சனி, 28 ஏப்ரல், 2012

பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லஷ்மணுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை

  Bangaru convicted of accepting Rs1 lakh bribe
புதுடெல்லி:போலி ஆயுத ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவிக்கும். குற்றவாளியான பங்காரு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ஐந்து வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் வகையிலான பிரிவுகளை நீதிபதி கன்வல்ஜித்சிங் அரோரா பங்காருவின் மீது சுமத்தியுள்ளார்.
ராணுவத்திற்கு தெர்மல் இமேஜர் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பெறுவது என கூறி வெஸ்ட் எண்ட் இண்டர்நேசனல் என்ற போலி நிறுவனத்தின் பெயரில் இடைத்தரகர்கள் வேடமிட்டு வந்த டெஹல்கா புலனாய்வு பத்திரிகை நிருபர்களிடமிருந்து பங்காரு லட்சுமணன் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில்தான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் தங்களுக்கு கிடைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திடம் சிபாரிசு செய்யவேண்டும் என கோரும் ரகசிய கேமரா காட்சிகளை 2001 மார்ச் மாதம் 13-ஆம் தேதி டெஹல்கா வெளியிட்டது.
2001 ஜனவரி மாதம் 1-ஆம் தேதி பங்காரு லட்சுமணன் தனது அலுவலகத்தில் வைத்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சப்பணத்தை வாங்கினார். இத்தொகை மேசையின் மீது வைக்கும் காட்சியும் ரகசிய கேமராவில் பதிவானது. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து, கட்சி நிதிக்கு அளிக்கப்பட்ட பணம் என்று பங்காரு விளக்கம் அளித்தார்.
2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.கவின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பங்காருலட்சுமணன் இச்சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பால் எட்டு மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பங்காரு லட்சுமணனுக்கு ஒரு லட்சம் ரூபாயும், அவரை காண்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திய அவரது உதவியாளர்களான உமா மகேஷ்வரி மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோருக்கு பத்தாயிரம் ரூபாயும், தங்க செயினும் லஞ்சம் வழங்கப்பட்டதாக சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. பின்னர் அப்ரூவர் ஆன சத்தியமூர்த்தியின் வாக்குமூலம் பங்காரு வழக்கில் முக்கிய திருப்பம் ஆனது.
ஊழல் ஒழிப்பு சட்டத்தின்படி பதிவுச்செய்யப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2000 டிசம்பர் 23-ஆம் தேதிக்கும் 2001 ஜனவரி ஏழாம் தேதிக்கும் இடையில் எட்டு தடவை டெஹல்கா குழு பங்காருவை சந்தித்ததாக சி.பி.ஐ கண்டுபிடித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பங்காரு லட்சுமணன் தேசிய அரசியலில் இருந்தே காணாமல் போனார். அன்று பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் உதவியாளர் ஜெயா ஜெட்லியை சந்தித்தும் டெஹல்கா குழு லஞ்சம் அளிப்பதாக வாக்குறுதியளித்தது. இதுத்தொடர்பான வீடியா காட்சிகள் வெளியானதை தொடர்ந்து ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார்

புதன், 25 ஏப்ரல், 2012

கூத்தாநல்லூர் ஜமாஅத், தமுமுக, மமக மற்றும் இயக்க சகோதர்களுக்கும் அவசர வேண்டுகோள்......

மே 1 முதல் நடைபெற இருக்கும் சாதி,மத,வகுப்புவாரி கணக்கெடுப்பில் நமது ஊர் முஸ்லிம்கள் சரியான தகவல்களை அளிப்பது பற்றிய விழிப்புணர்வுவை  ஏற்பாடு செய்ய வேண்டும்

பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களை அதிகாரிகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விடுகின்றனர். குடும்ப அட்டைக்கு (ரேஷன் கார்டு) பதிவு செய்வதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வேறுபாடு உள்ளது. முன்னது உணவுப் பொருள் விநியோகத்திற்காக கணக்கிடப்படுகிறது. அதில் வெளிநாட்டில் வசிப்பவர்களை சேர்க்காவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. பின்னது அரசு நலத்திட்டங்கள் இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கிறது.

கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் எழுத்துப்பூர்வமாக இல்லாமல் நேரடியாக கம்ப்ïட்டரில் பதிவு செய்யப்படுகின்றன..எனவே இக்கணக்கெடுப்பில் கூத்தாநல்லூரியில் பிறந்த அணைவரையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இந்த விஷயத்தில் அசிரத்தையாக இருந்து விடக்கூடாது.

- வழிகாட்டி பதிவுகளை அணைத்து பள்ளிவாசல்களில் பதிவது.

- கூத்தாநல்லூர்யின் சமுதாய அரசியல் இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் இவ்விஷயத்தை வீடுகளில் வலியுறுத்துதல்

- பதிவு செய்ய வரும் அதிகாரிகளுடன் தெருவாரியாக தன்னார்வலர்களை உடன் அனுப்புதல்

- கவுன்சிலர்கள் உடனிருப்பதும் அவசியம்.

மிகச்சிரமமான பணியான இந்த கணக்கெடுப்பு அடிக்கடியோ ஆண்டுதோறுமோ ஐந்தாண்டுகளிளோ எடுக்கப்படுவதில்லை. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் எடுக்கப்படுகிறது. எப்படியும் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசு திட்டங்களும் ஒதுக்கீடுகளும் இருக்கும். நாளேடுகளில் இதர சாதி சங்கங்களின் அறிக்கைகளை படித்து பார்த்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

யார் இந்த பிரவீன் சுவாமி ?

தரமான செய்திகளை தருபவர் என்று பலராலும் நம்பப்படுபவர். தி ஹிந்துவிலும், ஃப்ரண்ட்லைனிலும் பல காலமாக எழுதி வருபவர். சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர். சாதனையாளர் விருதுகள் பல பெற்றவர்.

இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் ஹிந்துவிலும், ஃபிரண்ட் லைனிலும் தவறாமல் இவரது கட்டுரை இடம்பெறும். சொல்லி வைத்தாற்போல் நடந்த அத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் ஏதாவது ஒரு காரணததை இவராகவே கற்பனை செய்து கொண்டு கண் காது மூக்கு எல்லாம் வைத்து படிப்பதற்கு சுவாரஸ்யமாக செய்திகளை தருவதில் கில்லாடி.

1.)2007 பிப்ரவரி 20ல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு கோச்சுகளில் குண்டு வெடித்து 66 முஸ்லிம்கள் இறந்தனர். புலனய்வின் அறிக்கை வருவதற்கு முன் இவர் ஃப்ரண்ட்லைனில் எழுதிய கட்டுரையின் தலைப்பு 'அமைதிக்கு எதிரான சதி'. 'இந்தியா பாகிஸ்தான் நட்புறவை விரும்பாத பாகிஸ்தானிய இஸ்லாமியவாதிகள்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியுள்ளனர்' என்பது அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சம். இதற்கு ஆதாரமாக இவராக சுயமாக சில சம்பவங்களை முடிச்சுப் போட்டு தனது கைவரிசையை காட்டியிருந்தார்.

முடிவில் என்ன ஆயிற்று? அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று சுவாமி அசிமானந்தா ஆசி வழங்கியுள்ளார்.

2.) 2007 மே 19ல் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிக்கின்றது. வெள்ளிக் கிழமை தொழுகைக்கு வந்த 9 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர். அந்த சம்பவத்தை எதிர்த்துக் கண்டனப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது அதை விடக் கொடுமை. இப்படி முஸ்லிம்கள் உயிர் அங்கு பலியாகியிருக்க நான்கு நாட்கள் கழித்து 2007 மே 23 அன்று தி ஹிந்து நாளிதழில் பிரவீன் சுவாமி ஒரு செய்திக் கட்டுரை எழுதுகிறார்.

தலைப்பு: 'மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கு பின்னால்'

துணை தலைப்பு: 'வகுப்பு வாத வன்முறை, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றம், உலக அளவிலான ஜிஹாத், ஆந்திர பிரதேச தலைநகரை உலுக்குகிறது'

இந்தியாவின் நகரங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குறி அப்படியே இருப்பதாகவும் அதன் ஒரு முன்மாதிரிதான் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். இதற்கு காரணம் லஸ்கர் இ தொய்பா என்றும் கண்டுபிடித்திருந்தார்.

