ஞாயிறு, 4 அக்டோபர், 2009

இஸ்ரேலின் அணு ஆயுதம் - அமைதிகாக்கும் அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேலுடனான 40 வருட ஒப்பந்தத்திற்கு அடிபணிந்துள்ளார். இந்த ஒப்பந்தப்படி இஸ்ரேல் எந்த ஒரு சர்வதேச சோதனைக்கு ஒத்துக்கொள்ளாமல் அணு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இந்த செய்தியை அமெரிக்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

"3 பெயர் கூற விரும்பாத செய்தி ஆதாரங்கள் கூறியதாவது, இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு விடம் அமெரிக்க அதிபர் ஒபாமா 'எதுவும் கேக்காதே, எதுவும் சொல்லாதே' (don't ask, don't tell policy) கொள்கையை கடைபிடிப்பதாகக் கூறியுள்ளார்" என்று வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகை சனி அன்று செய்தி வெளிட்டுள்ளது.

இந்த சம்பவம், நேதன்யாகு மற்றும் ஒபாமா வெள்ளை மாளிகையில் சந்திக்கும் போது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேலிய வல்லுநர் மற்றும் எழுத்தாளரான அவன் கொஹெந் இது பற்றி கூறுகையில், "அந்த ஒப்பந்தப்படி அமெரிக்கா, இஸ்ரேல் தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை வெளி உலகத்திற்கு காட்டாத வரை அதனை மறைமுகமாக ஆதரிக்கும்" என்று தெரிவித்தார்.

1969 ல் முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்ஸ்சன் மற்றும் அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் உடன் நடந்ததாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான ஆவணங்கள் இல்லை.

கடந்த வாரம் இஸ்ரேலின் Channel 2 என்ற தொலைகாட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இஸ்ரேலிய பிரதமர், "ஒபாமாவின் அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் என்ற கூற்று இஸ்ரேலிற்கு பொருந்தாது" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "ஒபாமா கூறியதிலிருந்தே அது ஈரான் மற்றும் வட கொரியா குறித்தது என்று நமக்கு புரியும்" என்று கூறினார்.

"ஒபாமா உடனான என்னுடைய முதல் சந்திப்பிலேயே அவரிடமிருந்து அமெரிக்க இஸ்ரேல் இடையே பல வருடங்களாக இருக்கும் உறவு குறித்து உறுதி செய்து கொண்டேன்", என்று அவர் மேலும் கூறினார்.

எந்த விதமான முறைப்படியான பதிவுகள் இல்லாவிட்டாலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசுகள் இதனை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாவிட்டாலும் சில ஆவணங்கள் இது குறித்து சிறு குறிப்புகள் தருகின்றன.

நிக்ஸ்சன் நூலகம், இந்த விவகாரத்தை சிறிது உறுதி செய்யும் வகையில் உள்ள ஜூலை 19, 1969 வெளியான ஹென்றி கிஸ்ஸின்ஜெரின் செயற்குறிப்பு ஒன்றை, 2007 ல் வகை படுத்தி உள்ளது.

அந்த செயற்குறிப்பு "இஸ்ரேல் தற்பொழுது வைத்திருப்பதை தடுக்க நாம் நினைத்தாலும், நமக்கு உண்மையில் என்ன வேண்டுமென்றால், இஸ்ரேல் வைத்திருப்பது உலகளாவிய உண்மையாக மாறிவிடக் கூடாது என்பதே" என்று கூறுகின்றது.

நன்றி
அல்-ஜசீரா

காமன்மேனின் திரைப்படத் தீவிரவாதம்


உன்னைப்போல் ஒருவன் என்ற தமிழ் திரைப்படத்தில் முஸ்லிம்களைக் குறித்து நச்சுக் கருத்து விதைக்கப்பட்டிருக்கிறது.தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், தீவிரவாதிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால், யாரை யார் தீவிரவாதி என்று சொல்வது என்பதற்கு விவஸ்தை வேண்டாமா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பொதுமனிதன் (காமன்மேன்),சட்டத்தை கையிலெடுக்கும் செயலை நியாயப்படுத்தும் இப்படத்தில் தீவிரவாதிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்-அவர்களால் பாதிக்கப்படும் அனைவரும் இந்து காமன்மேன் என்ற நச்சுக்கருத்துடன் வெளியாகியுள்ளது. இப்படத்தை அநியாயத்துக்கு விமர்சனம் எழுதி, தேவையற்ற பில்டப் கொடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக்கி விட்டார்கள்!

