செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

வியாபம் முறைகேடு பாரதீய ஜனதா முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் தொடர்பு அமபலம் முக்கிய ஆதாரம் சிக்கியது


போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொறியியல், மருத்து வம் மற்றும் நிர்வாக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த கடந்த 1982-ம் ஆண்டு ‘‘வியாபம்’’ எனும் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டது. பிறகு இந்த தேர்வு வாரியம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என பல்வேறு துறைகளுக்கும் பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்பாகவும் மாறியது. வியாபம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக கடந்த 2007-ம் ஆண்டு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அப்போது மத்திய பிரதேச மாநில கல்வி மந்திரியாக இருந்த சிவராஜ் சிங் சவுகான் இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு வியாபம் முறைகேடு பூதாகரமாக வெடித்தது. அப்போது தான் மத்தியப் பிரதேச அரசு தேர்வு வாரியத் தில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடுகள் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமானது. இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநில ஐகோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக்குழு 2007-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை மத்திய பிரதேசத்தில் நடந்த 167 தேர்வுகளை ஆய்வு செய்தது. போலீஸ் விசாரணையில் மத்தியப்பிரதேசத்தில் கவர்னரில் தொடங்கி கடை நிலை ஊழியர் வரை பல ஆயிரம் பேருக்கு இந்த முறை கேடுகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பா.ஜ.க. காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் பணப்பரிமாற்றம் செய்து தேர்வு வாரிய பணிகளில் விளையாடி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மத்திய பிரதேச கவர்னர் ராம் நரேஷ் யாதவும் பணம் பெற்றுக் கொண்டு, சிபாரிசு கடிதம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இதுவரை சுமார் 2 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். மேலும் 700 பேரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த முறைகேடு பற்றிய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைவது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருண் சர்மா, முன்னாள் முதல்வர் டாக்டர் டி.கே.சகல்லே, டி.வி நிருபர் அக்சய் சிங், போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பணிக்கு தேர்வாகி பயிற்சி பெற்று வந்த அனாமிகா சிகர்வார் ஆகிய 4 பேர் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந் தது வியாபம் முறைகேடு விவகாரத்தை கொந்தளிக்க செய்துள்ளது. இதுவரை வியாபம் முறைகேட்டில் தொடர்புடைய 48 பேர் மரணம் அடைந்திருப்பது மர்மத்தை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மற்றும் ஆம் ஆத்மி பிரமுகர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் வியாபம் முறைகேடை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத் தரவைத் தொடர்ந்து இந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்த 40 அதிகாரிகள் கொண்ட குழுவை சி.பி.ஐ. அமைத்துள்ளது. சி.பி.ஐ. இணை இயக்குனர் ஒருவர் தலைமையில் இந்த 40 அதி காரிகள் குழு வியாபம் ஊழல் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அரசு தேர்வு வாரிய முறை கேட்டில் (வியாபம்) மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர் குடும்பத்தினரும் இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. இந்த குற்றச்சாட்டை முதல்-மந்திரி சிவ்ராஜ் சவு கான் மறுத்து வந்தார். இந்த நிலையில் முதல்- மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் மீது ஆதாரப்பூர்வமான வியா பம் ஊழல் குற்றச்சாட்டு ஒன்று பரபரப்பாக வெளியாகி உள் ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள மதன்லால் சதுர்வேதி தேசிய பல்கலைக்கழக சிலரை பணி நியமனத்துக்கு அவர் பரிந்துரை செய்து இருப்பதாக தகவல் வெளி யாகி உள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் சில தனி நபர்களை மூத்த பேராசிரியர்களாக பணி நியமனம் செய்யும்படி முதல்-மந்திரி சவுகான் தன் கைப்பட கடிதம் எழுதி கொடுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்புத் துறை செயலாளர் மூலம் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதம் கொடுத்து இந்த பணி நியமனத்தை முதல்-மந்திரி சவுகான் செய்திருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.சவுகான் இதற்காக தன் கைப்பட எழுதிய கடிதத்தை தகவல் கேட்பு உரிமை சட்டத்தை பயன்படுத்தி சிலர் பெற்றுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட் டுள்ளன. முதல்-மந்திரி சவுகான் பரிந்துரை செய்து கடிதம் கொடுத்த ஒரே நாளில் அன்றைய தினமே துணை வேந்தர் அந்த நபர்களுக்கு பதவியில் நியமித்து உத்தர விட்டுள்ளார். இந்த தகவல்களை ஆர்.டி.ஐ.யை பயன்படுத்தி சமூக ஆர்வலர் புர்னேந்து சுக்லா என்பவர் கண்டு பிடித்து வெளியில் கொண்டு வந்துள்ளார். மூத்த பேரா சிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதில் முதல்- மந்திரிக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட்டி ருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாபம் ஊழல் தொடர் பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் நிலையில் முதல்-மந்திரி மீதான புதிய குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பரபரப்பை உரு வாக்கியுள்ளது.
நன்றி :
http://www.dailythanthi.com/News/India/2015/08/11105117/Vyapam-scam-MP-CM.vpf

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன?



தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமன் கடந்த 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அதே தினத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் நல்லடக்கம் நடைபெற்றது.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கலாமின் நல்லடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதைக் காண ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் யாகூப் மேமன் உடல் நல்லடக்கத்தின்போது ஊடகங் களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதற்கு ஊடகங்களும் கட்டுப் பட்டு செயல்பட்டன. இரு காரணங் களுக்காக ஊடகங்களும் யாகூப் மேமன் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டன.
முக்கியமாக அந்த இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொள்ளாமல் கட்டுப்படுத்தி வன்முறை ஏற்படாமல் தடுப்பதும் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவரின் மீது தேவையற்ற அனுதாபம் ஏற்படுவதை தடுப்பதுமே ஆகும். மும்பையில் உள்ள சில டி.வி. சேனல்கள் இதுபோன்ற மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துவிட்டன. எனினும் அடுத்த நாளில் நாளிதழ்களில் வந்த புகைப்படங்கள், செய்திகள் மூலம் யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் தெரியவந்தது. யாகூப் மேமன் நமாஸில் 8 ஆயிரம் முஸ்லிம்கள் பங்கேற்றதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இவ்வளவு பேர் ஏன் வந்தார்கள் என்ற கேள்வி இப்போது முக்கியமாக எழுகிறது.
இதுபற்றி பாஜக மூத்த தலைவரும் திரிபுரா ஆளுநருமான தத்தகதா ராய் ட்விட்டரில் ஒரு கருத்து தெரித்தார். அதில் யாகூப் மேமனின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தவிர மற்றவர்களில் பெரும்பாலானோர் தீவிரவாதிகளாக இருப்பார்கள். எனவே இதில் உளவுத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவ்வளவு பேர் யாகூப் இறுதிச் சடங்கில் குவிந்ததற்கு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் பரவிய தகவலும் முக்கிய காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவை தவிர யாகூப் தூக்கி லிடப்பட்டதை தொடர்புபடுத்தி வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய தகவல்கள் பரவியதாகவும், அது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. யாகூப் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் எவ்வித கோஷங்களும் எழுப்பக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்தனர். அதனால் பிரச்சினை ஏதும் இன்றி இறுதிச் சடங்கு முடிந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்படி இருக்கும்போது ஏன் இவ்வளவு போலீஸ் கெடுபிடி என்பது அடுத்து எழும் கேள்வி.
1993-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளியான யாகூப் இப்போது தூக்கிலிடப்பட்டுள்ளார். அதே ஆண்டு ஜனவரியில் மும்பையில் நடைபெற்ற கலவரத்தில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும், 200-க் கும் மேற்பட்ட இந்துக்களும் உயிரிழந்துள்ளனர். அதற்கு ஒரு மாதம் முன்புதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
எனவே மும்பை தொடர் குண்டு வெடிப்பு என்பது வேறு பல்வேறு தொடர் சம்பவங்களுடன் தொடர்புள்ளது. இந்த சம்பவங் களில் இறந்தவர்கள் ஒருபுறம் என்றால் தொழிலை இழந்தவர்கள், காயமடைந்தவர்கள், பலாத் காரத்துக்கு உள்ளான பெண்கள், வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள், வாழ் வாதாரத்தை இழந்தவர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இது தான் குண்டுவெடிப்புகளுக்கு பின்னணி.
யாகூப் தூக்குக்கு முன்பாகவும் பல சர்ச்சைகள் எழுந்தன. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவரை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டுமென்று டி.வி. சேனல்களில் பல விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே, இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவர்களில் 94 சதவீதம் பேர் முஸ்லிம் மற்றும் தலித்துகள் என்று தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரத்தை தந்தது ஒரு பத்திரிகை. இது தாம் பின்பற்றும் மதம் காரணமாகவே தாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என முஸ்லிம்கள் மனதில் உள்ள கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
பாஜக சார்ந்த மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியோர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர் என்றும் ஒருசாரார் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் தீவிரவாதம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகளுக்கு வாசகர்கள்தரும் விமர்சனத்தை படிக்கும்போது. பல இடங்களில் முஸ்லிம்கள் என்றால் நம்பத்தக்கவர்கள் அல்ல என்ற கருத்தே உள்ளது. இதனால் முஸ்லிம்களுக்கு வேலை தேடுவதில் இருந்து வீடு கிடைப்பது வரை பிரச்சினை ஏற்படுகிறது.இதுதான் இந்தியாவில் முஸ்லிம்களாக உள்ளவர்களின் உண்மை நிலை.
யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் கூடியவர்கள் அனைவரும் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்பதாலோ அல்லது, வன்முறையில் ஈடுபடவோ வரவில்லை. தாங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அனுதாபம் தெரிவிக்க வந்தவர்கள்.

thaks : 
http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article7489835.ece?homepage=true

வியாழன், 30 ஜூலை, 2015

டைகர்கள் உலகில் யாகூப்கள் பலிகடாக்கள்




யாகூப் மேமன் தனது கர்ப்பிணி மனைவி ராஹினைக் கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 1994-ல் சரணடைந்தார். ராஹினுக்கு துபாயில் குழந்தை பிறந்தது. தானும் குழந்தையும் யாகூபுடன் மறுபடியும் சேர்ந்து புதுடெல்லியில் புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.