ஆனால் இன்று என்ன ஆயிற்று? மக்கா மஸ்ஜிதில் நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று நீதி மன்றத்தில் அடித்துச் சொல்கிறார் அசீமானந்தா.

3.) 2007 அக்டோபர் 12 ந்தேதி அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வெடிக்கிறது. புனித ரமலான் நோன்பு துறக்க வந்த நோன்பாளிகள் 3 பேர் தங்கள் நோன்புகளைத் துறக்காமலேயே கொல்லப்பட்டனர். 28 நோன்பாளிகள் படுகாயமுற்றனர்.

மறுநாள் வழக்கம் போல் தி ஹிந்து பத்திரிக்கையில் பிரவீன் சுவாமி ஒரு கட்டுரை எழுதுகிறார்.

தலைப்பு: 'பாப்புலர் இஸ்லாமுக்கு எதிரான போர்'

'பாப்புலர் இஸ்லாம்' என்று இவர் கூறுவது பெரும்பாலான முஸ்லிம்கள் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்பதாகும்.அதாவது தர்ஹா வழிபாட்டை பிடிக்காத இஸ்லாமிய தீவிரவாதிகள் அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வெடிக்கச் செய்துள்ளார்கள் என்கிறார். 2006 ஆம் ஆண்டு மாலேகானில் ஒரு தர்ஹாவில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்கிறார்.

ஆனால் அசீமானந்தாவோ ' அஜ்மீர் குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டது இந்திரேஷ் குமாரும், சுனில் ஜோஷியும் என்கிறார். இவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸின் முக்கிய புள்ளிகள். 'தர்ஹாவை ஏன் குண்டு வெடிப்புக்கு தேர்ந்தெடுத்தீர்கள்' என்று கேட்டதற்கு 'இந்துக்கள் அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்வதை தடுக்கவும், முஸ்லிம்களை பழி வாங்கவும்' என்கின்றனர் இந்த மாபாதகர்கள்.

அசிமானந்தா ஏன் இந்த உண்மைகளை எல்லாம் கோர்ட்டில் போட்டு உடைத்தார் என்பதன் பிண்ணனியையும் பார்த்து விடுவோம். தெரிந்த விபரம்தான் ஆனாலும் புதிதாக படிப்பவர்களுக்கு:

நவம்பர் 19, 2010 அன்று கைது செய்யப்பட்ட அசிமானந்தா ஹைதரபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு ஹைதராபாத்தின் சன்கால்குடா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருடன் 21 வயதான அப்துல் கலீம் என்ற முஸ்லிம் இளைஞனும் அடைக்கப்பட்டிருந்தார்.அசிமானந்தாவுக்கு உணவு பானங்களை எடுததுச் செல்வது. பணிவிடைகள் செய்வது என அனைத்து உதவிகளையும் அப்துல் கலீம் செய்துள்ளார். இந்த இளைஞனின் செயல்களால் கவரப்பட்ட அசிமானந்தா அவனின் வாழ்க்கை குறித்து விசாரித்துள்ளார். மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் கலீமும் ஒருவர். கடுமையான சித்தரவதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்பட்ட பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து தான் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்பட்டதை அப்துல் கலீம் விவரித்துள்ளார். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசைகளோடு சிரகடித்து பறந்து கொண்டிருந்த தன்னுடைய வாழ்க்கை எவ்வாறு திசை மாறிப் போனது என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

மர்ம உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி நிர்வாணமாக ஐஸ் கட்டிகளில் படுக்க வைத்து தனக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை அப்துல் கலீம் விவரித்த போது கண்கலங்கிப் போனார் அசிமானந்தா. இந்த இளைஙனைப் போன்று பலரின் வாழ்க்கை நிர்மூலமாவதற்கு தானும் ஒரு காரணம் என்பதை நினைத்து வெட்கி வேதனைப்பட்டு தனது தவறுக்கு பிராயச்சித்தமாக கோர்ட்டில் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்திருக்கிறார் அசிமானந்தா.

இனி பிரவீன் சுவாமியின் மேட்டருக்கு வருவோம்......