கமல் விடுவிக்கக்கோரும் நால்வரும் தீவிரவாதிகளாம்! அவர்களில் மூவர் காஃபீர்களைக் கொல்வதற்காக நேர்ந்து விடப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள். ஒரேயொருவர் அப்பாவி தீவிரவாதி! ஆம்! தீவிரவாதிகளென்று தெரியாமல் தெரியாத்தனமாக RDX சப்ளை செய்ததால் அப்பாவி தீவிரவாதி!

சினிமாக்களில் தீவிரவாதிகளைத் தட்டிக்கேட்பவர்கள் எல்லோருமே ஓர் அம்பியாகவோ அல்லது முஸ்லிமல்லாத காமன் மேன்களாக இருப்பது நெருடுகிறது. ஒருசமயம் முஸ்லிம்களில் காமன் மேன் (COMMON MAN) இருக்கக்கூடாது என்று எங்காவது சட்டம் உள்ளதோ என்னவோ?!


பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தைரியமாகக் கண்டித்தும், இந்திய தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட மருதநாயகம் என்ற யூசுப்கான் குறித்து படமெடுக்கப்போவதாக பிலிம்காட்டிய கமல், இடையில் நாத்திகராகி, ரங்கராஜ நம்பியாக தசாதவதாரமெடுத்து ஐம்பதாண்டுகள் திரையுலகில் கொட்டைபோட்டு சேரவேண்டிய இடத்திற்கு சரியாகச் வந்துள்ளார் எனுமளவுக்கு "உன்னைப்போல் ஒருவனில் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான காவிவசனங்களை மானாவரியாக தூவியுள்ளார்.

தீவிரவாதிகளென்றால் பாகிஸ்தானிலிருந்து வந்த ஏதாவது ஒரு 'கான்' ஆக இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமா மரபைமீறி, இதில் சொல்லப்படும் தீவிரவாதிகளெல்லாம் இந்திய முஸ்லிம்கள். படம் முக்கால்வாசி எடுத்த பிறகே காமன்மேனின் கோபத்திற்கான காரணம் சொல்லப் படவில்லை என்று உறுத்தியதோ என்னவோ பெஸ்ட் பேக்கரி படுகொலை, கற்பினிப் பெண்ணைக் கருவறுத்தது என குஜராத் பயங்கரவாதத்தையும் சேர்த்து தன்னை நடுநிலையாளராக நடிக்க முயற்சித்துள்ளார் என்றாலும் பரவலான நச்சு வசனங்களால் சாயம் வெளுத்துவிட்டது!

காமன்மேனுடன் போனில் கெஞ்சும் போலீஸ் கமிஷனர், நம்நாட்டிலுள்ள எத்தனையோ தீவிரவாதிகளை எப்படி தண்டிப்பாய்? என்று கேட்கும்போது சீட்டுக் குலுக்கிப்போட்டதில் தற்போதைக்கு இந்த நால்வரின் பெயர்களே வந்தன என்று சொல்கிறார். அத்வானி, நரேந்திரமோடி, பால்தாக்கரே, பிரவீன் தொக்காடியா முதல் பிரஞ்யாசிங் வரை நீளும் பட்டியலில் சீட்டுக்குலுக்கிப் போடாமலேயே தேர்வு செய்திருக்கலாமே என்றும் கேட்கத் தோன்றுகிறது.

குஜராத்தில் கருவருத்துக் கொல்லப்பபட்ட நான்கு மாதக் கற்பினியைக் காப்பதற்கு நாட்டில் எத்தனையோ கிருஷ்ணன்கள் இருந்தும் ஒரேயொரு கிருஷ்ணன்கூட முன்வரவில்லையே என்று நேர்மையாக ஆதங்கப்படும் காமன்மேன் கமல், தீவிரவாதிகளை முஸ்லிம்களாகவே காட்டியிருப்பது யாருடைய நிர்ப்பந்தமோ தெரியவில்லை!