“நான் மனசாட்சி உள்ள மனிதன். டைகரின் தவறான செயல்களிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள விரும்பினேன்” என்றார் யாகூப் மேமன். அது 1998-ல் நடந்தது. அப்போது நான் மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ‘பிளாக் ஃபிரைடே’ என்ற எனது புத்தகத்துக்காக ஆய்வு மேற்கொண்டிருந்தேன். யாகூபைச் சந்தித்தபோது, தனது கதையைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், விசாரணை முடிவதற்கு முன் அந்தக் கதையை நான் எழுதப்போய், அதனால் இந்த வழக்குக்கு ஏதாவது குந்தகம் ஏற்படுமோ என்று அவர் பயந்தார். அவ்வப்போது தெளிவற்ற சில தகவல்களை உதிர்ப்பார். அவற்றை நான் பின்தொடர்ந்து சென்றால், மிகவும் முக்கியமான தகவல்களாக அவை இருக்கும்.
புத்திசாலித்தனமான, மனசாட்சியுள்ள மனிதர் யாகூப். சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்டாக இருந்திருக்கிறார். இந்து மதத்தவரான தனது பங்குதாரர் சேத்தன் மேத்தாவுடன் இணைந்து வெற்றிகரமான நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். சிபிஐ-க்கு யாகூப் அளித்த வாக்குமூலத்தின்படி, மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றி அவர் முதன்முதலில் கேள்விப்பட்டது, துபாயில் இருந்தபோது 1993 மார்ச் 13 அன்று மாலை 4 மணிக்கு பிபிசி செய்திகள் மூலமாகத்தான்.
பாகிஸ்தானில் சிறைவைப்பு
துபாயில் இருந்த ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் குண்டுவெடிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார்கள். டைகர் மேமன் மட்டும் விதிவிலக்கு. அவர் அந்தக் குண்டுவெடிப்புகளைக் கொண்டாட விரும்பினார். துபாய் அரசு அந்தக் குடும்பத்தினரை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. அங்கே அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை டைகர் செய்திருந்தார். கராச்சியில் வெவ்வேறு மாளிகைகள், ராணுவக் குடியிருப்புகள் என்று அவர்கள் மாற்றப்பட்டுக்கொண்டேயிருந்தார்கள். எனினும், டைகர் மேமனையும் அயூப் மேமனையும் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பத்தினருக்கும் இப்படிச் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்துத் துளியும் விருப்பமில்லை. அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.
யாகூப் ஒன்றும் துணிச்சல் மிக்கவர் அல்ல. ஆனால், ஒரு நொடியில் ஏற்படும் துணிவுதான், துணிச்சலான நபரையும் கோழையையும் வேறுபடுத்துகிறது. தனது கொடிய சகோதரனையும் ஐஎஸ்ஐயையும் மீறிக்கொண்டு, எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்தியா திரும்புவதென்ற முடிவை அவர் தீர்க்கமாக எடுத்தார். மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎஸ்ஐயின் முக்கியப் புள்ளியான தௌஃபிக் ஜாலியாவாலாவுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தார். ரகசிய இடங்களை வீடியோ எடுத்துக்கொண்டார்; புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்; உரையாடல்களையெல்லாம் பதிவு செய்துகொண்டார். பிறகு, போலி பாஸ்போர்ட்டுகள், பாகிஸ்தான் அரசு வழங்கியிருந்த வெவ்வேறு அடையாள அட்டைகள் போன்ற ஆவண ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டார்.
தனது பயணப்பெட்டி முழுவதும் ஆதாரங்கள் நிரம்பியதும், காராச்சி-காத்மாண்டு-துபாய்-காத்மாண்டு-கராச்சி என்று சுற்றுவழி பயணச்சீட்டை லூஃப்தான்ஸா விமானத்தில் எடுத்துக்கொண்டார். அவர் திரும்பிவருவார் என்ற உறுதியில் ஐஎஸ்ஐ ஆட்கள் அவரது பயணத்துக்கு முட்டுக்கட்டை போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி ஒரு ஏற்பாடு. இந்தியாவுக்கு நேரடியாகப் போக முடியாதென்பது யாகூபுக்குத் தெரியும். பாகிஸ்தான் அதிகாரிகளும் துபாய் அதிகாரிகளும் கூட்டாளிகள் என்பதால், துபாயில் சரணடைவது என்பது மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும். நேபாளம் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு என்று அவர் நினைத்ததால் காத்மாண்டுவைத் தேர்ந்தெடுத்தார். நம்பகத்தன்மை கொண்ட ஒரு தவறை அவர் வேண்டுமென்றே செய்ய நினைத்தார்.