'ரிப்போர்டிங் என்னும் செய்திகளைக் கொடுப்பதில் பிரவீன் சுவாமி ஒரு பொழுதும் நெறிமுறைகளைக் கடைபிடிப்பது கிடையாது' என்று டெல்லியை மையமாகக் கொண்டு புலனாய்வு ஆவணப்படங்களைத் தயாரிப்பவரும், குஜராத் இனப்படுகொலைகளைப் பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்தவருமான சுப்ரதீப் சக்ரவர்த்தி கூறுகிறார். 'பிரவீன் கூறும் செய்திகளுக்கு அவர் ஒரு பொழுதும் ஆதாரங்களைக் குறிப்பிட மாட்டார். புலனாய்வுத் துறையினர் இப்படி நம்புகிறார்கள் என்பதுதான் அவரின் முக்கிய ஆதாரமாக இருக்கும்' என்கிறார் சக்ரவர்த்தி.

இஸலாமிய பயங்கர வாதத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதத் தயாராகும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் ஹிந்துத்வ பயங்கர வாதம் குறித்தும் ஆய்வு செய்வதற்கோ எழுதுவதற்கோ எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

பிரவீன் சுவாமியைப் போன்று நாக்கிலும் தங்களின் எழுத்திலும் விஷத்தைக் கக்கி இந்தியர்களின் ரத்தத்தில் தங்கள் உடம்பை வளர்த்து வரும் கருங்காலிகளை இனம் கண்டு ஒதுக்கினாலே இந்தியா தலைநிமிரும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.

இவர்கள் ஏன் முஸ்லிம்களை மட்டும் குறி வைக்கிறார்கள் என்பது நடுநிலையாளர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இன்று இந்தியாவில் வர்ணாசிரிமத்துக்கு பெரும் சவாலாக இருப்பது இஸ்லாமே! யூதர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதும் இஸ்லாமே! ஏனெனில் கிறித்தவமும் அதன் பொலிவை இழந்து வெகு நாட்களாகிறது. புத்த மதத்தையும் ஓரம் கட்டியாகி விட்டது, பூர்வீக மார்க்கமான சமணத்தையும் துடைத்தெறிந்தாகி விட்டது. இஸ்லாத்தையும் அதே போன்று ஒரு வழி பண்ணி விட்டால் வர்ணாசிரமத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று நினைத்து இவர்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். இவர்களின் இந்த திட்டம் 10 சதவீதம் கூட வெற்றி பெறப் போவதில்லை. ஏனெனில் பெரும் பெரும் வல்லரசுகளையே மண்டியிட வைத்த இஸ்லாம் அசிமானந்தாவைப் போல் தவறை உணர்ந்து இஸ்லாத்தை அரவணைக்கும் காலம் வரும். அதுவரை பொறுப்போம்.

சமீபத்தில் நண்பர் சார்வாகன் இந்தியாவின் ஆட்சி இந்துத்வாவின் ஆட்சியாக மலர பலர் தற்போது ஆசைப்படுவதாக தனது பதிவில் கூறியிருந்தார். தாராளமாக வரட்டும். இந்துத்வா ஆட்சி வந்தால் வர்ணாசிரமம் தலை தூக்கும். சாதிக் கொடுமைகள் மீண்டும் தலை எடுக்கும். தற்போது முன்னேற்றத்தில் செல்லும் நமது நாடு பின்னோக்கி செல்லத் தொடங்கும். இந்த அநியாயங்களை எல்லாம் பார்த்து இந்துத்வ வாதிகளே நடுநிலையாளர்களாக அசிமானந்தாவைப் போல் மாற வாய்ப்பு உண்டு. எனவே சார்வாகன் இனி இந்துத்வாவை வளர்க்க தாராளமாக பாடுபடலாம். வாழ்த்துக்கள்

thanks : இன்று ஒரு தகவல்

சனி, 21 ஏப்ரல், 2012

இலங்கை தம்புள்ள ஜும்ஆ பள்ளி வாசல் (இறை இல்லம்) தகர்ப்பு

இலங்கையின் தம்புள்ளை நகரில் அமைந்திருந்த 60 வருடங்களுக்கு முன்னர்
நிர்மாணிக்கப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் சிங்கள பவ்த பேரினவாதிகளால்
போலிஸ், இராணுவத்தினரின் முன்னிலையில் நேற்று (வெள்ளி கிழமை) பகல் தகர்க்கப் பட்டுள்ளது.