சூத்திரன் கொலை செய்தால் கொன்றவனுக்கு மரணதண்டனை! பார்ப்பனன் கொலைசெய்தால் குடுமிக்கு மட்டுமே மரணதண்டனை என்று ஹேராமில் காட்டிய கமலுக்கு கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

"..................உயிருக்கு உயிர்,கண்ணுக்குக் கண்,மூக்குக்கு மூக்கு,காதுக்கு காது, பல்லுக்குப் பல்; காயங்களுக்குச் (சமமான) காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்............................................."(குர்ஆன் 005:045)

thanks to :

சனி, 3 அக்டோபர், 2009

புறக்கணிக்கப்பட்டார் வருண் காந்தி

தேர்தல் பிரச்சாரகர்கள் பட்டியலில் புறக்கணிக்கப்பட்டார் வருண் காந்தி. மகாராஸ்டிரம், ஹரியானா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களுக்காக பா.ஜ.க வின் சார்பில் பிரச்சாரம் செய்வதற்கு பிரச்சாரகர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் சென்ற தேர்தலில் முஸ்லீம்கள் குறித்து வன்முறையை தூண்டும் விதமாக வெறுப்புக் கருத்துக்களை வெளியிட்ட வருண் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மகாராஸ்டிரா மற்றும் ஹரியானாவில் நடக்க இருக்கும் தேர்தல் பிரசாரத்தில் பங்கெடுத்துக்கொள்வார் என்று பா.ஜ.க வெளியிட்டுள்ள பட்டியல் தெரிவிக்கின்றது.

வருண் காந்தியை புறம் தள்ளியது குறித்து பா.ஜ.க வின் துணை தலைவர் மற்றும் கட்சியின் தேர்தல் பிரச்சார குழுவின் தலைவரான முக்தர் அப்பாஸ் நக்வியிடம் கேட்டதற்கு, "அந்த பட்டியல் கட்சியின் மாநில உறுப்பினர்களின் கருத்துகளை ஒத்தது என்று கூறினார். இதனால் கட்சிக்கு வேறு நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் இல்லை என்று அர்த்தமில்லை, ஆனால் பட்டியலில் இல்லாதவர் யாரும் பிரசாரத்தில் ஈடுபட முடியாது" என்று தெரிவித்தார்.

நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்

பெர்லின் மாணவருக்கு பள்ளிக்கூடத்தில் தொழுகை நடத்த அனுமதி

பெர்லின்:
பெர்லின் மாணவர் ஒருவருக்கு பள்ளிக்கூடத்தில் தொழுகை நடத்த அந்நாட்டு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

16 வயது மாணவர் ஒருவர் தொடுத்த புகாரை விசாரித்த பெர்லின் நிர்வாக நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த வருடம் இந்த நீதி மன்றம் ஒரு மாணவருக்கு பள்ளிக்கூடத்தின் இடைவேளைகளில் தொழுகை நடத்த அனுமதியளித்தது.

கல்வி அதிகாரிகள் நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு கல்வி நிறுவனங்களின் மத சார்பின்மையை பாதிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நீதிபதி இது பற்றி கூறுகையில், "தொழுகை பள்ளிக்கூடத்தின் செயல்பாடுகளில் குறுக்கிடாது என்றும் இது ஒருவரின் மத சுதந்திரத்தின் உரிமை" என்றும் கூறினார்.

நன்றி
ABNA

உலகத்திற்கு சவால் - சீனாவின் 60 வது சுதந்திர தினம்:

உலகமும் இந்தியாவும் உற்றுப்பார்க்கையில் தனது 60 ஆவது தேசிய தினமன்று சீனா தனது இராணுவ பலத்தை பீஜிங்கில் வெளிக்காட்டியது. இந்த இராணுவ அணிவகுப்பில் சீனாவின் அதி நவீன டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் அனுவகுப்பு செய்தன.

இந்த இராணுவ அணிவகுப்பு இதுவரை அந்நாடு கண்டிராத பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே நடத்தப்பட்டது.