பாதுகாப்புப் பரிசோதனையின்போது யாகூப் தனது பெட்டியைத் திறப்பதற்காக வேண்டுமென்றே தடுமாறியபோது, நிறைய பாஸ்போர்ட்டுகள் பெட்டியிலிருந்து சிதறிக் கீழே விழுந்தன. அதிகாரிகள் பிடித்தார்கள். யூசுஃப் அஹமத் என்ற பெயரில் சென்றிருந்த அவர் தனது உண்மையான பெயர் யாகூப் மேமன் என்ற உண்மையை, தான் பிடிபட்ட உடனேயே வெளிப்படுத்தினார். ரகசிய ஏற்பாட்டின்படி 48 மணி நேரத்துக்குள் அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். சிபிஐ தரப்பு கூறும் விளக்கம் சற்றே மாறுபடுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் யாகூபின் பெட்டியில் துப்பாக்கி போன்ற ஏதோ ஒன்றைக் கண்டதாகவும் அதனால் பெட்டியைத் திறந்துகாட்ட அவர்கள் கேட்டதாகவும் அப்போதுதான் பாஸ்போர்ட்டுகள் சிதறி விழுந்தன என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட பிறகு, நேபாள எல்லைக்கு அருகே யாகூப் விடப்பட்டார். தனி விமானம் ஒன்றில் அங்கிருந்து புதுடெல்லி அழைத்துவரப்பட்டார். புதுடெல்லி ரயில் நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஏதும் தன் வாழ்க்கையில் நிகழவேயில்லை என்று தான் எழுதிய கடிதமொன்றில் யாகூப் தெரிவிக்கிறார்.
வெகு விரைவில் யாகூப் எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டார். சில வாரங்களுக்குள், யாகூப் மேமனின் உதவியோடு, மேமன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரச்செய்தது சிபிஐ. யாகூப் கைதுசெய்யப்பட்டதும் மேமன் குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் அவர்களுடைய முந்தைய திட்டத்தின்படி இந்தியாவுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் துபாய்க்குச் சென்றிருந்தனர்.
பரபரப்பான ஒரு நடவடிக்கையின் மூலம் மேமன் குடும்பத்தினரை ஐஎஸ்ஐயின் கண்காணிப்பிலிருந்து சிபிஐ அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். பின்தொடரும் ஐஎஸ்ஐ ஆட்களை ஏமாற்றிவிட்டு, மேமன் குடும்பத்தினரில் எட்டுப் பேரை இந்தியாவுக்கு சிபிஐ அழைத்துவந்தது. எட்டு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளில் சில நிமிடங்களுக்குள், அதுவும் விண்ணப்பதாரர்களைச் சந்திக்காமலேயே, இந்திய விசாக்களுக்கான முத்திரை இடப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுதான் ஒற்றை நிகழ்வாக இருக்கலாம். டைகர், அயூப், அவர்களின் மனைவியர் ஆகியோர் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் திரும்பிவந்துவிட்டார்கள். ஒரு மாதக் குழந்தை ஜுபைதாவைக் கைகளில் ஏந்திய ராஹினும் சில நாட்களுக்குப் பிறகு அவர்களோடு சேர்ந்துகொண்டார்.
மன்னிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையில்
ஒட்டுமொத்த நடவடிக்கையும் சாத்தியமானது ஒரே ஒரு மனிதரின் அசாத்தியமான துணிவாலும் உறுதியாலும்தான்: அவர்தான் யாகூப் மேமன். கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத இந்தப் பணியை நிறைவேற்றியதற்குப் பரிசாகத் தண்டனைக் குறைப்பும் மன்னிப்பும் கிடைக்கும் என்று யாகூப் எதிர்பார்த்தார். ஆனால், அரசு அவர் மீது தாக்குதல் நிகழ்த்த ஆரம்பித்தது. சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ‘என்கவுன்ட்டர்’ செய்யப்போகிறோம் என்று சொல்லி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கும்கூட ஒரு முறை அழைத்துப்போயிருக்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சியிலும், ஆரம்பத்தில் தன்னைக் கையாண்ட சிபிஐ அதிகாரிகளிடமும் சொல்லியவற்றைத் தவிர, சொல்வதற்கு யாகூபிடம் வேறு எதுவும் இல்லை.
தண்டனை நிறுத்திவைக்கப்படும் என்று அவர் எதிர்நோக்கிக்கொண்டிருந்தார். வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் ஆண்டுகளாகின, ஆண்டுகள் தசாப்தங்களாகின. இப்போது அவர் தூக்கு மேடையில் நிற்கிறார். ஒட்டுமொத்த விசாரணையிலும் பெரிய இழப்பு யாகூபுக்கு என்பதுதான் இதில் முரண்பாடான விஷயம். இந்திய விசாரணை முகமைகளுக்கு ஏராளமான ஆதாரங்களை அவர் கொடுத்து உதவியிருக்கிறார். அதனாலேயே, இந்தத் திட்டத்தின் மூளை என்று கடைசியில் ஆக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறை டைகர் மேமனும் யாகூப் மேமனும் அனல்பறக்க விவாதித்தபோது, டைகர் மேமன் யாகூபிடம் சொல்லியிருக்கிறார், “காந்தியவாதியாக இந்தியாவுக்கு நீ போகிறாய், ஆனால் கோட்சேவாக நீ இந்தியாவில் தூக்கிலிடப் படுவாய்”. இதற்கு யாகூப் மேனன் இப்படிப் பதிலடி கொடுத்தார், “நீ சொன்னது தவறு என்பதைக் கடைசியில் நான் நிரூபிப்பேன்.”
இந்த உலகில் டைகர் மேமன்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுவதும் யாகூப்களெல்லாம் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுவதும்தான் பெரும் துயரம்!
- எஸ். ஹுஸைன் ஜைதி, புலனாய்வுப் பத்திரிகையாளர், மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றிய ‘பிளாக் ஃபிரைடே’ புத்தகத்தின் ஆசிரியர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

