வியாழன், 25 ஆகஸ்ட், 2011

காவேரிபாக்கம்: 400 ஆண்டுகால பள்ளிவாசல் தமுமுகவால் மீட்பு

தமிழகத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மாவட்டங்களில் முதல் ஐந்தில் இடம் பெறுகிறது வேலூர் மாவட்டம். இப்பகுதி முகலாய மன்னர் ஓளரங்கசீபின் காலத்திலிருந்து ஆற்காடு நவாப் காலம்வரை முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தான், தென்னக வேங்கை மருதநாயகம் உள்ளிட்டவர்கள் களமாடிய பகுதியும் கூட.


இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இப்பகுதி முஸ்லிம்களிடம் ஏற்பட்ட அரசியல் சோர்வு மற்றும் சமூக அக்கறையின்மையின் காரணமாக பல நூறு மில்லியின் ரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்துக்கள் பாதுகாப்பை இழந்து பறிபோனது. பல மதரஸாக்கள் மூடப்பட்டு பின்னர் தானாகவே அழிந்தது. அதே போல் ஏராளமான பள்ளிவாசல்களும் செயல்பாடுகளை இழந்து பின்னர் இடிந்து அழிந்து போனது.


பல பள்ளிவாசல்கள் குடோன்களாகவும், பாழடைந்த கட்டிடங்களாகவும் பயன்பாட்டுக்கு ஒத்துவராத இடிபாடு களாகவும் மாறி ஆடு, மாடுகளின் தொழுவங்களாக இருந்து வருகிறது.


இந்நிலை வேலூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் அதிகளவிலும் திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் குறைந்தளவிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் வேலூர்(கிழக்கு) மாவட்ட தமுமுக&வினர் தங்கள் மாவட்டத்தில் எங்கெல்லாம் இத்தகைய இடங்கள் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து வருகிறார்கள்.


அந்த வகையில் ராணிப்பேட்டையில் ஒரு பள்ளிவாசலையும், ஆற்காட்டில் இரண்டு பள்ளிவாசல்களையும் மீட்டெடுத்து அதை புனரமைத்து, ஜமாத் ஒன்றையும் உருவாக்கி பொதுமக்களின் வழிபாட்டுக்கு அர்ப்பணித்துள்ளனர். அதனைச் சுற்றிலும் உள்ள கபரஸ்தான் இடங்களையும் கைப்பற்றி ஜமாத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். வக்பு ஆவணங்களில் உள்ளபடி பல ஏக்கர் சொத்துக்கள் இப்போது இல்லை. அவையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களால் விற்கப்பட்டுவிட்டதால், எஞ்சிய சில ஏக்கர்களை மட்டுமே தமுமுகவினர் மீட்டுள்ளனர்.


இந்நிலையில் தான் காவேரிப்பாக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று நான்காவதாக ஒரு பள்ளிவாசலை தமுமுகவினர் மீட்டுள்ளனர்.


ஆற்காடு நவாப் தன் ஆட்சிக்காலத்தில் 50 முதல் 100 பேர் தொழக்கூடிய அளவில் 365 பள்ளிவாசல்களை கட்டினாராம். அதனைச் சுற்றிலும் 10 முதல் 100 ஏக்கர்வரை நிலங்களையும் தானம் செய்துள்ளார். அங்கு தினமும் அன்னதானத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.


இதன் நோக்கம் என்னவெனில், தன் ஆட்சிப்பகுதிக்கு வருபவர்கள் தினம் ஒரு பள்ளிவாசலில் தங்கினாலும் ஒரு வருடம் முழுவதும் சிரமமின்றி சுற்றி வர வேண்டும் என்பதுதான். அப்படி கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தான் இன்று 90 சதவீதம் காணாமல் போயிருக்கிறது அல்லது இடிந்து பாழ்பட்டு கிடக்கிறது.


காவேரிப்பாக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் ராபர்ட் கிளைவின் படைகளுக்கும், முஸ்லிம் படைகளுக்கும் மோதல் நடந்தபோது இவ்வூர் முஸ்லிம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளனர். தொழுவதற்கு ஆள் இல்லை. பிறகு இப்பள்ளி பயனற்று போய் அது தொடர்ந்த நிலையில்தான், அதை மீட்க பிற்கால முஸ்லிம்கள் ஆர்வம் காட்டவில்லை.