இந்த இராணுவ அணிவகுப்பின் போது உலகம் இதுவரை கண்டிராத சீனாவின் DF-31 என்ற கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று தாக்கும் ஏவுகணையை சீனா உலகிற்கு காட்டியது. இந்த ஏவுகணை 13,000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்க வல்லது. இது இந்தியாவின் எந்த பகுதியை மட்டுமல்ல அமெரிக்காவரை சென்று இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது.

வல்லுனர்கள் இந்த ஏவுகணை குறித்து கூறுகையில், "இந்த ஏவுகணையை எங்கிருந்தும் ஏவக்கூடிய வசதி படைத்தது. கூடவே இது அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் திறன் படைத்து, இந்த ஏவுகணைக்கு பதிலடியாக இந்தியாவிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லை என்று கூறினர்.

கூடவே தரையிலிருந்து தரை தாக்கும் திறன் படைத்த நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய DF-21 ஏவுகணையும் பங்கெடுத்தது. இந்த ஏவுகணை 3200 கிலோ மீட்டர் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இது தான் உலகிலேயே ஒரே நேரத்தில் பல விதமான ஆயுதங்களை தாங்கிச்செல்லும் ஆற்றல் படைத்த ஒரே ஏவுகணையாகும்.

இந்தியாவிடம் இதற்கு பதிலாக அக்னி 3 உள்ளது என்றாலும் அது சோதனை நிலையிலேயே உள்ளது.

சீனாவின் மற்றொரு ஆயுதமான CJ-10 தரையிலிருந்து தரையை தாக்கும் திறன் படைத்து. இது 1500 கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்தது. இது போன்ற ஏவுகணைகள் இந்தியா, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்து சீனாவிடம் மட்டும் தான் உள்ளது. இந்த ஏவுகணை ஒலியைவிட விட வேகமாக சென்று தாக்கும் திறன் படைத்தது. மேலும் இது 500 கிலோ எடை உள்ள ஆயுதத்தை தாங்கிச் செல்லும் திறன் படைத்து.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியாவிடம் பிரமோஸ் ஏவுகணை உள்ளது. இது இதற்கு போட்டியான சீனாவின் ஏவுகணையைவிட சற்று குறைவான எடை உள்ள ஆயுதத்தையே தாங்கிச்செல்லும் திறன் படைத்திருந்தாலும் இலக்கை குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்தது.

இந்த ஆயுதங்களுக்கு நடுவில் சீனாவின் இராணுவ அணிவகுப்பில் பங்கெடுத்த புதிய ரக ஆயுதம் கப்பல்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் ஆகும். இந்த YJ-8 வரிசையில் உள்ள ஏவுகணைகள் சீன கப்பல் படையில் அங்கம் வகிக்கிறது. இது கடல்வழி ஆபத்துகளை களைவதற்காக பயன்படுத்தப் படுகிறது.

நன்றி
NDTV

எதிர்காலத்தில் ஆல்கஹால் இல்லாத மருந்துகள்!

நைஜீரியாவின் முஸ்லிம் மருந்தாளர்கள் கூட்டமைப்பு மருந்துகளிலுள்ள ஆல்கஹால் (மது ) சேர்க்கையை அகற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய மருந்தாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஹாருன் அழியு தெரிவித்துள்ளார் .

இது பற்றி அவர் கூறுகையில்,"முஸ்லிம்களுக்கு ஆல்கஹால் இல்லாத மருந்துகளை உட்கொள்வதற்கான நேரம் வந்து விட்டது என்று அவர் கூறினார். மேலும் இஸ்லாமியர்கள் மது உட்கொள்ள கூடாது என்றும் ஆனால் அறிவியல் ரீதியாக அவர்கள் பயன்படுத்தும் மருந்துகளில் மது கலந்திருக்கின்றது. இதனால் இஸ்லாத்தின் போதனைகளை மனதில் கொண்டு ஒரு அறிவியல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது மருந்துகளில் மதுவிற்கு பதிலாக ஒரு நல்ல மாற்றுப் பொருளை கண்டுபிடிக்கும்" என்று கூறினார்.

"மேலும் பல இளைஞர்கள் இருமல் மருந்தை தவறாக பயன்படுத்துகிறார்கள், இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை. இதுபோன்ற தவறான பயன்பாட்டை தடுக்க திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்தார்.

"தற்பொழுது நாம் பயன்படுத்தும் இருமல் மருந்திற்கு பதிலாக வேறு மருந்துகளை அறிமுகப்படுத்த இருக்கின்றோம். இது, இந்த மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும் நைஜீரியாவின் மருத்துவமனைகளில் மருந்துக்கு பணமில்லாமல் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

நன்றி,
ABNA.

ஊருக்கு உபதேசம் செய்யும் ஒபாமா!


இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளில் ஒருவரான காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கருத்துக்கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா,

  • காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வாழ நாம் உறுதி கொள்ளவேண்டும்
  • அனைவரையும் மதித்து போற்றவேண்டும்.
  • காந்தி போதித்த அஹிம்சை முறை இன்று உலகம் முழுவதும் பலரால் பின்பற்றப்படுகிறது.
  • பொறுமை-அகிம்சையை போதித்த அவரை இந்நாளில் நினைவு கூர்வோம்.

என்று கூறியுள்ளார்.

ஒபாமா அவர்கள் உலக மக்களுக்கு சொன்ன செய்தியை தான் கடைபிடிக்க முன்வருவாரா? காந்தி போதித்த அகிம்சையை சிலாகித்து பேசும் ஒபாமா, ஆப்கானிலும், இராக்கிலும் நேரடியாகவும்-லெபனானிலும், பாலஸ்தீனிலும் கள்ளக்குழந்தை இஸ்ரேல் மூலமாகவும் 'ஹிம்சை'யை கையாள்வது ஏன்? காந்தி போதித்த அஹிம்சை உலக அளவில் பலராலும் பின்பற்றப்படுகிறது என்று சொன்ன ஒபாமா, காந்தியின் அகிம்சையை அமெரிக்காவும் பின்பற்றும் என்று சொல்ல தயங்கியது ஏன்? அப்படி சொன்னால் ஆக்கிரமிப்பு போர் செய்யமுடியாது. ஆயுத வியாபாரமும் செய்யமுடியாது. அரபகங்களை அடக்கியாள முடியாது என்பதாலா?

காந்தியின்வழியில் அனைவரையும் மதிக்கவேண்டும் என்று கூறும் ஒபாமா, தான் மட்டும் ஆயுதங்களை குவித்துக்கொள்ளலாம், அடுத்த நாடு அதுவும் ஒரு முஸ்லீம் நாடு தனது நாட்டின் பாதுகாப்பு கருதி ஒரு தீக்குச்சியை தயாரித்தால் கூட அதை கழுகுப்பார்வை பார்ப்பது ஏன்? அப்போது மட்டும் அடுத்தவரின் மதிப்பு-உரிமை பறிக்கப்படுவது தெரியவில்லையா?

ஆக, காந்தியின் அகிம்சையை ஒபாமா மதிப்பவராக இருந்தால் தனது ஆக்கிரமிப்பு படைகளை முஸ்லீம் நாடுகளில் இருந்து வெளியேற்றிவிட்டு பின்பு அகிம்சையை பற்றி பேசட்டும். அங்கே தீவிரவாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பாலை நிலம் அப்பாவிகளின் ரத்தத்தால் சிவப்பாக காட்சியளிக்க இன்றும் கோடிகணக்கான டாலர்களை ஒதுக்கும் ஒபாமா, மறுபுறம் அஹிம்சை பேசுவது வியப்பானது. சரி! ஒபாமா 'பீல்'பண்ணாதீங்க! இந்தியாவில் என்ன வாழுது..? அக்டோபர் 2 அன்று மட்டும் மதுக்கடைகளை மூட்டி விட்டு அன்று காந்தியின் சிலைக்கு மாலை போட்டுவிட்டு காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோம் என்று வீர உரையாற்றிவிட்டு, அதே காந்தி பிறந்த குஜராத் மண்ணை காவியாக மாற்றிய கயவர்களை பத்திரமாக சுதந்திர காற்றை சுவாசிக்கச்செய்து வரும், எங்க அரசியல்வாதிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். எனவே எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க! ஈராக்கிலும்-ஆப்கானிலும் கேட்கும் மரண ஓலத்திற்கு நடுவிலும் நீங்கள் சொல்லுங்க 'காந்தியின் அகிம்சையை பின்பற்றுவோம்' என்று!