thanks : http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7480529.ece?homepage=true

சனி, 11 ஜூலை, 2015

நாசிக் நகர் கும்பமேளாவிற்காக 8 லட்சம் ஆணுறைகள் விநியோகம்: திடுக்கிடும் தகவல்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் ஜூலை 14 அன்று கும்பமேளா நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களும் கடந்த மாதம் நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறையின் அளவை 60 விழுக்காடு குறைத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது  அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  மகராஷ்டிரா நகரமான நாசிக்கில் ஜூலை 14 மகாகும்பமேளா நடைபெற உள்ளது. இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நகரத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆகவே முன்னேற்பாடான இதர மாநிலங்கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ள வேண்டுகிறோம் என்று கூறுயிருந்தது. 
 
அதே நேரத்தில் நாசிக் நகருக்கு அருகில் உள்ள பெருநகரங்களான மாலேகாவ் சிரிடி சங் கம்னேர் கோபர்காவ் உமர்காவ் போன்ற நகரங்களில் பலமடங்கு ஆணுறைகள் வாங்கி இருப்பு வைத்தனர். எல்லாவற்றையும்விட மகாராஷ்டிர அரசு பாலியல் தொற்றுநோய் தடுப்புத் துறை வழக்கத்திற்கு மாறாக 8 லட்சம் ஆணுறைகளை நாசிக் மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்க அனுப்பியுள்ளது.   
 
வடமாநிலங்களில் சில ஆண்டிற்கு ஒருமுறை நாசிக், அலகாபாத், அரித் துவார் போன்ற நகரங்களில் நடக்கும் கும்பமேளா விழாவில் லட்சக்கணக்கான நிர்வாண சாமியார்கள் ஒன்று கூடுவார்கள். இவர்கள் கங்கையிலும், திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலாகாபாத் நகரத்திலும் கோதாவரி நதி துவக்க இடமான நாசிக்கிலும் கூடுவார்கள். லட்சக்கணக்கான அம்மணச்சாமியார்கள் ஒன்று சேரும் போது பல விதங்களில் பிரச்சனை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மகராஷ்டிரா பாலியல்நோய் தடுப்புத்துறை கூறியுள்ளது.
 
கும்பமேளா நடக்கும் நிலையில், அதிகளவில் காண்டம்கள் வரவழைக்கப்படுவது விழா அமைப்பாளர்களை அதிர வைத்துள்ளது. சாமியார்கள் அதிக அளவு கூடும் நிலையில், இப்படி காண்டம்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது தவறான முன்மாதிரியை ஏற்படுத்தி விடும் என்று சாதுக்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனராம்.
 
2013 ஆம் ஆண்டு அலகாபாத் நகரில் நடந்த கும்பமேளாவிற்குப் பிறகு வட உத்தரப்பிரதேசத்தில் மாத்திரம்  4 லட்சத்திற்கு அதிகமாக பாலியல் நோய் தொடர்பான நோயாளிகள் அரசு மற்றும் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

source :http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/nashik-kumbh-mela-comdoms-distribution-hindu-naked-priest-maharashtra-115071000028_1.html

வியாழன், 4 ஜூன், 2015

மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!



