டாக நான் சொல்ல வேண்டுமென்றால், 2007 ஆண்டில் கூட 10 ஆண்டுகள் சிறையிலே இருந்தவர்களை தி.மு.க. அரசு விடுதலை செய்தது.
ஆனால் திருச்சி சிறையிலிருந்த ஜாகீர் உசேன், அபுதாஹீர் என்ற 2 பேர், 13 ஆண்டுகள் அப்போதே சிறைவாசம் அனுபவித்திருந்தாலுங்கூட, அவர்களை விடுதலை செய்ய மாட்டேன் என்ற பாரபட்சப் போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்தது என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது ஒரு மனிதனை பல்வேறு வகையில் பக்குவப்படுத்திவிடும். இவர்களில் பலர் பல்வேறு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவைச் சிறையில் இருக்கும் அபுதாகீர் என்று கைதியின் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் செய்து மோசமான நிலையில் இருக்கின்றார். 55 வயதைக் கடந்த பலர் இன்னும் பல நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் விஷயத்திலே வரலாற்று சிறப்புமிகுந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நான் இந்த நேரத்திலே மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றினை வைக்க விரும்புகிறேன்.
பேறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் தமிழக மக்களுக்கு பயனளிக்ககூடிய பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கான விழாக்களை இந்த அரசாங்கம் நடத்தப் போகின்றது. இந்த தருணத்திலோ அல்லது காந்தியடிகள் பிறந்த நாளிலோ அல்லது பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளிலோ 10 ஆண்டு சிறை தண்டனை முடித்திருக்கக்கூடிய அனைத்து கைதிகளையும் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்காமல் அவர்கள் எந்தச் சார்தவர்களாக இருந்தாலும் சரி, எந்தக் குற்றச்சாட்டுக்காக உள்ளேயிருந்தாலும் சரி, அவர்களை விடுதலைச் செய்தவற்கு இந்த அரசு ஆவன செய்ய வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பரோவில் செல்லும் சிறைவாசி தவிர்க்க இயலாத காரணங்களினால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல் ஒரிரு நாட்கள் தாமதம் ஏற்படுவிட்டடால் கூட பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவது கிடையாது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களையும் பொது மன்னிப்பில் விடுவிக்க இந்த அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்றத்திலே மேல் முறையீடு வழக்குகள் ஆண்டுக் கணக்கிலே நீடித்துக்கொண்டுப் போகக்கூடிய நிலையிலே, நீதிமன்றத்தில் விடுதலையாகக்கூடிய ஒருவருக்கு பரோவில் செல்ல அனுமதி கிடையாது. மேல் முறையீடு செய்திருக்கக்கூடிய ஒருவருக்கு கிடையாது என்பது நியாயமற்றதாகும். எனவே, அத்தகையாவர்களுக்கு பரோல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.(மணயடிக்கப் பெற்றது) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்னும் இரண்டே நிமிடத்தில் உரையை முடித்துவிடுகிறேன்.
விசாரணை சிறைவாசிகளின், உறவினர்கள் இறந்துவிடும்போது அவர்களது இறுதிச் சடங்கில் பங்கொள்வதற்காக, சிறைவாசிகள் நீதிமன்றத்தை நாடி பரோல் பெறும் நிலையுள்ளது. இதற்குச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, பரோல் வழங்கக்கூடிய அதிகாரத்தை சிறை கண்காணிப்பாளருக்கு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
புழல் சிறைச்சாலையில் மூன்று அலகுகள்தான் இருக்கின்றன. அங்குள்ள கைதிகள், அதாவது அவர்களுக்கு உடல்நலம் குன்றிவிட்டால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு புதுப்பேட்டையிலிருந்து ஆயுத காவல் படை வர வேண்டிய நிலை இருக்கின்றது.
இதற்குமாறாக, ஆயுத காவல் படையினுடைய ஒரு பிரிவை புழல் சிறையில் அமைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
பள்ளிக்கூட மாணவர்களுக்கெல்லாம் கால்சட்டைப் பதிலாக, முழுகால் சட்டை வழங்கிய மனிதாபிமானம் மிகுந்த இந்த அரசு தண்டனை கைதிகளுக்கும் முழு கால்சட்டை வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
1996ஆம் ஆண்டு நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிறையில் இருந்தபோது, அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்பதற்காக வேண்டி மத்திய சிறைச்சாலை அலுவலர் ராஜேந்திரன் உட்பட பல அதிகாரிகளை தி.மு.க. அரசு பழி வாங்கியது. அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்திலே மின்தூக்கி (Lift) வசதியை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, விடைபெறுகிறேன்.