அரபு நாட்டு பத்திரிகைகள், இலங்கை மற்றும் முக்கியமாக இந்திய முஸ்லிம் இயக்கங்கள், அரசியல், சமூக அமைப்புகள் என அனைத்துக்கும் கொண்டு செல்லுங்கள். எல்லா ஊடகங்களிலும் குறித்த செய்தியை இடம் பெற உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

பள்ளிவாசலுக்கு எதிராக சிங்கள பவ்த்த பேரினவாதிகளின் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, பள்ளிவாசல் தகர்க்கப் படும் என்ற எச்சரிக்கை இரண்டு நாட்களுக்கு முன்னரே பகிரங்கமாக வெளியிடப்பட்ட நிலையில், முஸ்லிம் அமைச்சர்கள் இது குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கவனத்துக்கு நேரடியாக பலமுறை கொண்டுவந்திருந்த நிலையில், இராணுவம், பொலிசாரின் முன்னிலையிலேயே மேற்படி தகர்ப்பு
இடம் பெற்றுள்ளது.

பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது. பள்ளிவாயல் உடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சிங்கள இணையம் பிரசுரித்த படங்கள் .
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு
                                              அல் குரான் 2:114
 





Source: www.kattankudi.info

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

முஸ்லிம் பெண் பதிவர்களின் அதிரடி நடவடிக்கை

tபல்வேறு சவால்களையும் தாண்டி இஸ்லாம் தொடர்ந்து பலரையும் தன்பால் ஈர்த்து வருகின்றது. இஸ்லாமை ஏற்போரில் பெண்களே அதிகம் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகின்றது.

தற்போது இதில் ஒரு பகுதியாக, முஸ்லிமல்லாதவர்கள் பயன்பெறும் விதமாக (குறிப்பாக சகோதரிகள்) இஸ்லாமிய பெண்மணி என்ற தளம் (பார்க்க <<இங்கே>>) முஸ்லிம் சகோதரிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளமானது முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் தளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பதிவுலக சகோதரிகள் மற்றும் முகப்பக்கத்தில் இஸ்லாம் குறித்து விளக்கம் அளிக்கும் சகோதரிகளால் ஒருங்கிணைத்த முயற்சியாக தொடக்கப்பட்டுள்ள இந்த தளம், இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய அடிப்படையிலான சிந்தனைகள், விழிப்புணர்வு கட்டுரைகள், வரலாற்று பின்னணிகள் போன்றவையும் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பும் மாற்று கொள்கை சகோதர சகோதரிகளுக்கு இந்த தளம் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றோம். முஸ்லிம்கள், இந்த தளம் பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் அறிந்தவர்களுக்கு கூறி இந்த முயற்சி வெற்றி பெற ஆதரவளியுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த முயற்சியை பொருத்திக்கொண்டு, இந்த சகோதரிகள் தங்கள் பணியில் வெற்றிபெற இறைவன் உதவுவானாக...

<<இஸ்லாமிய பெண்மணி தளத்தின் அறிமுக பதிவை இங்கே காணலாம்>>
t


thanks :
http://manithaabimaani.blogspot.com/2012/04/blog-post_16.html

உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர்

இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சமூக ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. உள்நாட்டில் அது தொடர்ந்து பேணிவரும் மதச்சார்பற்ற மாண்பும், சமதர்ம சமுதாயம் அமைப்பதே அது முக்கியக் குறிக்கோள் என்று அறிவித்ததும், வெளியுறவுக் கொள்கையளவில் இந்தியா கடைப்பிடித்து வரும் அணிசேரா நடுநிலைக் கொள்கையுமே இந்தியாவை உலக அளவில் தலைநிமிரச் செய்தது.

இத்தகைய சிறப்பினைப் பெற்றிருந்த இந்தியத் திருநாட்டின் பெருமைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு அமைந்தது. பாசிசவாதிகளின் இந்த தீய செயல் இந்தியாவின் வளர்ச்சியை குறைந்தபட்சம் கால்நூற்றாண்டு பின்தங்கச் செய்தது என்றால் அது மிகையல்ல. இந்த அறம் கொன்ற தேசவிரோதச் செயலில் குற்றவாளிகளாக 68 பேரை லிபர்ஹான் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த வேதனைச் செயல் நிகழ்ந்து 10 ஆண்டுகள் முடிவடைவதற்குள் குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து உலகின் இதயங்களை ரணமாக்கியது. 21ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலையான குஜராத் இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் சர்வதேச அளவில் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மோடி நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

மோடியின் கொடூரச் செயல்கள் அம்பலமானதால் மோடிக்கு வெளிநாடுகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செயல்கள் குறித்து சட்டை செய்யாத பாசிச சக்திகள் ஒரு மிகப்பெரிய நரித்தனத்தை செய்தன. மூவாயிரம் முஸ்லிம்களைக் கொலை செய்ததைப் பாராட்ட(!) வேண்டும் என நினைத்தார்களோ என்னவோ... மோடியை வளர்ச்சியின் நாயகன் என்றார்கள். மோடியை வல்லவர், நல்லவர் என கூசாமல் பொய்ப் புகழ் பரப்புரை செய்த காலக்கட்டத்தில் மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசுவும், திரிபுராவில் நிருபன் சக்கரவர்த்தியும் கேரளாவில் ஏ.கே.அந்தோனியும் எளிமையும் திறமை யும் வாய்ந்த முதல்வர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் அவையெல்லாம் வெகுஜன ஊடகங்களுக்கு கண்ணில் படவேயில்லை.

மோடியைப் போல் உண்டா? மோடியே வளர்ச்சியின் நாயகன் என செயற்கையான முறையில் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். பாசிசவாதிகளின் ஐந்தரை கோடி குஜராத் மக்களையும் அவமானப்படுத்தியதாகவே நாட்டு மக்கள் நினைக்கத் தொடங்கினர். காரணம் குஜராத்தின் வளர்ச்சி மோடியால் விளைந்ததல்ல, நூற்றாண்டு காலமாக குஜராத் வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள மாநிலம்தான். இருப்பினும் மோடியைத் தூக்கி நிறுத்துவதற்காகவே இந்தப் பொய்ப்பிரச்சாரம் என்பதை விளக்கத் தேவையில்லை. மோடி மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என புதிய பொய்ப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மோடி அடுத்த பிரதமர் என பொய்ப்பரப்புரை அனல் பறந்தன. இருப்பினும் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி அழைக்கப்படவே இல்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் டைம் பத்திரிக்கையில் உலகின் பிரபலமான 100 பேர் வரிசையில் மோடியும் பட்டியலிடப்பட்டார். மோடியின் அடிப்பொடிகள் ஆனந்தக் கூத்தாடி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இணைய பயன்பாட்டாளர்கள் அனைவரும் மோடிக்கு ஆதரவாக வாக்குகளைக் குவித்தனர். மேல்தட்டு மக்கள் இதனையே அன்றாடக் கடமையாகக் கொண்டு திரிந்தனர். செயற்கையான பரபரப்பை ஏற்படுத்தி 2 லட்சத்து 56 ஆயிரம் வாக்குகள் மோடி பெற்றார். ஆனால் சரித்திரம் சந்தித்திராத வகையில் இதுவரைக்கும் யாருக்குமே நிகழாத ஒன்று நிகழ்ந்தது.

ஆம் மோடிக்கு எதிர்வாக்குகள் 2 லட்சத்து 66 ஆயிரம் விழுந்தன. இந்த ஆண்டின் உலகில் அதிகம் வெறுக்கப்படும் நபர் என்ற பெயரை மோடி பெற்றுவிட்டதாகக் கூறியதோடு நவீன நீரோ மன்னன் என இந்திய உச்சநீதிமன்றம் இடித்துரைத்ததையும் டைம் இதழ் தனது அட்டைப் படத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளது. இனப்படுகொலையாளன் உலக அளவில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். மோடி விரைவாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


சனி, 14 ஏப்ரல், 2012

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை

இந்தியாவில் காவல்துறையும், உளவுப்பிரிவும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து செயல்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் குண்டுவெடித்தாலும், விசாரணை துவங்குவதற்கு முன்பே முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தி ஊடகங்களின் மூலமாக செய்திகளைப் பரப்பும் நிலையை காவல்துறை அதிகாரவர்க்கம் செய்து வருகிறது.

