ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

விவசாயக் கடனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ



அ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நடத்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே, புதிதாக உருவான ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பளித்த என் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வெற்றிக்கு அயராது உழைத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியினருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் என் வெற்றிக்கு அயராது உழைத்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் முதலிய கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2011-12 ஆம் ஆண்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளதை, மனிதநேய மக்கள் கட்சி மனதார வரவேற்கின்றது.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, கடந்த திமுக ஆட்சியிலே, ரமலான் மாதத்திலே பள்ளிவாசலில் கஞ்சி காய்ச்சுவதற்கு தேவையான அரிசி, ரமலான் நோன்பு ஆரம்பித்த 10 நாட்களுக்குப் பிறகுகூடப் கிடைத்துக் கொண்டிருந்தது. நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய நல்லாட்சியிலே நோன்பு ஆரம்பிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அரிசி வழங்கவேண்டுமென்ற ஆணையைப் பிறப்பித்திருப்பதற்கு (மேசையைத் தட்டும் ஒலி) மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று, நேற்றையதினம் நடைபெற்ற தொழில் துறை மானியக் கோரிக்கையிலே, ஆம்பூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் உள்ள இயந்திரங்களைப் பராமரிப்பதற்காக 48 இலட்சம் வழங்கியதற்கு என் சார்பாகவும், தொகுதி மக்களின் சார்பாகவும், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவிலே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்திலே கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கோமா ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே அந்த கோமா ஆட்சியை மக்கள் தூக்கியெறிந்துவிட்டு, இன்றைக்கு ஒரு நல்லாட்சியைத் தமிழகத்தில் தந்திருக்கின்றார்கள், சிறப்பான ஆட்சியை நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய நல்ல ஆட்சியிலே இந்தக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மிகச் சிறப்பாகச் செயலபடுகிறது என்பதை நான் வரவேற்கிறேன். அவற்றில் விவசாயிகளுக்குப் பயிர்க் கடன், தொடங்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும், முதலீட்டுக் கடன் 300 கோடி ரூபாய் அளவிற்கும் வழங்கத் திட்டமிட்டுள்ளதை மனிதநேய மக்கள் சார்பாக வரவேற்கிறேன். விவசாயிகளுக்குக் கடன் அட்டை வழங்கும் திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தானிய ஈட்டுக் கடனாக 100 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பூ வணிகம், காய்கறிகள், பழங்கள், பெட்டிக் கடை நடத்துதல் போன்ற தொழில்களைச் செய்ய சிறு வணிகர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க இத்திட்டத்தில் 125 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை மனமார வரவேற்கிறேன்.

சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் திட்டம், பணிபுரியும் மகளிர் கடன் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கது. கொள்முதலை அதிகரிக்கும் நோக்கத்துடன் காவிரிப் பாசனப் பகுதியல்லாத இடங்களில் உள்ள விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்க உதவும் நோக்கத்துடன் காஞ்சிபுரம், வேலூர், மதுரை, இராமநாதபுரம்,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதை வரவேற்கிறேன். விவசாயிகளுக்குத் தரமான விதை இன்றியமையாததைப்போல், இடுபொருளும் முக்கியமானதாகும். நெல்லை தவிர, பருப்புவகைகள் எண்ணெய் வித்துக்கள், தானிய வகைகள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் தரமான விதைகள் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விற்க 41 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன்.

அதேசமயம், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள (Joint registrar, Deputy registrar Co-operative register) போன்ற பதவிகளை நிரப்பி, கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாகச் செயல்பட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிலவள வங்கிகள் நகை; கடன்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவ்வங்கிகளில் விவசாயத்திற்குக் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் இருக்கும் விவசாயிகள், கிராமப்புறங்களில் இருக்கும் இவ்வங்கிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த முன்வர வேண்டுமென்றால், அவர்களுக்கு விவசாயக் கடன் வழங்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன்கள் பெறுவதற்குப் பதிலாக, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு விவசாயிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும், நிலவள வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் இலாபத்தில் இயங்க, அதிக அளவில் விவசாயக் கடன்கள் கொடுக்கப்பட வேண்டும்.

பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிலவள வங்கிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன்.