சனி, 31 ஜனவரி, 2009

மாணவர்களுக்கு ரூ. 500 விலையில் கணினி!


புதுதில்லி: ரூ. 500 விலையில் மாணவர்களின் கல்விக்கான கணினிகள் தயாராகி வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் இவை விற்பனைக்கு வரும்.

இந்த கணினிகள் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தங்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து இதை உருவாக்கியுள்ளன. இது குறித்து மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் உயர்கல்வித் துறை செயலாளர் ஆர்.பி. அகர்வால் தெரிவித்ததாவது:

தகவல் சேமிக்கும் திறனை அதிகரித்துக்கொள்ளும் வசதி, பிற கணினிகளுடன் இணைக்கும் வசதி, வை-ஃபீ வசதி ஆகியவை இந்த சிறிய கணினியில் இருக்கும். மேலும், அனைத்து பாடங்கள் தொடர்பான மின்னணுத் தகவல்களையும் அரசு இலவசமாக வழங்கும். 2 வோல்ட் மின்சாரத்தில் இந்தக் கணினி இயங்கும்.

மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் இந்த வகை கணினியை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கலாம். மாணவர்கள் மேலும் மின்னணுத் தகவல்களைப் பெற்று அவற்றை தங்கள் கணினியில் பதிவு செய்துகொள்ளலாம். கல்வி நிறுவனங்களுக்கு அரசு இவற்றை சலுகை விலையில் வழங்கும்.

இவ்வகை கணினிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய பல்வேறு நிறுவனங்களுடன் அரசு பேச்சு நடத்தி வருகிறது.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் தேசிய கல்வி (ஐசிடி) எனும் மத்திய அரசு திட்டம் மூலம் இந்தக் கணினி தயாரிக்கப்படுகிறது. இப்புதிய ஐசிடி திட்டம் மூலம், நாட்டில் உள்ள 100 மத்திய கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 20 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் அகலக்கற்றை அலைவரிசை இன்டர்நெட் மூலம் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஐஐடி பேராசிரியர்கள் அளிக்கும் விரிவுரையை மாணவர்கள் ஆன்-லைன் மூலம் பெற முடியும். மேலும் தங்களின் சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ள முடியும்.

இந்த ஐசிடி திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய கமிட்டி ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.4,612 கோடி செலவாகும். இதில் 40 சதவீதத் தொகை மின்னணுத் தகவல்களைத் தயாரிக்க செலவிடப்படும். இத் தகவல்கள் கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 420 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் துறைகள் பயன்பெறும்.

எஜுசாட் செயற்கைக்கோள் மூலம் 100 கல்வி அலைவரிசைகளைத் தொடங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குக்கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வழியேற்படும் என்றார் அகர்வால்.

கருத்துகள் இல்லை: