சனி, 14 ஏப்ரல், 2012

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறை

இந்தியாவில் காவல்துறையும், உளவுப்பிரிவும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து செயல்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் குண்டுவெடித்தாலும், விசாரணை துவங்குவதற்கு முன்பே முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தி ஊடகங்களின் மூலமாக செய்திகளைப் பரப்பும் நிலையை காவல்துறை அதிகாரவர்க்கம் செய்து வருகிறது.

இதன்மூலம் பொதுமக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற நிலையைக் காவல்துறையும், ஊடகங்களும் உருவாக்குகின்றன. பின்னர் எவ்வித ஆதாரமுமின்றி அப்பாவி முஸ்லிம்களைக் காவல்துறையினர் கைது செய்கின்றனர். 2011 டிசம்பர் 6ம் தேதியன்று அனைத்து பத்திரிக்கைகளும், ‘‘பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இரண்டு பேர் டெல்லியில் கைது, தற்கொலைப் படை பெண் தீவிரவாதியும் கைது என்றும், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம்’’ என்றும் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டன. முந்தைய நாட்களில் 24 மணிநேர செய்திச் சேனல்களும் பரபரப்பு செய்திகளாக இதனை ஒளிபரப்பின.

இதைப்பற்றி டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிசிபி) அசோக் சாந்த் பத்திரிக்கையாளரிடம் கூறுகையில், ‘பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இம்ரான் (40), சூஃபியா கன்வான் (38) ஆகியோர் நேபாளம் வழியாக டெல்லிக்கு வந்துள்ளனர். இவர்களை டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளோம். இவர்களின் சொந்த ஊர் பாகிஸ்தானிலுள்ள சரீபாபாத். இவர்களை ஐ.எஸ்.ஐ. நன்கு பயிற்சி கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். இவர்கள் இருவரும் கணவன், மனைவி போன்று போலியான திருமணப் பதிவு நகல் வைத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும் டி.சி.பி. அசோக் குறிப்பிட்டார். அதன்பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நான்கு மாதமாக சிறையில் அடைபட்டு பின்னர் 2012 மார்ச் 27ம் தேதி அன்று கடுமையான காயத்தோடு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இர்பான் மற்றும் சூஃபியா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை டெல்லி மாவட்ட தலைமை நீதிபதி விநோத் யாதவ் விசாரித்தார். அந்த விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட இர்பான், தனக்கு நேர்ந்த அவலத்தை நீதிபதியிடம் கதறினார். அவர் கூறியதாவது:

‘‘என்னுடைய சொந்த ஊர் இந்தியாவின் மாநிலமான குஜராத்தில் உள்ள அஹமதாபாத். என்னுடைய தந்தையும், தாயும் வயது முதிர்ந்த நிலையிலும் அஹமதாபாத்திலுள்ள டெல்லி நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். என்னுடைய தந்தை பெயர் யூசுப். என்னுடைய குடும்பம் கடுமையான பொருளாதார கஷ்டத்தில் இருந்த நிலையில் நான் 15 வயதிலேயே பாகிஸ்தானுக்குச் சென்று, துணி வியாபாரம் செய்து வந்தேன். அங்கேயே திருமணமும் முடித்துக் கொண்டேன். என்னுடைய மனைவிதான் சூஃபியா. நான் துணி வியாபாரம் மூலம் செல்வந்தர் ஆனேன். நான் பலமுறை வியாபார நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளேன். நான் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ளேன்.

உலகளாவிய அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது எனக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஐரோப்பாவிலுள்ள என்னுடைய நண்பர்கள் இந்தியாவிலுள்ள குஜராத் தான் துணிக்கு பிரபலமான இடம், அதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதனால் 2009 ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து 2010 அக்டோபர் 2ம் தேதி வரை இந்தியாவில் தான் விசா எடுத்து தங்கியிருந்தேன். இங்கு தங்கியிருந்த நாட்களில் இந்தியக் குடியுரிமை கோரி குஜராத் அரசு மூலமாக விண்ணப்பித்தேன். மும்பை தாக்குதலைத் தொடர்ந்து எனக்கு விசா மறுக்கப்பட்டது. இதனால் நான் நேபாளில் இருந்து துணி வியாபாரம் செய்ய திட்டமிட்டேன். அதனால், பாகிஸ்தானிலிருந்து நேபாளம் சென்றேன்.