இதன்மூலம் பொதுமக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற நிலையைக் காவல்துறையும், ஊடகங்களும் உருவாக்குகின்றன. பின்னர் எவ்வித ஆதாரமுமின்றி அப்பாவி முஸ்லிம்களைக் காவல்துறையினர் கைது செய்கின்றனர். 2011 டிசம்பர் 6ம் தேதியன்று அனைத்து பத்திரிக்கைகளும், ‘‘பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இரண்டு பேர் டெல்லியில் கைது, தற்கொலைப் படை பெண் தீவிரவாதியும் கைது என்றும், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம்’’ என்றும் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டன. முந்தைய நாட்களில் 24 மணிநேர செய்திச் சேனல்களும் பரபரப்பு செய்திகளாக இதனை ஒளிபரப்பின.

இதைப்பற்றி டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிசிபி) அசோக் சாந்த் பத்திரிக்கையாளரிடம் கூறுகையில், ‘பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இம்ரான் (40), சூஃபியா கன்வான் (38) ஆகியோர் நேபாளம் வழியாக டெல்லிக்கு வந்துள்ளனர். இவர்களை டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளோம். இவர்களின் சொந்த ஊர் பாகிஸ்தானிலுள்ள சரீபாபாத். இவர்களை ஐ.எஸ்.ஐ. நன்கு பயிற்சி கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். இவர்கள் இருவரும் கணவன், மனைவி போன்று போலியான திருமணப் பதிவு நகல் வைத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும் டி.சி.பி. அசோக் குறிப்பிட்டார். அதன்பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நான்கு மாதமாக சிறையில் அடைபட்டு பின்னர் 2012 மார்ச் 27ம் தேதி அன்று கடுமையான காயத்தோடு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இர்பான் மற்றும் சூஃபியா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை டெல்லி மாவட்ட தலைமை நீதிபதி விநோத் யாதவ் விசாரித்தார். அந்த விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட இர்பான், தனக்கு நேர்ந்த அவலத்தை நீதிபதியிடம் கதறினார். அவர் கூறியதாவது:

‘‘என்னுடைய சொந்த ஊர் இந்தியாவின் மாநிலமான குஜராத்தில் உள்ள அஹமதாபாத். என்னுடைய தந்தையும், தாயும் வயது முதிர்ந்த நிலையிலும் அஹமதாபாத்திலுள்ள டெல்லி நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். என்னுடைய தந்தை பெயர் யூசுப். என்னுடைய குடும்பம் கடுமையான பொருளாதார கஷ்டத்தில் இருந்த நிலையில் நான் 15 வயதிலேயே பாகிஸ்தானுக்குச் சென்று, துணி வியாபாரம் செய்து வந்தேன். அங்கேயே திருமணமும் முடித்துக் கொண்டேன். என்னுடைய மனைவிதான் சூஃபியா. நான் துணி வியாபாரம் மூலம் செல்வந்தர் ஆனேன். நான் பலமுறை வியாபார நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளேன். நான் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ளேன்.

உலகளாவிய அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது எனக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஐரோப்பாவிலுள்ள என்னுடைய நண்பர்கள் இந்தியாவிலுள்ள குஜராத் தான் துணிக்கு பிரபலமான இடம், அதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதனால் 2009 ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து 2010 அக்டோபர் 2ம் தேதி வரை இந்தியாவில் தான் விசா எடுத்து தங்கியிருந்தேன். இங்கு தங்கியிருந்த நாட்களில் இந்தியக் குடியுரிமை கோரி குஜராத் அரசு மூலமாக விண்ணப்பித்தேன். மும்பை தாக்குதலைத் தொடர்ந்து எனக்கு விசா மறுக்கப்பட்டது. இதனால் நான் நேபாளில் இருந்து துணி வியாபாரம் செய்ய திட்டமிட்டேன். அதனால், பாகிஸ்தானிலிருந்து நேபாளம் சென்றேன்.

நேபாளுக்கு வந்தவுடன் குஜராத்தில் உள்ள எனது வீட்டுக்கு தொலைபேசியில் பேசினேன். அந்த தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு, நான் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் என குற்றஞ்சாட்டி நவம்பர் மாதம் நேபாளத்தில் இருந்து என்னையும் எனது மனைவியையும் டெல்லிக்கு அழைத்து வந்தார்கள். பின்னர் ஒரு மாதம் கழித்து டிசம்பர் 5ம் தேதி நரேந்திர மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதி என்று குற்றம்சாட்டி கைது செய்தனர். எங்களை சட்டவிரோத காவலில் வைத்திருந்த நேரத்தில், கடுமையான சித்ரவதை செய்தார்கள்’’ - என்று கண்ணீர்மல்க இம்ரான் கூறினார். நாங்கள் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தோம். இன்றைய நிலையோ சமைக்க மண்ணெண்ணெய் கூட வாங்க முடியாமல் கஷ்டத்தில் உள்ளோம் என இர்பானின் தந்தை யூசுப் நீதிமன்றத்தில் கண்ணீர் வடித்தார்.

காவல்துறையின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு பொங்கியெழுந்த நீதிபதி வினோத் யாதவ், சொந்த நாட்டில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருப்பவரையே பயங்க ரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறையின் செயலைக் கடுமையாகக் கண்டித்ததோடு, நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு செயல்படாது என்று குறிப்பிட்டார்.

இம்ரானின் வழக்கை எடுத்து நடத்த மனிதநேயத்தின் அடிப்படையில் வாதாட வழக்கறிஞர்கள் தயாரா? என வழக்கறிஞர்களைப் பார்த்து கேட்டார். உடனே, வழக்கறிஞர் சுனில் திவாரி இம்ரானுக்காக வாதாட தன்னார்வத்தோடு முன்வந்தார். பின்னர், இந்தியக் குடியுரிமை ஆவணங்களை சமர்ப்பிக்க, இம்ரானுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்மூலம் காவல்துறையின் முஸ்லிம் விரோதப் போக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். இதுபோன்ற காவல்துறை ஓநாய்களின் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறையின் கொடுமைகள் தொடர்கதையாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி குண்டுகளுக்கு பயந்து டெல்லிக்கு வந்து வேலையோ, வியாபாரமோ செய்துவரும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து பொய் வழக்குப் போட்டு, சித்ரவதை செய்து காவல்துறையினர் கைது செய்து நிரந்தரமாக சிறைச்சாலைகளில் தள்ளுகின்றனர்.

இப்போது நடைபெற்று வருகிற ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் செயலாளர் கூறுகையில், இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராகப் பல்வேறு கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளைக் களைய எந்தவொரு முன்முயற்சியையும் காங்கிரஸ் அரசு எடுக்க முன்வருவதில்லை. மத்திய அரசிலும், கேரள மாநிலத்திலும் காங்கிரஸோடு கூட்டணி வைத்திருக்கும் கேரளா முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி கேரள முஸ்லிம் லீக்கின் மத்திய அமைச்சர் இ.அஹமது, சமுதாய உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் ஒருமுறை கூட பேசியதாக தகவல் இல்லை.

முஸ்லிம் லீக்கின் தலைவராக இருந்த பனாத்வாலா சாஹிப் அவர்கள் பலமுறை சமுதாய உரிமைக்காக பாராளுமன்றத்தில் கர்ஜித்துள்ளார். இப்படிப்பட்ட கண்ணியம் மிகுந்த தலைவரான பனாத்வாலா சாஹிப் அவர்க ளையே பாராளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுத்தவர்தான் இன்றைய தலைவர் இ.அஹமது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அநீதியை பாரபட்சமின்றி மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முஸ்லிம் களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பாதுகாப்புத் துறைகளின் அனைத்து உயர்மட்ட பொறுப்புகளில் முஸ்லிம்களை இடம்பெறச் செய்தால் மட்டுமே ஒரு சமூகத்திற்கு எதிரான கொடுமைகள் குறையும்.

மதத் துவேசத்தோடு நடந்துகொள்கிற காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்து சிறையில் தள்ளினால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

--என்.ஏ.தைமிய்யா

நன்றி : http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=1912:2012-04-10-12-52-08&catid=82:indiia&Itemid=199