இதுவும் ஒரு சாதனைக் கதைதான். மோடியின் குஜராத்தில், எல்லையோர சிறு நகரமான தாரட்டிலிருந்து அகமதாபாத் நோக்கி பிழைப்புக்காகக் குடிபெயர்ந்த ஒரு ஜவுளி வியாபாரக் குடும்பத்தின் கதை. ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சாமானியனின் கதை. மோடியின் தோழர் கௌதம் அதானியின் கதை.
1988-ல் தொடங்கப்பட்ட அதானி குழுமம் எந்தெந்தத் தொழில்களிலெல்லாம் இறங்கி வெறும் 27 ஆண்டுகளுக்குள் எப்படிக் கிட்டத்தட்ட 28 நாடுகளில் கிளை பரப்பி நிற்கிறது என்பது ஒரு பெரும் வரலாறு. அதை அப்படியே இங்கே விவரிப்பது சாத்தியம் இல்லை. எனினும், ராகுல் காந்தியின் கூற்றுப்படி, “குஜராத்தில் மோடி ஆண்ட 2002-2014 காலகட்டத்தில் மட்டும் ரூ. 3,000 கோடியிலிருந்து ரூ. 40,000 கோடியாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி?” என்ற கேள்விக்கு, பின்னாளில் ‘ஃபோர்ப்ஸ்’ வெளியிட்ட ஒரு கட்டுரை பதிலுக்கான திசையைக் காட்டியது. மோடியின் ஆட்சியில் கட்ச் வளைகுடா பகுதியில் மட்டும் அதானி குழுமத்துக்கு 7,350 ஹெக்டேர் 30 வருஷக் குத்தகைக்கு அளிக்கப்பட்டதையும் அப்படி அளிக்கப்பட்ட நிலத்தைக் கிட்டத்தட்ட 15 மடங்கு அதிக தொகைக்கு ‘இந்தியன் ஆயில்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதானி குழுமம் உள்குத்தகைக்கு விட்ட கதையெல்லாம் அந்தக் கட்டுரை சொன்னது. இடையிடையே வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கைகளும் மோடி அரசு பெருநிறுவனங் கள் மீது, அதானி குழுமத்தின் மீது காட்டிய பாசத்தையும் அதீத சலுகைகளையும் கூறின. ஆக, அம்பானியின் கதைபோல அதானியின் கதையும் ஒரு வெற்றிக் கதை!
பலரும் மறந்த வெற்றி அத்தியாயம்
இந்த வெற்றிக் கதையில் மோடியின் முதலாண்டு ஒரு அற்புதமான அத்தியாயம். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பலரும் மறந்துவிட்ட அத்தியாயம். உண்மையில், அகமதாபாத்திலிருந்து டெல்லி நோக்கி மோடி நகரப்போகிறார்; பாஜகவின் வேட்பாளர் அவர்தான் என்று அறிவிக்கப்பட்டதுமே அந்த அத்தியாயம் புயல் வேகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானியின் மூன்று நிறுவனங்களின் மதிப்பும் - அதானி என்டர்பிரைஸஸ், அதானி போர்ட் அண்ட் செஸ் லிமிடெட், அதானி பவர் - 85.35% வளர்ச்சி கண்டன. சென்செக்ஸ் வெறும் 14.76% வளர்ச்சி கண்ட காலகட்டம் அது. தேர்தல் களத்தில் அதானி விமானத்தில் பறந்து மோடி முந்த முந்த... பங்குச்சந்தையில் அதானி குழுமம் மேலே மேலே போனது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில், தன் நண்பர் மோடியைப் போலவே மிகப் பெரிய சாதனை ஒன்றைச் செய்தார் அதானி. அன்றைய தினம்தான் அவருடைய ‘அதானி போர்ட்ஸ்’ நிறுவனம், ஒடிஸாவில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ‘தாம்ரா போர்ட்’ துறைமுகத்தை ரூ.5,500 கோடிக்கு வாங்கியது. டாடா ஸ்டீல் மற்றும் எல்&டி நிறுவனங்களுக்குச் சொந்தமான ‘தாம்ரா’ துறைமுகம் கிழக்கு மாநிலங்களின் தாதுப் பொருட்களைக் கொண்டுசெல்லும் மிக முக்கியமான மையம். அரசுக்குச் சொந்தமான மேற்கு வங்கத்தின் ஹல்தியா துறைமுகம் மற்றும் ஒடிஸாவின் பாரதிப் துறைமுகம் ஆகியவற்றுக்குச் சரியான போட்டியாக விளங்கக் கூடியது. 2005-ல் ‘ஸ்கில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனத்திடமிருந்து குஜராத்தில் உள்ள பைபவ் துறைமுகத்தை பெருந்தொகைக்கு ‘ஏபிஎம் டெர்மினல்ஸ் பிவி’ நிறுவனம் வாங்கியதற்குப் பிறகு, துறைமுக வணிகத்தில் நடந்த மிகப் பெரிய வணிகம் இது. அதைவிடவெல்லாம் முக்கியம், அதானியின் நீண்ட நாள் கனவு - காத்திருப்பு அது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் பெரிய அளவில் வணிகம் செய்வதற்குச் சரியான மையம் அது என்பது அவருடைய வியூகம். அதானி குழுமம் ஏற்கெனவே குஜராத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தனியார் துறைமுகமான ‘முந்த்ரா’ உட்பட 5 பெரிய துறைமுகங்களை நிர்வகிக்கிறது. ‘தாம்ரா’ துறைமுகத்தை வாங்கியிருப்பதன் மூலம், 2020 வாக்கில் 200 மில்லியன் டன் கையாளும் இலக்கை எட்ட முடியும்; அதன் மூலம் துறைமுகத் தொழிலில் அசைக்க முடியாத இடத்துக்குச் செல்ல முடியும் என்பது அதானியின் கணிப்பு.
அடுத்த மூன்று மாதங்களில், உடுப்பியிலுள்ள ரூ. 6,000 கோடி மதிப்புள்ள 1,200 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை ‘லான்கோ இன்ஃப்ரா’ நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கியது. அடுத்த மூன்று மாதங்களில், ரூ. 4,200 கோடி மதிப்புள்ள 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை ‘அவந்தா’ நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கியது. இதன் மூலம் 11,040 மெகாவாட்டாக அந்நிறுவனத்தின் மின் உற்பத்தித் திறன் உயர்ந்தது. நாட்டின் மிகப் பெரிய தனியார் மின் உற்பத்தியாளர் எனும் கனவை அதானி நனவாக்கிக்கொண்டார். “அடுத்து 2020-க்குள் 20,000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அதானி குழுமம் அடையும்” என்றார். இதற்கிடையிலேயே செப்டம்பரில் இன்னொரு சாதனையையும் அவர் படைத்தார். இந்தியாவின் ‘டாப் 10 பணக்காரர்கள்’ பட்டியலில் நுழைந்தார். அவருடைய சொத்து 152% வளர்ந்திருப்பதாகச் சொன்னது ‘ஹுரூம்’ ஆய்வறிக்கை.
பயணத் தோழர்
மோடியின் ஓராண்டு வெளிநாட்டுப் பயணங்கள் நாம் அறியாதவை அல்ல. அவற்றில் பெரும்பாலான பயணங்களில் அதானிக்குக் கட்டாயம் இடம் உண்டு. ஐ.நா. சபையில் மோடி உரையாற்றிக்கொண்டிருந்தபோதும் சரி, ஜி-20 மாநாட்டுக்கு மோடி சென்றிருந்தபோதும் சரி... அதானி அங்கே இருந்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலான பயணங்களில் அவருடைய இருப்பை மோடி அரசு வெளியிட விரும்புவதில்லை. உதாரணமாக, பிரான்ஸ் பயணத்தின்போது இருதரப்புப் பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்றதை பிரெஞ்ச் அரசின் செய்திக்குறிப்பு சொன்னது; இந்தியத் தரப்போ மூடி மறைத்தது. முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி கொடுத்த விருந்தில்கூட அவர் பங்கேற்றதாகச் சொன்னார்கள். கேட்டால், “அதானி அதிகாரபூர்வமாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் பயணங்களையும் நிகழ்ச்சிகளையும் பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்?” என்று கேட்டிருக்கிறார்கள் நம் அதிகாரிகள். கூடவே, “இதென்ன புதிதா? மோடி முதல்வராக இருந்தபோதே சிங்கப்பூர், சீனா, ரஷ்யா என்று உடன் சென்றவர்தானே அதானி” என்றிருக்கிறார்கள்.
அதானியின் ஓராண்டுப் பயணத்தில் முக்கியமான அடுத்த மைல்கல் கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தம். மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின்போது பேசி முடிக்கப்பட்ட பேரம் இது. உலகின் பெரும் திட்டங்களில் ஒன்று என்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் அதானியின் இந்தத் திட்டத்துக்கு ஒரு பில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட ரூ. 6,396,54,50,000) கடனாக அளிக்கவிருப்பதாக அறிவித்தது பாரத ஸ்டேட் வங்கி. ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலின் சரிவையும், நிலக்கரி விலையில் ஏற்பட்ட 50% சரிவையும், சுற்றுச்சூழல் காரணங்களையும் சுட்டிக்காட்டி சிட்டி வங்கி, டாய்ச்சு வங்கி, ராயல் வங்கி, எச்எஸ்பிசி, பார்கிளேய்ஸ் எனப் பல பன்னாட்டு வங்கிகள் கடன் வழங்க மறுத்த திட்டம் இது. சர்வதேச வங்கிகளெல்லாம் மறுத்த ஒரு திட்டத்துக்கு, பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கும் முடிவெடுக்க என்ன காரணம்?
இந்தக் கேள்வியை எதிர்க் கட்சிகள் கேட்டன. மாநிலங் களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் வெளிப்படையாகவே பல கேள்விகளை எழுப்பினார். பிரதமர் மோடியும் ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் அதானியும் சந்தித்த விருந்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார். கூடவே, சங்கடமான இன்னொரு கேள்வியையும் அவர் எழுப்பினார். “நிலக்கரியை இந்தியா இறக்குமதிசெய்வது அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நின்றுவிடும் என்று நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். ஆனால், அதானியின் ஆஸ்திரேலியத் திட்டப்பணி மூலம் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுக்கு ஏற்றுமதிசெய்யப்படும் என்கிறார்களே எப்படி?” என்றார். “தொழில்களுக்கு உகந்த ஒரு அரசாக மோடி அரசு இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; ஆனால், தொழிலதிபர்களுக்கான அரசாக - அணுக்கம்சார் முதலாளித் துவ அரசாக - இருப்பது எங்களுக்குப் பிரச்சினை” என்றார்.
அரசிடம் பதில் இல்லை. இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா என்கிறது.
அதானி குழுமத்தின் சாதனைக் கதைகள் தொடர்கின்றன!
சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

