புதுடெல்லி:போலி
ஆயுத ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய
வழக்கில் பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணன் குற்றவாளி
என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் சி.பி.ஐ சிறப்பு
நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவிக்கும். குற்றவாளியான பங்காரு நீதிமன்ற
காவலில் வைக்கப்பட்டார். ஐந்து வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் வகையிலான
பிரிவுகளை நீதிபதி கன்வல்ஜித்சிங் அரோரா பங்காருவின் மீது சுமத்தியுள்ளார்.
ராணுவத்திற்கு தெர்மல் இமேஜர்
வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பெறுவது என கூறி வெஸ்ட் எண்ட் இண்டர்நேசனல் என்ற
போலி நிறுவனத்தின் பெயரில் இடைத்தரகர்கள் வேடமிட்டு வந்த டெஹல்கா
புலனாய்வு பத்திரிகை நிருபர்களிடமிருந்து பங்காரு லட்சுமணன் ஒரு லட்சம்
ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில்தான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் தங்களுக்கு கிடைப்பதற்காக
பாதுகாப்பு அமைச்சகத்திடம் சிபாரிசு செய்யவேண்டும் என கோரும் ரகசிய கேமரா
காட்சிகளை 2001 மார்ச் மாதம் 13-ஆம் தேதி டெஹல்கா வெளியிட்டது.
2001 ஜனவரி மாதம் 1-ஆம் தேதி பங்காரு
லட்சுமணன் தனது அலுவலகத்தில் வைத்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சப்பணத்தை
வாங்கினார். இத்தொகை மேசையின் மீது வைக்கும் காட்சியும் ரகசிய கேமராவில்
பதிவானது. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து, கட்சி
நிதிக்கு அளிக்கப்பட்ட பணம் என்று பங்காரு விளக்கம் அளித்தார்.
2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.கவின்
தேசிய தலைவராக பொறுப்பேற்ற பங்காருலட்சுமணன் இச்சம்பவம் ஏற்படுத்திய
பரபரப்பால் எட்டு மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பங்காரு லட்சுமணனுக்கு ஒரு லட்சம்
ரூபாயும், அவரை காண்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திய அவரது உதவியாளர்களான உமா
மகேஷ்வரி மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோருக்கு பத்தாயிரம் ரூபாயும், தங்க
செயினும் லஞ்சம் வழங்கப்பட்டதாக சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. பின்னர்
அப்ரூவர் ஆன சத்தியமூர்த்தியின் வாக்குமூலம் பங்காரு வழக்கில் முக்கிய
திருப்பம் ஆனது.
ஊழல் ஒழிப்பு சட்டத்தின்படி பதிவுச்செய்யப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2000 டிசம்பர் 23-ஆம் தேதிக்கும் 2001
ஜனவரி ஏழாம் தேதிக்கும் இடையில் எட்டு தடவை டெஹல்கா குழு பங்காருவை
சந்தித்ததாக சி.பி.ஐ கண்டுபிடித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பங்காரு
லட்சுமணன் தேசிய அரசியலில் இருந்தே காணாமல் போனார். அன்று பாதுகாப்பு
அமைச்சராக பதவி வகித்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் உதவியாளர் ஜெயா ஜெட்லியை
சந்தித்தும் டெஹல்கா குழு லஞ்சம் அளிப்பதாக வாக்குறுதியளித்தது.
இதுத்தொடர்பான வீடியா காட்சிகள் வெளியானதை தொடர்ந்து ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்
தனது அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக