புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 ஜூலை, 2014

காரைக்காலில் சங்பரிவார தீவிரவாதிகளின் ஆட்சியா ?





நேரு நகர் பள்ளிவாசல் கஞ்சி காய்ச்சும் பிரச்சனை
உண்மை நிலையும், விளக்கமும்
நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில நோன்பு கஞ்சி காய்ச்ச கடந்த 3.7.2014 அன்று காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகம் தடை விதித்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஏன் இந்த தடை ?
நேரு நகர், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் நேரு நகர் பள்ளிவாசலுக்கு பக்கத்திலேயே உள்ளது, அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதர்க்காக அந்த பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை அறிந்த ஹிந்து முன்னணி, RSS, BJP யினர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் முஸ்லிம்கள் இந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்போகிறார்கள், மேலும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலமும் (சுடுகாடு) இங்கு அமைக்க போகிறார்கள் என்ற ஒரு தவறான செய்தியை பரப்பி, இதே விஷயத்தை அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் நோன்பு கஞ்சி காய்ச்ச விட கூடாது என வலியுறுத்தி போராட்டமும் நடத்தினார்கள். காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகமும் முறையாக நேரு நகர் பள்ளிவாசல் நிர்வாகிகளிடத்தில் விசாரிக்காமல் அந்த இடத்தில் கஞ்சி காய்ச்ச கூடாது என கூறி ஏராளமான போலிசாரையும் அங்கு குவித்தனர், தகவல் அறிந்த தமுமுக மற்றும் ஒரு சில ஜமாஅத் இளைஞர்கள் அங்கு கூடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ஒன்றும் செய்ய முடியாத மாவட்ட நிர்வாகம் அரசு சமாதான கமிட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அந்த சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட நேரு நகர் ஜமாஅத் நிர்வாகிகள், தமுமுக மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் நோன்புக்காக கஞ்சி மட்டுமே காய்ச்சுகிறோம், சங்பரிவார் குறிப்பிடுவதுபோல் பள்ளிவாசலோ, முஸ்லிம்களின் அடக்கஸ்தலமோ (சுடுகாடு) அங்கு அமைக்க மாட்டோம் என தெரியப்படுத்திய பின் மாவட்ட ஆட்சியர் நீங்கள் கஞ்சி காய்ச்சி கொள்ளுங்கள், நான் சங்பரிவார் அமைப்புகளோடு பேசுகிறேன் என்று முஸ்லிம்கள் தரப்பில் கூறினார். பின்னர் சங்பரிவார் அமைப்புகளோடு பேசியபோது அவர்கள் விடாப்பிடியாக அங்கு கஞ்சி காய்ச்ச கூடாது, அந்த இடத்திற்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் மீண்டும் போராட்டம் நடத்தினர்.
அனைத்து உண்மை நிலைகளையும் தெரிந்திருந்தும் புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் சங்பரிவார்களின் பொய் கூற்றை ஏற்று முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சென்ற 3.7.2014 அன்று இரவு 9 மணிக்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முஸ்லிம்கள் கஞ்சி காய்ச்ச கூடாது என தடை விதித்து, பள்ளிவாசல் இடத்திற்கும் சீல் வைத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டு உரிமைக்காக போராடி கொண்டிருந்த முஸ்லிம்களிடத்தில் காரைக்கால் நகர காவல்துறை ஆய்வாளர் பாலசந்தர், நகர துணை ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் நடந்து கொண்ட விதமும், முஸ்லிகளின் மத உணர்வுகளை கொச்சை படுத்தும் விதமாக பேசிய பேச்சும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த புதுச்சேரி N.R .காங்கிரஸ் அரசு முழுமையாக செயல்படுகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் ஒரு உண்மையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அமைதி நகரமான காரைக்காலில் அனைத்து மதத்தினரும் மிக நெருக்கமாக அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த ஒற்றுமையை குழைக்கும் விதமாக சங்பரிவார் அமைப்புகள் ஒரு தவறான தகவலை ஹிந்து மக்கள் மத்தியில் பரப்பி அதன் மூலம் காரைக்காலின் அமைதியை குழைக்க முயல்கின்றனர். அதற்கு இந்த அரசும் ஒத்து போகிறதோ சென்ற சந்தேகம் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த ஜனநாயக நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்திலேயே முஸ்லிம்கள் நோன்பு கஞ்சி கூட காய்ச்ச தடை என்றால், ஜமாஅத்களும், சமூக சிந்தனையாளர்களும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டாமா ? தமுமுக மற்றும் ஒரு சில ஜமாஅத் இளைஞர்கள் மட்டுமே உரிமைக்காக போராடும்போது ஜமாஅத்கள் ஒதுங்கியிருப்பது ஏன் ? அல்லாஹ்வுடைய பள்ளிக்கு ஆபத்து என்றால் போராடாமல் அரசியல் விளையாட்டு தேவையா? ஜமாஅத் பெரியவர்களே, இளைஞர்களே இப்படியே விட்டால் இன்று நேரு நகர் பள்ளிவாசல், நாளை ?
சிந்திப்போம்! அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்வோம். தகவல்
Abdul Rahim

காரைக்கால் அன்சாரி facebook பக்கத்தில் இருந்து

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

முஸ்லீம் இடஒதுக்கீட்டை நிறைவேற முடியாத சூழலை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு


புதுச்சேரி, ஆக். 7: முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை நிறைவேற முடியாத சூழலை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி விட்டது என மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து பட்ஜெட்டில் அறிவித்ததில் பல்வேறு குளறுபடிகள் செய்திருப்பதன் மூலம் முஸ்லீம் இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த முடியாத சூழலை ஏற்படுத்தி, அம்மக்களை ஏமாற்றும் புதுச்சேரி காங்கிரஸ் அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

முதல்வர் வைத்திலிங்கம் பட்ஜெட்டில் முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 1 சதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 1.5 சதமும் எடுத்து அளிக்கப் போவதாக தெரிகிறது.

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்ததை ரத்து செய்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, அம்மாநில அரசு பிற்படுத்தப்பட்டோரில் உள்ள மூஸ்லீம்களை கண்டறிந்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 4 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது.

தமிழக அரசும் நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோரில் உள்ள முஸ்லீம்களை தனியாக பிரித்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது.

புதுச்சேரி அரசு இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரி முஸ்லீம் இடஒதுக்கீட்டில் குளறுபடிகளை செய்து அம்மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. முஸ்லீம் மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள போது அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 1.5 சதவீதம் எடுத்து இடஒதுக்கீடு அளிப்பது சட்டவிரோதமானது. சமூக நீதிக் கொள்கைக்கே வேட்டு வைக்கும் செயலாகும்.

கடந்த ஆண்டு முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், முஸ்லீகளுக்கு சட்டரீதியாக முறைப்படி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து எடுத்துக் கூறினோம். ஆனால், அவர் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு செயல்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரைப்படி அரசு இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. தற்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் இடஒதுக்கீடு பற்றி எந்தவித அடிப்படையும் அறியாதவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிகளை திருப்திபடுத்த வேண்டும் என்று கோஷ்டிக்கு ஒருவர் என உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களாக சமூக நீதியில் அக்கறையுள்ள, தெளிவு உள்ளவர்களை நியமிக்க வேண்டும்.

முஸ்லீம் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம். ஆனால், அதனை சட்ட ரீதியாகவும், சமூக நீதி அடிப்படையிலும் செய்ய வேண்டியது அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக அனைத்து கட்சி மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டத்தை கூட்டி முடிவு செய்ய வேண்டும்.

பிந்தங்கியுள்ள முஸ்லீம் மக்களுக்கு நீதியரசர் சச்சார் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும், பிரதமர் அறிவித்துள்ள 15 அம்ச திட்டங்களையும் நிறைவேற்ற புதுச்சேரி அரசு ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த ஆட்சேபனை ஆணையத்துக்கு அனுப்பப்படும்: முதல்வர் வைத்திலிங்கம்

புதுச்சேரி, ஆக. 7: முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த ஆட்சேபனை ஆணையத்துக்கு அனுப்பப்படும் என முதல்வர் வைத்திலிங்கம் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் பா.ம.க. உறுப்பினர் அனந்தராமன் பேசியதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டு தங்கமணி கமிஷனின் பரிந்துரையின் பேரில் தான் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமானால் 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் செய்ய முடியும். மேலும் முஸ்லிம்கள் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் தான் அடங்குவார்கள். எனவே அவர்களுக்கு பிற் படுத்தப்பட்டோர் பிரிவிலேயே உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முதல்வர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளோம். இதில் உங்களின் ஆட்சேபனையை ஆணையத்துக்கு அனுப்ப உள்ளோம். இதன் பிறகு ஆணையம் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். காங்கிரஸ் அரசு தான் முதல் முறையாக இடஒதுக்கீட்டையே அமுல்படுத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.