கடந்த 25.08.2011 சட்டபேரவையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எழுப்பிய வினா
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் நகரத்திற்குப் பாதாளச் சாக்கடைத் திட்டம், சென்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே, 2005ல் அந்த திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியிலே பணிகள் சரிவர செய்யாத நிலையிலே, இப்போது மழை பெய்யக்கூடிய நேரத்திலே இராமநாதபுரம் போவதற்கே எனக்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் நகரத்தில் பல்வேறு இடங்களிலே வெள்ளக்காடாக ஆகக்கூடிய ஒரு சூழல் இந்த பாதாளச் சாக்கடைத் திட்டம் போர்க்கால அடிப்படையிலே இராமநாதபுரம் நகரத்திலே விரைந்து முடித்தால் இந்த நிலை சீராகும் அதற்கு அரசு ஆவன செய்யுமா என்று உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.பி.முனுசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் தொகுதியினுடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், ஏற்கெனவே முன்தைய ஆட்சியிலே துவக்கப்பட்ட அந்த பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் கூட முடிவு பெறவில்லை என்று சொன்னார்கள். அதோடுமட்டுமல்லாமல், அங்கு செல்வதற்கே பயமாக இருக்கிறது என்ற ஒரு கருத்தையும் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னார்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் எல்லா இடத்திற்கும், எந்த நேரத்திலும் தைரியமாகச் செல்லாம், அதற்கேற்றத் திட்டங்களைத்தான் முதலமைச்சர் அவர்கள் கொண்டுவரயிருக்கிறார்கள்(மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய உணர்வுகளுக்கு ஏற்றவாறு விரைவாக இராமநாதபுரம் நகரத்தினுடைய பாதாள சாக்கடைத் திட்டம் முடிக்கப்படும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.