source : http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-365-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7281480.ece?homepage=true&theme=true

செவ்வாய், 11 நவம்பர், 2014

மவுலானா எனும் மகத்தான இந்தியர்



நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல்
பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.” ஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.
பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஆஸாத். 1906-ல் டாக்காவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் தொடக்க மாநாட்டில் கலந்துகொண்டார். எனினும் முஸ்லிம் லீக்கின் மிதவாதப் போக்கு அவரை ஈர்க்கவில்லை. எனவே, 1907-ல் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1913-ல் ஹிஸ்புல்லா என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1920-ல் மகாத்மா காந்தியைச் சந்தித்த பின்னர்தான், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்திலும், கிலாபத் இயக்கத்திலும் முகம்மது அலி ஜவுகருடன் இணைந்து செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். காங்கிரஸ் இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஆஸாத் பங்குகொண்டார். ஆறு முறை கைது செய்யப்பட்ட அவர், தன்னுடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.
நீதிமன்றத்தில் கர்ஜனை
1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 11.01.1922 அன்று அலிப்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜரான அவர், ஆக்ரோஷமான வார்த்தை களில் வாக்குமூலம் அளித்தார். ஆஸாத் பேசியதிலிருந்து சில வரிகள்:
“நீங்கள் எனக்கு உச்சபட்சத் தண்டனை அளியுங்கள். அது எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் நான் பதற மாட்டேன். தீர்ப்பை எழுதும்போது உங்கள் கரங்கள் நடுங்கலாம். ஆனால், உங்கள் தீர்ப்பைச் செவிமடுக்கும்போது எனது இதயம் நடுங்காது. இது உறுதி. எனக்குக் கிடைக்கவிருப்பது சிறைக்கொட்டடி எனில், உங்களுக்கு நீதித் துறையின் உயர் பதவிகளும் மரியாதைகளும் கிடைக்கும். இதே நிலை தொடர என்னை அனுமதியுங்கள்; நீங்கள் நீதிபதியாகவும் நான் குற்றவாளி யாகவும். இந்த நிலை சில காலம் தொடரும். அதன் பிறகு நாம் மற்றொரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம். அங்கே இறைவனே நீதிபதியாக வீற்றிருந்து தீர்ப்பு வழங்குவான். அதுதான் இறுதித் தீர்ப்பாகும்.” அவரது வாக்குமூலத்தைக் கேட்டு நீதித் துறை நடுவர் நடுநடுங்கிப்போனதாகக் கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு, அஹமத் நகர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆஸாத். அவருடன் நேருவும் இருந்தார். 3 ஆண்டுகள் நீடித்த இந்தச் சிறைவாசத்தின்போது அவரது மனைவி சுலைஹா பீவியும், சகோதரி ஹனீபா பேகமும் அடுத்தடுத்த ஆண்டு களில் மரணமடைந்தார்கள். இந்த இருவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொள்ள ஆங்கில அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. 1945-ல் விடுதலை பெற்ற பின்னரே இருவரின் கல்லறைகளுக்கும் சென்று மலர் தூவி ஃபாத்திஹா ஓதினார் ஆஸாத்.
எழுச்சியூட்டும் எழுத்து
மேடைகளில் எழுச்சியுடன் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்த ஆஸாத் சிறந்த எழுத்தாளரும்கூட. ‘சமந்தார்’, ‘மதீனா’, ‘முஸ்லிம் கெஜட்’, ‘ஹம்தர்த்’ ஆகிய உருது இதழ்களில் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கண்டித்துக் காரசாரமாக எழுதினார். பின்னர், ‘அல்ஹிலால்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, அதில் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்த இதழைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஆங்கில அரசு அவருக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது. பத்திரிகைக்கு அதிகப் பிணைத்தொகை செலுத்துமாறு அரசு அவருக்கு ஆணையிட்டது. இதே காலகட்டத்தில் ‘அல்பலாக்’ என்ற பெயரில் மற்றொரு பத்திரிகையையும் தொடங்கினார் ஆஸாத். அவரது எழுத்தும் பேச்சும் உணர்ச்சிபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது.
பிரிவினையை ஏற்காதவர்
1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக ஆஸாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் எம்.என்.ராய்) 1946 இறுதி வரை அப்பதவியில் இருந்தார். இறுதி வரை பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்களால்கூடப் பிரிவினையைத் தடுக்க முடியாமல் போனபோது, செய்வதறியாது கை பிசைந்து நின்றார்.
பிரிவினைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவரது இல்லத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தார்கள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் இந்தக் கலவரங்களை ஒடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஆஸாத் கருதினார். இதுபற்றி தனது மனக்குமுறல்களை ‘இந்திய விடுதலை வெற்றி’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஆஸாத். அந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘நண்பரும் தோழருமான ஜவாஹர்லால் நேரு அவர்களுக்கு’.
பாகிஸ்தான் எதிர்ப்பு
சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார் ஆஸாத். ராஞ்சி சிறையில் இருந்தபோது திருக்குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, ஜின்னாவின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை முஸ்லிம் விரோதி எனத் தூற்றியபோதிலும் அவர் கலங்கவில்லை. தனது பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆஸாத், கல்வி முறையில் பல அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கிராமப்புற ஏழை மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கிட முன்னுரிமை அளித்தார். முதியோர் கல்விக்கு வித்திட்டார்.
பல்கலைக்கழகக் கல்விக்குழு, இடைநிலைக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவை அவரது பதவிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தேசிய ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டதும் அவரது பதவிக் காலத்தில்தான்.
2.2.1958-ல் அவர் மரணமடைந்தபோது, அரசு கடனில் வாங்கிய கார் ஒன்றைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியான வேறு எந்தச் சொத்தும் அவரிடம் இல்லை. சொத்துக்கள் என்று அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை. வங்கிக் கணக்கு இல்லாமல், அசையும், அசையாச் சொத்துக்கள் எதுவும் இல்லாமல் ஆஸாத் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்திவந்தவர் ஆஸாத். ‘அல்பலாக்’ இதழில் அவர் இப்படி எழுதினார்: “சுதந்திரம் கிடைப்பதற்குத் தாமதமானாலும் பரவாயில்லை. இந்தியத் தாய்க்கு ஒரு நிமிடம்கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை.” சாதி, மத, இன மோதல்கள் இல்லாததும், அறிவில் உயர்ந்து விளங்குவதுமான ஒரு இந்தியாதான் ஆஸாதின் கனவு இந்தியா. அந்த இந்தியாவை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆஸாதை நாம் பெருமைப்படுத்துகிறோம்.
- சேயன் இப்ராகிம், அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ஓய்வு).
source : http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article6584323.ece?widget-art=four-rel

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

இந்து சகோதரர்களே எச்சரிக்கை ! எச்சரிக்கை ! !



இந்து சகோதரர்களே எச்சரிக்கை ! எச்சரிக்கை ! !
****************
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்க்காக இந்துக்களின் வீடுகளை எரித்த பா ஜ க தலைவர் கைது செய்யப்பட்டார்.
****************** 
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்க்காக இந்துக்களின் வீடுகளை பா ஜ க தலைவர் ஒருவரே எரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து
அந்த பா ஜ க தலைவர் உட்பட 36 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
குஜராத் மாநிலம் பரோடா நகர பாரதிய ஜனதா தலைவராக இருப்பவர் மனிஷ் வாக், இவர் கடந்த சில நாட்களாக இங்கு வசிக்கும் முஸ்லிம் மக்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் கலவரம் ஏற்ப்பட்டது இதையொட்டி சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரோடா நகரில் நவபுரா பகுதியில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த சிலருடைய வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது..
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி மனிஷ் வாக் உள்பட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 36 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்து மக்கள் வீடு எரிக்கப்பட்ட வழக்கில் பாரதீய ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டது சில சந்தேகங்களை ஏற்ப்படுத்தி உள்ளது கலவரத்தை பெரித்தாக்க இவரே இந்து மக்களின் வீடுகளுக்கு தீ வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிரார்கள்.
செய்தி : தீக்கதிர் (05-10-14)
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ,தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை குறிவைத்து பேசி உள்ளநிலையில் இந்துக்களும்- முஸ்லிம்களும் இங்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சங்கபரிவார சதிகாரர்கள் அரசியல் அதிகாரத்தை அடைய எதையும் செய்வார்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான வெகு மக்கள் ஊடகங்கள் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டி கொள்ளாது.
நமது மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாக்க,
நாம் எச்சரிக்கையாக இருப்போம்!
நமது நாட்டை காப்போம் !!
ஜெய் ஹிந்த் !