தமுமுக அவ்வூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. வேலூர் கோட்டைப் பள்ளிவாசல் மீட்பு நடவடிக்கை தொடங்கிய நேரத்தில், இவ்வூர் பள்ளியையும் மீட்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. இப்பள்ளியின் நிலங்கள் அப்பகுதியின் பல்வேறு சமூகங்களால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது. பள்ளியின் மேலே பெரிய மரங்கள் முளைத்திருந்தது.


இதனைச் சுற்றியுள்ள இந்துக்களிடம் தமுமுகவினர் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். முஸ்லிம்களின் நியாயத்தைப் புரிந்து கொண்ட அம்மக்கள், பள்ளிவாசலை ஒப்படைக்க சம்மதித்தனர். அதனடிப்படையில் கடந்த 15 நாட்களாக தமுமுகவினர் பள்ளியை சுத்தப்படுத்தும் பணியைச் செய்தனர்.


கடந்த 21.08.2011 ஞாயிறு அன்று தமுமுக துணைப்பொதுச் செயலாளர் ஜெ.எஸ்.ரிபாயி தலைமையில் 800க்கும் மேற்பட்டோர் அப்பள்ளிக்கு வருகை தந்தனர். மாலை 5 மணிக்கு அழகிய குரலில் ஒரு சிறுவன் பாங்கொலி எழுப்ப, எல்லோரும் உணர்ச்சிமயமாகினர். அவ்வூர் மக்கள் கண்ணீர் மல்க கட்டிப்பிடித்துக் கொண்டனர்.


5:15 மணிக்கு மமக மாநில அமைப்பு செயலாளர் நாசர் உமரீ தலைமையில் அஸர் தொழுகை நடைபெற்றது. பள்ளியில் அதிகபட்சம் 80பேர் மட்டுமே தொழ முடியும். அங்குள்ள இந்துக்கள் பக்கத்திலிருந்த திறந்தவெளி மனையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தனர். எனவே தொழுகை சிறப்பாக நடைபெற்றது.


அதன் பிறகு மமக துணைப் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, ஆம்பூர் மமக சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, வேலூர் மாவட்ட பொறுப்பாளரான மாநில துணைச்செயலாளர் பீ.எல்.எம்.யாஸீன், முன்னாள் மாநில துணைச்செயலாளர் அவுலியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


6:35 மணியளவில் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது, அப்போது கூட்டம் மேலும் திரண்டது. நட்பையும், நன்றியையும் வெளிக்காட்டும் வகையில் அப்பகு தியில் குடியிருக்கும் அனைத்து இந்துக்களுக்கும் நோன்பு கஞ்சி, சமோசா, குஸ்கா, வாழைப்பழம் ஆகியவை வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சுற்றிலும் நின்று அனைத்து நிகழ்வுகளையும் அமைதியாகப் பார்த்துக் கொண் டிருந்தனர்.


இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹமது, மாணவரணி நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன், அமீன், மாவட்ட தமுமுக செயலாளர் குஸ்ரு கவுஸ் மைதீன், மமக மாவட்ட செயலாளர் கே.எம்.சதக்கத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் ஜாகிர் உசேன், சத்தார் உசேனி, மஸ்தான், செய்யது கிதர் அஹமது உள்பட அனைத்து நிர்வாகிகளும் மாவட்டம் முழு வதிலிருந்தும் தமுமுகவினர் பங்கேற்றனர்.


நல்ல அணுகுமுறைகளும், அர்ப்பணிப்புடன் கூடிய திட்டமிட்ட உழைப்பும் இருந்தால் எந்த சவாலான காரியத்தையும் செயல்படுத்த முடியும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு உதாரணமாகும். இதுபோல் பாழடைந்து கிடக்கும் மேலும் பல பள்ளிவாசல்களை மீட்போம் என்று வேலூர் தமுமுக சூளுரைத்துள்ளது.