நேபாளுக்கு வந்தவுடன் குஜராத்தில் உள்ள எனது வீட்டுக்கு தொலைபேசியில் பேசினேன். அந்த தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு, நான் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் என குற்றஞ்சாட்டி நவம்பர் மாதம் நேபாளத்தில் இருந்து என்னையும் எனது மனைவியையும் டெல்லிக்கு அழைத்து வந்தார்கள். பின்னர் ஒரு மாதம் கழித்து டிசம்பர் 5ம் தேதி நரேந்திர மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதி என்று குற்றம்சாட்டி கைது செய்தனர். எங்களை சட்டவிரோத காவலில் வைத்திருந்த நேரத்தில், கடுமையான சித்ரவதை செய்தார்கள்’’ - என்று கண்ணீர்மல்க இம்ரான் கூறினார். நாங்கள் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தோம். இன்றைய நிலையோ சமைக்க மண்ணெண்ணெய் கூட வாங்க முடியாமல் கஷ்டத்தில் உள்ளோம் என இர்பானின் தந்தை யூசுப் நீதிமன்றத்தில் கண்ணீர் வடித்தார்.

காவல்துறையின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு பொங்கியெழுந்த நீதிபதி வினோத் யாதவ், சொந்த நாட்டில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருப்பவரையே பயங்க ரவாதிகளாக சித்தரிக்கும் காவல்துறையின் செயலைக் கடுமையாகக் கண்டித்ததோடு, நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு செயல்படாது என்று குறிப்பிட்டார்.

இம்ரானின் வழக்கை எடுத்து நடத்த மனிதநேயத்தின் அடிப்படையில் வாதாட வழக்கறிஞர்கள் தயாரா? என வழக்கறிஞர்களைப் பார்த்து கேட்டார். உடனே, வழக்கறிஞர் சுனில் திவாரி இம்ரானுக்காக வாதாட தன்னார்வத்தோடு முன்வந்தார். பின்னர், இந்தியக் குடியுரிமை ஆவணங்களை சமர்ப்பிக்க, இம்ரானுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்மூலம் காவல்துறையின் முஸ்லிம் விரோதப் போக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். இதுபோன்ற காவல்துறை ஓநாய்களின் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறையின் கொடுமைகள் தொடர்கதையாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி குண்டுகளுக்கு பயந்து டெல்லிக்கு வந்து வேலையோ, வியாபாரமோ செய்துவரும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து பொய் வழக்குப் போட்டு, சித்ரவதை செய்து காவல்துறையினர் கைது செய்து நிரந்தரமாக சிறைச்சாலைகளில் தள்ளுகின்றனர்.

இப்போது நடைபெற்று வருகிற ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் செயலாளர் கூறுகையில், இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராகப் பல்வேறு கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளைக் களைய எந்தவொரு முன்முயற்சியையும் காங்கிரஸ் அரசு எடுக்க முன்வருவதில்லை. மத்திய அரசிலும், கேரள மாநிலத்திலும் காங்கிரஸோடு கூட்டணி வைத்திருக்கும் கேரளா முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி கேரள முஸ்லிம் லீக்கின் மத்திய அமைச்சர் இ.அஹமது, சமுதாய உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் ஒருமுறை கூட பேசியதாக தகவல் இல்லை.

முஸ்லிம் லீக்கின் தலைவராக இருந்த பனாத்வாலா சாஹிப் அவர்கள் பலமுறை சமுதாய உரிமைக்காக பாராளுமன்றத்தில் கர்ஜித்துள்ளார். இப்படிப்பட்ட கண்ணியம் மிகுந்த தலைவரான பனாத்வாலா சாஹிப் அவர்க ளையே பாராளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுத்தவர்தான் இன்றைய தலைவர் இ.அஹமது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அநீதியை பாரபட்சமின்றி மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முஸ்லிம் களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பாதுகாப்புத் துறைகளின் அனைத்து உயர்மட்ட பொறுப்புகளில் முஸ்லிம்களை இடம்பெறச் செய்தால் மட்டுமே ஒரு சமூகத்திற்கு எதிரான கொடுமைகள் குறையும்.

மதத் துவேசத்தோடு நடந்துகொள்கிற காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்து சிறையில் தள்ளினால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

--என்.ஏ.தைமிய்யா

நன்றி : http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=1912:2012-04-10-12-52-08&catid=82:indiia&Itemid=199

கருத்துகள் இல்லை: